வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை

90

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் (கன்னியாகுமரி) – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிகுந்த இளைஞர் பாசறை நடத்திய ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 04-02-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி, கோவளம் பகுதியில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றினார்

பொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1.ஓகி புயலில் சிக்குண்டு மரணித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம் மீனவச் சொந்தங்களின் இழப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை எமது ஆழ்ந்த இரங்கலை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலகத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக 25 இலட்ச ரூபாய் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு 7 வருடங்கள் கழித்துதான் இழப்பீட்டுத் தொகை தருவதாக இருக்கிற அரசு விதிகளை உரிய திருத்தம் செய்து உடனடியாக இழப்பீட்டுத்தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், புயலில் சிக்குண்டு மரணமுற்ற மீனவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசுப்பணி கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும், ஓகிப் புயலில் காணாமல் போன மீனவர்களுக்காகப் போராடிய மக்களின் மீது புனையப்பட்டப் பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

2.நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் கூறியுள்ளவாறு, மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும் நெய்தல் படை அமைக்க வேண்டுமெனவும், அப்படைப்பிரிவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த மீனவச்சொந்தங்களையே நியமிக்கும்படி தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.

3.மீனவர்களின் பாதுகாப்பிற்காக கன்னியாகுமரியில் உடனடியாக உலங்கு ஊர்தி தளம் அமைக்க வேண்டுமெனவும், சர்வதேசத் தரத்தில் இயற்கைப் பேரிடர்களைக் கண்டறிந்து மீனவச்சொந்தங்களுக்கு அறிவிக்கும் வகையிலான வானிலை ஆராய்ச்சி மையம் இம்மண்ணில் நிறுவப்பட வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

4.சாகர்மாலா திட்டத்தின் நீட்சியாக இம்மண்ணின் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் சரக்குப்பெட்டக மாற்று முனையத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

5.இயற்கைப் பேரிடரிலிருந்து மீனவக் கிராமங்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடற்பகுதிகளில் தூண்டில் வளையம் அமைக்கத் தமிழக அரசானது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.

6.ஓகிப் புயலில் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்திருக்கிற வாழை, தென்னை, ரப்பர் போன்ற பயிர்களுக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும், இம்மண்ணின் இயற்கை வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதைத் தமிழக அரசு தடுத்திட வேண்டுமெனவும், கேரள மாநிலத்தின் மருத்துவ, இறைச்சிக் கழிவுகளை இம்மண்ணில் கொட்டி குப்பைக்கூடாரமாக மாற்றும் சதிச்செயல்களை விரைவாக தடுத்து நிறுத்த வேண்டுமென இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

7.இம்மண்ணில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழர்களால் ஏற்கனவே தீவிரமாக எழுப்பப்பட்டு வரும் வேளையில் புதிதாக அணு உலைகளை நிறுவி வரும் மத்திய அரசின் அடாவடிச்செயல்களை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையானது வன்மையாக எதிர்க்கிறது. இதுபோன்ற முயற்சிகளை இம்மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக மத்திய அரசு செய்யக்கூடாது எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

8.ஓகிப் புயலால் அழிந்துபோன 27 இலட்சம் மரங்களுக்கு ஈடாக ஒரு கோடி நாட்டு மரங்களை நட்டு வளர்க்க வேண்டுமெனவும், தென்னை, பனை மரங்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

9.தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டுமெனவும், திட்டமிட்டு வெளி மாநிலத்தவரைத் தமிழக வேலைவாய்ப்புகளில் புகுத்தி தமிழர்கள் மீது பொருளாதாரச் சுரண்டல் செய்ய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

10.தமிழர்களின் தாயகமான தனித்தமிழீழக் சோசலிசக்குடியரசை அடைவதற்காக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் உயிர் ஈகம் செய்து 8 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஈழ மண்ணில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கானப் பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளாதிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இனியும் காலம் தாழ்த்தாது தலையீடற்ற ஒரு சுதந்திரமானப் பன்னாட்டு விசாரணையை சர்வதேசச் சமூகம் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஈழ மண்ணில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பன்னாட்டுச் சமூகத்தினை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையானது வலியுறுத்துகிறது.