நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

300

பொருள் இல்லார்க்கு இல்லை இவ்வுலகம்!
– ‘தமிழ்மறையோன்’ திருவள்ளுவப் பெருமகனார்.

‘சேமிப்பைப் புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமை அடைய முடியாது!
ஆபிரகாம் லிங்கன்

என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்!

தமிழ் மண்ணிற்கும், மக்களுமான தன்னலமற்ற தூய அரசியலை முன்னெடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எனும் ஒரு மாபெரும் அரசியல் படையைக் கட்டி எழுப்பி வருகிறோம். இப்பெரும்போரில் அறப்போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியை ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைக்கப் பாடுபாட வேண்டியது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுப் பெருங்கடமையாகும். ‘தன்னிகரில்லா தமிழ்த்தேசிய அரசு அமைத்தல்’ எனும் இலட்சிய இலக்கினை நோக்கிய பயணத்தில் தொடர் கருத்தியல் பரப்புரையும், தொய்வில்லாத களப்பணியும் செய்வதற்குப் பொருளாதாரத் தன்னிறைவு என்பது மிகமிக இன்றியமையாத காரணியாகிறது. ‘விடுதலை வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம், பொருளாதார வாழ்வில் தன் சொந்தக்கால்களில் நிற்க வேண்டும்’ எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது கூற்றுக்கிணங்க, பொருளாதாரத்தில் வலிமையடைய வேண்டியது பேரவசியமாகிறது.

அத்தகைய பொருளாதார வலிமையை அடைவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு, ‘துளி’ எனும் தற்சார்புத் திட்டத்தை ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து வருவது தாங்கள் அறிந்ததே! ஆனால், துளிதிட்டத்தின் குறைந்தப்பட்ச இலக்கான மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் என்பதில் 10 விழுக்காடுகூட இன்றளவும் எட்டப்படவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவாகும். இருப்பினும், ஒவ்வொருமுறையும் ஏற்படும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளித்துக்கொண்டே, சீரிய திட்டமிடலுடனும், ஒருங்கிணைந்த களப்பணியாலும், திரள்நிதி திரட்டல் மூலமும் தொடர்ச்சியாகப் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கலை இலக்கிய விழாக்கள், கருத்தரங்கங்கள், முன்னோர் ஈகம் போற்றும் நிகழ்வுகள், துயர் துடைப்பு உதவிகள், கட்சி உள்கட்டமைப்பிற்கான கலந்தாய்வுகள் எனப் பல்வேறு கட்சி நிகழ்வுகளை தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் தடம் பதிக்கும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுத்துவருகிறோம். இதன்மூலம் நமது கட்சியையும், நமது உயரிய கொள்கைகளையும், தொலைநோக்குத் திட்டங்களையும் பல இலட்சக்கணக்கான பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்த்துள்ளோம்.

ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் வகையிலான ஊடகவெளிச்சமோ, சொந்த ஊடகங்களோ, அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் விளம்பரம் செய்வதற்கான பெரும் பொருளாதார வலிமையோ இல்லாத எளிய மக்களாகிய நாம், படிப்படியாக உயர்ந்து, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.9% வாக்குகளைப் பெற்று தமிழ்நாடு அரசியல் களத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து, மாபெரும் தாக்கத்தையும், மாற்று அரசியலுக்கான புரட்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளோம். உறுதியான கொள்கைப்பிடிப்போடு, மண்ணுக்கும் மக்களுக்கும், உண்மையும் நேர்மையுமாக இருந்து, மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்றதுதான் இச்சீர்மிகு உயரத்தை நாம் அடைவதற்கு முதன்மை காரணியாகும்.

இதேபோன்று, கட்சி வளர்ச்சிப்பணிகளை முன்னெடுப்பதன் மூலம் தொடர்ச்சியாக மக்களிடத்தில் நமது கட்சியைக் கொண்டுசேர்க்க வேண்டியதும், அதற்கான பொருளாதாரத் தேவையை நிறைவு செய்யவேண்டியதும் நம் அனைவரின் பெருங்கடமையாகும். எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் அதற்கான முன்நகர்வுகளையும், முன்னேற்பாடுகளையும் செய்யவும், மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாகக் கலந்தாய்வுகள், புதிய தொகுதி அலுவலகங்கள் தொடங்குதல், புலிக்கொடியேற்றும் நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள், நேரடி கள ஆய்வுகள் உள்ளிட்ட கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் மிகுதியான பொருளாதாரம் என்பது இன்றியமையாத காலத்தேவையாகிறது.

எனவே, நமது கட்சியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் நிதிநெருக்கடியைச் சரிசெய்வதற்காகத் தொடங்கப்பட்ட, ‘துளி’ எனும் தற்சார்புத் திட்டத்தின் குறைந்தப்பட்ச இலக்கான மாதந்தோறும் ‘1000 பேர் 1000 ரூபாய்’ எனும் செயற்திட்டத்தை 100 விழுக்காடு எட்டசெய்வதற்கு நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பேரவசியமாகிறது.

அதன்பொருட்டு, மாதந்தோறும் 1000 ரூபாயை கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கக்கூடிய நாம் தமிழர் உறவுகள், புரவலர்கள், கொடையாளர்கள் என
ஒரு சட்டமன்றத் தொகுதிக்குக் குறைந்தபட்சம் 10 பேரையாவது துளி திட்டத்திற்குப் பரிந்துரைக்குமாறு தொகுதிப் பொறுப்பாளர்களை வலியுறுத்துகிறேன். இத்திட்டத்திற்கென வழங்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை நிரப்பி தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் / மின்னஞ்சல் (ravanankudil@gmail.com) வாயிலாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்பெரும்பணியை, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பாசறைகளின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுத்த வேண்டுமெனவும், அவர்களுக்கு நாம் தமிழர் உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பொருளாதார வலிமை கொண்ட இனமானத்தமிழர்களும், தமிழ்த்தேசிய அரசியல் பற்றாளர்களும், மாற்று அரசியலை விரும்பும் சனநாயகவாதிகளும் ‘துளி’ திட்டத்திற்குப் பக்கத்துணையாக நின்று, நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தகர்க்க தங்களால் இயன்ற ஒரு சிறுதொகையை மாதந்தோரும் ‘துளி’ திட்ட நிதியாக வழங்கவும், தங்களைப்போலப் பொருளாதார வலிமை கொண்டவர்களை இத்திட்டத்தில் இணைத்து கட்சியின் வளர்ச்சிக்குத் துணைநிற்கவும் வேண்டுமென உள்ளன்போடும், உரிமையோடும் பேரழைப்பு விடுக்கிறேன்.

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இந்த வருமானம், காக்கும் நம் இனமானம்!

இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

புரட்சி வாழ்த்துகளுடன்,

  • சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு சீமான் கேள்விகள்
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்