கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் நீதிவிசாரணையில், திமுக அரசு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது! – சீமான் குற்றச்சாட்டு

139

கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இந்நிலையில் 17-08-2022 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாணவி ஸ்ரீமதியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு உரிய நீதியைப் பெற்றுத்தர இறுதிவரை உறுதியாகத் துணைநிற்போம் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது, “மர்மமான முறையில் இறந்துபோன தங்கை ஸ்ரீமதியின் பெற்றோர் வைக்கும் கோரிக்கையும், அவர்களின் கண்ணீரும், கதறலும் தான் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையாகவும் இருந்துள்ளது. ஸ்ரீமதி இறந்து 31 நாள் கடந்துவிட்டது. ஆதாரத்துடன் பல கேள்விகளை ஊடகத்தின் வாயிலாக நாமும், ஸ்ரீமதியின் பெற்றோரும் எழுப்பியுள்ளோம். இது தற்கொலை என்பவர்கள், இதைத் தற்கொலை தான் என்று நிரூபிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிணவறைக்கு எடுத்துச்சென்ற பிறகு ஸ்ரீமதி எழுதியதாக ஒரு கடிதத்தை எடுத்து காட்டுகிறார்கள். அவள் இறந்து கிடந்தபோது சட்டை பையை முதலில் பரிசோதிக்காமல், மருத்துவமனையில் பரிசோதிக்கும்போது பார்க்காமல், பிணவறைக்கு எடுத்துச் செல்லும்போது, அவளின் அணிகலன்கள் எதுவும் இல்லாத நிலையில் கொண்டு சென்றவர்கள், பிணவறையினுள்ளே எடுத்து சென்ற பின்பு அவள் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பிப்பது எவ்வளவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது பாருங்கள்” என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், “ஸ்ரீமதி தங்கியிருந்த அறைக்குச் சென்று அவள் தாய், தந்தை பார்க்கவேண்டும் என்றபோது, எதற்கு அனுமதிக்காமல் காவலர்களைக் கொண்டு பாதுகாத்து அடைக்க வேண்டும்? ஸ்ரீமதி இறந்துவிட்டாள் என்ற செய்தியறிந்து அவளின் பெற்றோர்கள் வரும்முன், அங்கு நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்படக் காரணம் என்ன? தமிழக அரசு இதை நியாயமான முறையில் அணுகியிருந்தால், இதை ஒரு தீர்வுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இறந்துபோன நம் பிள்ளை திரும்பி வரப்போவதில்லை. ஆனால், அவள் எப்படி இறந்தால்? இது தற்கொலையா? அல்லது கொலையா? அங்கு என்ன நடந்தது? என்று நமக்குத் தெரியப்படுத்த வேண்டும். இன்னும் பல ஸ்ரீமதிகள் உருவாகிவிடாமல் இருக்க வழிவகுக்க வேண்டும். அதனால், இதை மேலும்மேலும் காலங்கடத்திக் கொண்டு செல்வது ஏற்புடையது அல்ல” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஒப்படைத்துள்ளோம் என்பது எப்படிப்பட்டது என்று பாருங்கள். சிபிசிஐடி மற்றும் காவல்துறை ஆகிய இரு துறைகளுக்கும் முதல்வர் தான் பொறுப்பு. அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை சரியில்லை என்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது, உங்கள் தலைமையிலுள்ள காவல் துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வழக்கை சிபிசிஐடி விசாரிக்க மாற்றுவது, உண்மையை வெளிக்கொண்டு வரவா? இல்லை காலம் கடத்தவா? சரி வழக்கை தான் சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டார்களே, அது விசாரித்துப் பதில் சொல்லட்டும் என்று அது வரை நாங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டுமா? காலம் கடத்த தான் இந்த விசாரிக்கும் துறை மாற்றங்கள் பயன்படுகிறது. ஒரு கேள்வி தான் நான் கேட்க விரும்புவது. ஒரே வழக்கு தான், ஆனால் இந்த இரண்டு துறைகளுக்கும் தலைவர் ஒருவரே, அது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான். சிபிசிஐடி விசாரித்து வெளிக்கொண்டுவரும் நீதியை காவல் துறையால் செய்ய முடியாதா? பள்ளி நிர்வாகத்தை எந்தக் குறையும் சொல்லக்கூடாது என்கிறார்கள். ஆனால், இப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் இந்த மரணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர்கள் தற்கொலைக்குத் தூண்டினார்கள் என்பது தான் கைதிற்குக் காரணமா? அவர்களுக்கும், இந்த மரணத்திற்கும் உள்ள தொடர்பையாவது இந்த முப்பது நாட்களில் நிரூபித்திருக்கலாமே? அவர்கள் சொல்லும் காரணம் நியாயமாக இருந்தால் ஏற்றுக்கொண்டு சென்றிருப்போமே. எப்படிப்பார்த்தாலும் இந்த மரணத்தில் தவறு நடைபெற்றுள்ளது, அதை அதிகாரத்தைக் கொண்டு மறைக்கப் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதிகாரிகள் எப்போதும் முதலாளிகளுக்கு வேலை செய்கிற ஏவலாளிகளாக இருக்கின்றார்களே தவிர, அடிதட்டு உழைக்கும் மக்களின் பக்கம் ஒருபோதும் நிற்பது இல்லை என்பதை ஸ்ரீமதியின் மரண நிகழ்வும் நிரூபிக்கிறது” என்றும் வேதனைத் தெரிவித்தார்.
