ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை

119

செய்தி: மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை | நாம் தமிழர் கட்சி

மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் இன்று 23-09-2017 காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, அன்பு தென்னரசன், கலைக்கோட்டுதயம், இராவணன், ஹுமாயுன், விருகை இராஜேந்திரன், களஞ்சியம் சிவக்குமார், மகி.அரசன், ஆன்றோர் அவையம்
புலவர் மறத்தமிழ்வேந்தன், கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன், மாநில செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், செந்தில்குமார், தென்மண்டல அமைப்பாளர் வெற்றிக்குமரன், துறைமுகம் அன்வர் பேக் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர் சந்திப்பு: https://www.youtube.com/watch?v=4Nui_LAjAfo

இறுதியாக சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

மியான்மரைத் தாயகமாகக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசானது மூன்றாம்தரக் குடிமக்கள் போல நடத்தி, அவர்களுக்கு உரிய உரிமைகள் யாவற்றையும் மறுத்து வருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அத்தோடு, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப்பாராது ரோஹிங்கியா முஸ்லீம்கள் யாவரையும் கொடூரமாகக் கொலைசெய்து இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டிருக்கிற படங்களை இணையவெளியில் பார்க்கிறபோது நம் உள்ளத்தில் உதிரத்தை வரவழைத்து, கண்முன்னே சக மனிதன் சாகிறபோதும் அதனைத் தடுத்து நிறுத்த வழியற்ற கையறு நிலையில் நிற்கிறோமே என்ற ஆற்றாமையை ஏற்படுத்துகிறது.

தனது தாய்நிலத்தைவிட்டு பிரிந்து இன்னொரு இடத்திற்காக அகதியாக இடம்பெயர்வதுதான் பிரிவுகளிலேயே கொடுமையானது. அக்கொடுமையை ரோஹிங்கியா முஸ்லீம்கள் இன்றைக்கு அனுபவித்து வருவது பெருந்துயரமாகும். ஆகவே, ரோகிங்யா முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டியதும் அம்மக்களின் இனப்படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரலெப்ப வேண்டியதும் மானுடச்சமூகத்தின் தலையாயக் கடமையாகும்.

அண்ணல் காந்தியைத் தேசத் தந்தையாக ஏற்றிருக்கிற இந்தியப் பெருநாடு இந்த இனபடுகொலைக்கு எதிரான தனது கணடனத்தை உலக அரங்கில் வலிமையாகப் பதிவுசெய்திட வேண்டுமென நாமெல்லாம் எதிர்பார்க்கிற நேரத்தில் அம்மக்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தி அகதிகளாக வந்தவர்களையும் திருப்பி அனுப்புவோம் என்று கூறுவது மிகக்கொடுமையான செயலாகும். திபெத்திய அகதிகளை ஏற்றது போல மியான்மரிலிருந்து அடைக்கலம் புகும் ரோஹிங்கியா முஸ்லீம்களையும் இந்திய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் குறிப்பிட்டார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்! – சீமான் அறிவிப்பு
அடுத்த செய்திமொரப்பூரில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – அரூர் சட்டமன்றத் தொகுதி