மே பதினெட்டு – மாபெரும் படைகட்டு! – சீமான் பேரழைப்பு

19

மே பதினெட்டு – மாபெரும் படைகட்டு! – சீமான் பேரழைப்பு
https://youtu.be/YIkI8088Tu8

மே 18, இனப் படுகொலை நாள்!

நம் தாய்நிலம் தமிழீழத்தின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டம், திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு முடிந்துவிட்டது என்று நம் பரம்பரை பகைவர் கொண்டாடிய நாள்!

சிங்கள இனவெறியும் உலகின் இருபது நாடுகளின் சதியும் இணைந்து நம் இனச் சொந்தங்களைக் கொன்று குவித்த கரும்புகை சூழ்ந்த கருப்பு நாள்!

அறமும் வீரமும் அன்பும் நெறியெனக் கொண்டு உலகம் தழுவி நேசித்து வாழ்ந்தக் கூட்டம்; நம் கண்ணீர் துடைக்க, கதறல் கேட்க, நம் காயம் ஆற்ற, உலகில் யாருமில்லை என்பதை உணர்ந்த நாள்!

இனி அவ்வளவு தான் தமிழர்கள் என்று நம் இனப் பகைவர் எண்ணிச் சிரித்த நாள்!

மானத் தமிழினம் இதை மறந்து போவதா? வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா?

எதை மறப்பாய்?
என்னுறவே!
எதை மறப்பாய்?
நம் அப்பனும் ஆத்தாளும் அலறித் துடிக்க அழித்து ஒழித்ததையா?
நச்சுக் குண்டுகளையும் வேதிக் குண்டுகளையும் வீசி, நம்மின உறவுகளைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுக் குவித்ததையா?
பல்லாயிரக்கணக்கான நம் குலப் பெண்களை, சிங்கள நரிகள் குதறிப்போட்டதையா?
நம் பிஞ்சுக் குழந்தைகளை நச்சுக் குண்டுகளால் நாசம் செய்ததையா?
இதில் எதை மறப்பாய்?
என்னுறவே!
எதை மறப்பாய்?

இலட்சக்கணக்கில் நம் குருதி உறவுகள் செத்துக் கிடந்ததையா? சிதறிக் கிடந்ததையா?
நம் வீட்டை இடித்து, நாட்டை அழித்து, நம்மை அகதியாக்கி, அடிமையாக்கி, உலகின் அவமானச் சின்னமாக்கியதையா?

நாம் கத்தியதையும் கதறியதையும்
துடித்ததையும் வெடித்ததையும்
பார்க்காமல் கேட்காமல் பன்னாட்டுச் சமூகம் அமைதிக் காத்ததையா?

இதில் எதை மறப்பாய்?
என்னுறவே!
எதை மறப்பாய்?

வீழ்வதல்ல தோல்வி!
வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!

எழு தமிழா! எழு!

நீ விழப் பிறந்தவன் அல்ல; எழப் பிறந்தவன்!
நீ அழப் பிறந்தவன் அல்ல; உலகையே ஆளப் பிறந்தவன்!

எழு என் இன உறவே! எழு!

மே பதினெட்டு – மாபெரும் படைகட்டு!

கொள்கை உரமிட்டு!
வீரக் கொடிகட்டு!
சிங்க நடையிட்டு!

இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! – என புரட்சி முழக்கமிட்டு, புறநானூற்று வீரமே புறப்படு!

இம்முறை சென்னையில் கூடுவோம்!
செருக்களமாடுவோம்!
செந்தமிழ் இனத்தீரே!

நாம் தமிழர்!

*****************************
மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள்: 18-05-2018, வெள்ளிக்கிழமை, மாலை 04 மணி
இடம்: YMCA திடல், பெருங்குடி, சோழிங்கநல்லூர், சென்னை
*****************************

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084