தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி

42

கட்சி செய்திகள்: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி

நச்சுக் காற்றை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 29-05-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு தொடர்வண்டி நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு, மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார் உள்ளிட்ட 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று கண்டனவுரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், `ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிடும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு இருந்திருக்குமானால், 13 அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொண்டது எதற்காக’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்டுள்ள ஆணை வெறும் கண் துடைப்பானது. இதற்கு முன்பும் இதேபோல பலமுறை ஆலையை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆலை தரப்பினர் முறையிட்டதால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனால் ஆலையை மூடுவது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டியது அவசியம்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்திருக்குமானால், எதற்காக 13 அப்பாவிகளின் உயிர்கள் கொல்லப்படும் வரையிலும் அரசு பார்த்துக்கொண்டிருந்தது? அதனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு முழுக்காரணமே தமிழக அரசு தான். துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவை துணை வட்டாட்சியர்கள் வழங்கியதாகச் சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரக்காரர்கள் பங்கேற்றதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதில் உண்மையில்லை. கலவரம் செய்பவர்கள் குடும்பத்துடனும் குழந்தைகளை அழைத்துக்கொண்டும் போராட்டத்துக்கு வந்திருப்பார்களா? தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உறவினர்கள்தானே? அப்படி இருக்கையில் போராடியவர்களைக் கலவரக்காரர்கள் என்று சொன்னால், பொன்.ராதாகிருஷ்ணன்தான் அவர்களின் தலைவராக இருப்பார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தூத்துக்குடி மக்களின் விருப்பம். அதனால், ஏற்ற வகையில் உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

சீமான் கண்டனவுரையாற்றும்போது, ” கடந்த 19ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் எங்கள் கட்சியினருடன் மோதலில் ஈடுபட்ட மதிமுகவினர் நாம் தமிழர் கட்சி மீதும் என் மீதும் பொய்யாக தொடுத்த கொலை முயற்சி வழக்கினால் காவல்துறையினர் தூத்துக்குடி போராட்டங்களில் பங்கேற்காதவாறு எங்களை மொத்தமாக முடக்கிவிட்டனர். காவிரி, கதிராமங்கலம், சேலம் 8 வழிச்சாலை உள்ளிட்ட மக்கள் போராட்டங்களில் பங்கேற்கும் போதெல்லாம் பொய் வழக்குகள் புனைந்து வைத்திருக்கும் காவல்துறையினர் அப்போதெல்லாம் கைது செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் ஏற்படுத்திய மோதலில் தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் கைது செய்து எங்களை வன்முறையாளர்களாக சித்தரிக்க திட்டமிடுகின்றனர். அரசின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பாத ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான்! இவர்கள் யார் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள்! பாஜக-வின் பினாமி அரசு தான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதற்கு ஆகச்சிறந்த சான்று, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஆதரித்து பாரதிய ஜனதா பேசிவருவதேயாகும்.

போராடும் மக்களை பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் போல் சித்தரிக்கும் கட்டமைப்பு பேராபத்தானது. உண்மையான பயங்கரவாதிகளும் சமூக விரோதிகளும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பத்திரமாக இருக்கிறார்கள்; ஆனால் பாவப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தான் கொளுத்தும் வெயிலில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். போராடுகின்ற மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடும்போரில் உயிர்நீத்த நம் இனச் சொந்தங்களுக்குப் புரட்சிகரமான வீரவணக்கம் செலுத்துகிறோம். உரிய நிவாரணத் தொகையையும் சிறந்த மருத்துவ உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி