ஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது: திட்டமிட்டச் சதிச்செயல்! – சீமான் கண்டனம்

38

ஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது: திட்டமிட்டச் சதிச்செயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து இன்று (02-03-2018) சென்னை செய்தியாளர் மன்றத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிகழ்ச்சி முடிந்தபின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,

ஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்டச் சதிச்செயல் என கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பேசிய சீமான்,

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குக் கூலிவேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைச் செம்மரக்கட்டையை வெட்ட வந்ததாகக் கைதுசெய்கிறார்கள். அவர்கள் செம்மரம்தான் வெட்ட வந்தார்கள் என்பது இவர்களுக்கு எப்படி தெரியும்? வெட்டும்போதும் கைதுசெய்தார்களா? இல்லையே.! அப்புறம் எதனை வைத்து செம்மரக்கட்டையை வெட்டத்தான் வந்தார்கள் என முடிவுசெய்து கைது செய்கிறார்கள்? கூலிக்கு மரம் வெட்டுகிறவர்களை கைதுசெய்கிற, சுட்டுக்கொலை செய்கிறவர்கள் அவர்களை அழைத்துச் செல்கிற முகவர்களை ஏன் கைதுசெய்வதில்லை? ஆந்திராவிலிருக்கிற செம்மரக்கட்டை கடத்துகிற முதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை? சந்திரபாபு நாயுடுவுக்குச் சொந்தமான பால் ஏற்றிச் செல்கிற வாகனத்திலேயே செம்மரக்கட்டை கடத்தப்பட்டதாகச் செய்திகளில் படித்தோம். எனவே, இது தமிழர்களைத் திருடர்கள் எனக் காட்டுவதற்கான திட்டமிட்டச் சதிச்செயல் என்றும், 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆந்திரச் சிறைகளில் வாடுகிறார்கள். அவர்கள் வறுமை காரணமாகத்தான் ஆந்திராவில் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூட மாநில அரசு முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.