மேலும், “கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று படிக்கும் மாணவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. அரசு அவ்வாறு செயக்கூடாது, அது தவறு என்று கண்டித்து அறிக்கை விடுத்துள்ளேன்.. ஸ்ரீமதியின் மரணத்திற்கு நியாயமான காரணத்தை மூன்று நாட்களில் அரசு தெரிவித்திருந்தால், இந்தக் கலவரமே நடந்திருக்காது. அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஒருவேளை இப்படியொரு கலவரம் நடக்காமல் இருந்திருந்தால், தற்போது கைது செய்துள்ள ஐந்து நபர்களைக் கைது செய்திருப்பார்களா? முதலில் பள்ளி நிர்வாகத்தின் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறியவர்கள், பிறகு அந்த நிர்வாகத்தின் ஊழியர்களை ஏன் கைது செய்துள்ளீர்கள்? மக்கள் போராடவில்லை என்றால் நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்கள். அப்போது, ஒவ்வொன்றிற்கும் போராடவேண்டும் என்கிற கட்டாயத்தை மக்களுக்கு நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள். அரசு தேர்விற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றவர்கள், படிக்கும் மாணவர்களைக் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று கைது செய்துள்ளீர்கள். இந்தக் கைது நடவடிக்கை என்பது, ஒரு தலைமுறையினருக்கு, எது நடந்தாலும் நாம் போராடவே கூடாது என்கிற எண்ணம் வருமளவிற்குக் கட்டமைக்கிறீர்கள். அநீதியை தட்டி கேட்கக் கூடாது என்று அச்சுறுத்துகிறீர்கள். ஸ்ரீமதியின் மரணத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, அதிலுள்ள உண்மையை வெளிக்கொணராமல் காலம் தாழ்த்திய அரசு குற்றவாளியா? இல்லை அதற்காகப் போராடி கலவரத்தில் ஈடுபடத் தள்ளப்பட்டவர்கள் குற்றவாளியா? இதில் அரசு மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது. உண்மையான குற்றவாளிகளை விட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய கைது நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
தொடரும் தற்கொலை மரணங்கள் குறித்த கேள்விக்கு சீமான் அவர்கள், “இங்குப் பள்ளி மாணவர்கள் மட்டும் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏறக்குறைய ஆறு காவலர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அதற்குக் காரணம் மன அழுத்தம் தான். பொதுவாக மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுகிற ஒரு போக்கு தவறானது என்பது எங்கள் நிலைப்பாடு. எல்லா இடத்திலும், பல்வேறு காரணங்களால் நம் பிள்ளைகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். ஒரு பக்கம், போதைப்பழக்கம் பெருகிக்கொண்டு போகிறது. அண்மையில் ஒரு மாணவன் போதையேற்றிக்கொண்டு, சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வதைக் கண்டோம். அது அவருடைய குற்றம் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரின் குற்றம். ஏனென்றால், இந்தச் சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்டது. போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதனால் மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதை விற்பவர்கள் யார்? அந்த விற்பனை நடைபெறுவதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? அதனால், அந்த மாணவனை மட்டும் எப்படிக் குறை சொல்ல முடியாதோ, அதுபோல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் புறச்சூழலையும், அகச்சூழலையும் நாம் உருவாக்கி விட்டுவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அவர்களை மட்டும் குறைகூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை. குற்றவாளியைப் பிடித்துத் தூக்கில் போடுவதைவிட, அவன் குற்றம் செய்யக் காரணமாக இருந்த காரணத்தைக் கண்டறிந்து தூக்கிலிடவேண்டும் என்று ரூசோ சொல்வது போல, நம் பிள்ளைகள் இந்தச் செயலைச் செய்வதற்கு, தற்கொலை முடிவுகளை எடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை வேரோடு களையவேண்டியது தான் இதற்குச் சரியான தீர்வாக இருக்க முடியும்” என்று பதிலளித்தார்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஇலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட நெல்லை கண்ணன் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திதூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்