டெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்! – சீமான் கோரிக்கை

218

டெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி

கஜா புயல் பேரழிவினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறிவருகிறார். முதல் நாளான நேற்று (20-11-2018) புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் முகாம், பேராவூரணி, குருவிக் கரம்பை, அதிராமப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டார். இரண்டாம் நாளான இன்று (21-11-2018) தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு, மடத்துவாசல், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

இதற்கிடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் கூறியதாவது,

கஜா பெரும்புயல் ஏற்படுத்தியிருப்பது மிகப்பெரிய பேரழிவு. காவிரி நதிநீர் சிக்கலால் மாற்று பயிராகத் தென்னையை நம்பியிருந்த டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் 15 முதல் 50 ஆண்டுகால மரங்களை இழந்து பரிதவிக்கின்றனர். இதுவரையில் அதிகாரிகளோ அமைச்சர்களோ நேரிடையாக ஆய்வு செய்து இழப்பை முழுமையாக மதிப்பிடவில்லை! பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவில்லை. குடிக்கத் தூயக் குடிநீர், உணவு, குழந்தைகளுக்குப் பால் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு, சாலை, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்திக் கூடக் கிடைக்காத நிலையில் உள்ளனர். யாரேனும் வந்து உதவினால் தான் சாப்பாடு என்ற நிலைக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு கஜா புயல் பேரழிவை ஒரு இடராகவே கருதவில்லை; முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது.

கேரளாவில் பெருவெள்ளம் வந்தபோது ஊடகங்கள் #SaveKerala என்று பெரியளவில் பரப்புரை செய்தது பாராட்டுக்குரியது. அதைப்போலவே நம் மாநிலத்து மக்கள் கஜா பெரும்புயலால் பாதிக்கபட்டு நிற்கதியாய் நிற்கும்போது ஏன் யாரும் கைகொடுக்கவில்லை; கள ஆய்வு செய்து செய்தியை முழுமையாகச் சொல்வதில் கூட ஏன் இவ்வளவு தயக்கம்.

அதிகாரிகளோ அமைச்சர்களோ பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக இதுவரை நேரில் பார்வையிடவில்லை; தாங்கமுடியாத துயரத்தோடும் ஆட்சியாளர்களின் மீது கொந்தளிக்கும் கோவத்தோடும் மக்கள் இருப்பதன் காரணம் என்ன? பாதிக்கப்பட்ட எங்களை உடனடியாகப் பார்க்காமல் இந்த அரசு கைவிட்டுவிட்டது என்ற நம்பிக்கை இழப்பு தான்.

கவலைதோய்ந்த முகத்தோடும் கண்ணீரோடும் நம் தாய், பாட்டி வயதுடையவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு எங்களுக்கு எதுவுமில்லை இப்படித் தெருவில் நிற்கிறோம் என்று கதறும்போது ஏற்படுகின்ற வலியை சொல்லில் அடக்கமுடியாது. அவர்களின் வலியையும் வேதனையையும் களத்தில் இருக்கும் ஊடகங்களாவது கொண்டுபோய்ச் சேருங்கள்.

பெரிய தென்னந்தோப்புகளைச் சாகக்கொடுத்துவிட்டு மீளமுடியா துயரினால் வீட்டைவிட்டே யாரும் வெளியில் வரவில்லை. இது தோப்புகாரர்களுக்கு மட்டுமேயான வாழ்க்கையா? தேங்காய் வெட்டுபர்கள், சேகரிப்பவர்கள், நார் பிரிப்பவர்கள், தட்டி பின்னுபவர்கள், ஈக்குக் கிழிப்பவர்கள் என்று ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

கஜா பெரும்புயலால் தமிழகத்தின் வளமான பாதி நாடு அழிந்துவிட்டது என்றே கூறலாம். 7 மாவட்டங்களும் வளமான மாவட்டங்கள். இதிலிருந்து தான் சோறும் நீரும் வந்தது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். ஆனால் மத்திய அரசு இதை ஒரு இழப்பாகவே கருதவில்லை. இதில் மத்திய அரசுக்கு GST வேறு நாங்கள் கட்டவேண்டும். வாய்க்கும் வயிற்றுக்கும் கஞ்சி இல்லை; மாற்றி உடுத்திக்கொள்ளத் துணியும் இல்லை; இடிந்த கூரையை இழுத்துக்கட்ட முடியவில்லை எப்படி GST வரிக் கட்டுவார்கள்? வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற வங்கி கடனையெல்லாம் ரத்துச் செய்யவேண்டும்.

ஈழத்தில் போரில் ஏற்பட்ட பேரழிவினால் பொட்டல் காட்டில் எப்படி மீள்குடியேற்றம் நடைபெற்றதோ அதுபோல் தான் இங்கும் கஜா புயலால் ஏற்பட்ட பேரழிவினால் மறுபடியும் மீள்குடியேற்றம் செய்யவேண்டியுள்ள நிலையில் எதனடிப்படையில் ஒரு தென்னை மரத்திற்கு 1000 ரூபாய் என்பது போன்ற நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது? விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தவே இலட்சக்கணக்கில் செலவாகும்போது எப்படி அவர்களால் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவரமுடியும். எனவே தமிழக அரசு, தூய மனதோடு நேரில் வந்து ஆய்வு செய்து முழுமையான பாதிப்பை வெளியிட்டு மத்திய அரசிடமிருந்து உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்து டெல்டா பகுதி மக்கள் மீண்டுவர வாய்ப்புக்கொடுக்க வேண்டும்.

தற்போது பட்டினியும் பசியுமாக இருக்கும் மக்கள் இனிமேல் தான் கஜா புயல் பேரழிவின் பின்விளைவுகளை எதிர்கொள்வார்கள். கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல், மகள் திருமணத்தை நடத்த முடியாமல் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அந்த அளவிற்கு எம் மக்களைத் தவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்பது தான் நாம் தமிழர் கட்சி சார்பாக நாங்கள் வைக்கும் கோரிக்கை.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

#SaveDelta #NTKCycloneReliefCampaign #GajaCycloneRelief #UniteForHumanity #UniteForDelta

முந்தைய செய்திஅதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுயலும் புனரமைப்பும் – கஜா புயல் நிவாரணப் பணிகள்