`வதந்தி பரப்புவதே அரசாங்கம்தான்!’ – ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்

55

`ஆயுதம் இல்லாத மக்களை அடக்குவதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு? இனி ராணுவம் வரப் போகிறது என்கிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடுவது எப்படிப்பட்ட அணுகுமுறை?’ எனக் கொந்தளிக்கிறார் சீமான்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. `உங்கள் நிலங்களை நாசப்படுத்துவோம்; எதிர்த்தால் சுட்டுக் கொல்வோம் என்றால் இது யாருக்கான அரசாங்கமாக இருக்கிறது? இதுவரையில் இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் எதுவுமே பேசவில்லை. ராகுல்காந்தியாவது ஒரு பதிவை வெளியிட்டார்’ எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்ச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறை நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் பேசினோம்.

“ துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்திய மனப் பதற்றத்தில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை. இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தவே முடியாது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிக் கடந்த ஒரு வருடமாகவே பேசி வருகிறேன். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட தனியார் முதலாளி அவர். அவருக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமில்லை. தனியொரு முதலாளிக்காக நாட்டு மக்களைச் சுட்டுக் கொல்வது என்பது மிக ஆபத்தான கட்டமைப்பு. மக்கள் கொல்லப்பட்ட பிறகு, அந்த மக்களை சந்திக்க வருகிறார் கலெக்டர். அதுவே, போராட்டம் நடந்த நாள்களில் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறுவதற்கு அவருக்கு விருப்பமில்லை. போராட்டம் தொடங்கியபோதே அரசு நிர்வாகம் சார்பில் யாராவது சென்று மக்களைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், ‘ அரசு நம்முடைய பேச்சைக் கேட்கிறது’ என்ற நம்பிக்கை, மக்கள் மனதில் வந்திருக்கும். 100 நாள்களாக நடந்த போராட்டத்தில் எந்த இடத்திலும் அசம்பாவிதம் நடக்கவில்லை. ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க அமைதிப் பேரணியாக வந்தபோது, அங்கே கலவரம் எப்படி உருவானது?

எங்களிடம் பேசிய மக்கள், ‘ மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலுக்கு நாங்கள் செல்வதற்கு முன்னரே அங்கு வாகனம் எரிந்து கொண்டிருந்தது’ என்கின்றனர். அங்கே தீயை வைத்தது யார்? தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றின் மூலம் காயங்களை ஏற்படுத்தி, மக்களை அப்புறப்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல், சிறப்பு பயிற்சி எடுத்த காவலர்களை களமிறக்கி, அதிநவீன ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சீருடை அணியாமல் டீ சர்ட் அணிந்துகொண்டு அவர்கள் வந்துள்ளனர். அதிலும், மிக நெருக்கத்தில் நின்று பலரை சுட்டுக் கொன்றுள்ளனர். இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும்போதே, துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கிவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கையிலேயே இங்கு குழப்பம் நீடிக்கிறது. ’11 பேர் இறந்துவிட்டார்கள்’ என்கிறார் ஆளுநர், ‘ 9 பேர் இறந்தார்கள்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனக்குத் தெரிந்து துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம். துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டவர்கள் மட்டுமே 100 பேருக்கு மேல் இருப்பார்கள். இந்தச் சம்பவத்தால் அரசுக்கு ஒரு நெருக்கடி வரும் என்ற சிந்தனையே இவர்களுக்கு வரவில்லை. ஆயுதம் இல்லாத மக்களை அடக்குவதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு? இனி ராணுவம் வரப் போகிறது என்கிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடுவது எப்படிப்பட்ட அணுகுமுறை?

‘ முதல்வர் கையில் காவல்துறை இருக்கிறது. அவருக்குத் தெரியாமலா இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கும்? முதல்வருக்குத் தெரியாமலேயே அதிகாரிகள் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு கொடுத்துவிட்டார்களா? மூன்று மாவட்டங்களில் இணையதளத்தை முடக்கிவிட்டனர். ‘ வதந்தி பரவாமல் தடுப்பதற்காக’ என்கிறார்கள். உண்மைச் செய்தியையே மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியவில்லை. இதை எப்படி வதந்தி எனச் சொல்ல முடியும்? அரசாங்கம் பேசுவதுதான் வதந்தியாக இருக்கிறது. மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பி, போர்ச் சூழலை உருவாக்குகிறார்கள். மூன்று மாவட்டத்தில் துண்டிப்பதுபோல, தமிழ்நாடு முழுக்க இணையத்தைத் துண்டித்துவிட்டு, எங்களைச் சுட்டுக் கொன்றால் யாருக்குத் தெரியப் போகிறது? ஆந்திர வனப்பகுதியில் 20 பேர் கொல்லப்பட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 6 பேரைப் பரமக்குடியில் சுட்டுக் கொன்றார்கள். இதைக் கேட்க நாதியில்லை. மாஞ்சோலையில் 17 பேர் செத்தார்கள். தாமிரபரணியில் 19 பேர் செத்தார்கள். இதேபோல்தான் தூத்துக்குடியிலும் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதே இடத்தில் ஐந்து தெருநாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு, காட்சிப்படுத்த முடியுமா? உலகமே கொந்தளித்துப் போய் இருக்கும். விலங்குகள் நல வாரியம் களமிறங்கியிருக்கும். மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என ஜல்லிக்கட்டுக்காக களமிறங்கியவர்கள் எல்லாம் மனிதனை சுட்டுக் கொன்றதற்காக என்ன பேசினார்கள்? இவை அனைத்தும் வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் என்ற மனிதனுக்காக நடத்தப்படுகிறது.

இறந்தவர்கள் குறித்து சரியான கணக்கை அரசு சொல்லட்டும். உடல்களைப் பார்க்க யாரையுமே ஏன் அனுமதிக்கவில்லை? இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், ‘ இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் வேதாந்தா குழுமத்தால் கொடுக்கப்பட்டவை, இதன் அடக்க செலவு 50 லட்ச ரூபாய்’ என ஒவ்வொரு தளத்திலும் இந்த விளம்பரத்தை வைத்திருக்கிறார்கள். நோயை நாங்களே பரப்புவோம். இதனால் பாதிக்கப்படுவர்களுக்கு படுக்கையும் நாங்களே தருவோம் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள். படுக்கையைக் கொடுத்தவர்கள், இப்போது பாடையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டார்கள்” எனக் கொந்தளித்தார் சீமான்.

நன்றி விகடன்: https://www.vikatan.com/news/tamilnadu/125916-rumours-are-spread-by-government-slams-seeman.html

முந்தைய செய்திஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு! – நாம் தமிழர் கட்சி கண்டனம்.
அடுத்த செய்திஅறிவிப்பு: தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி