ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்! – சீமான் அறிவிப்பு

61

மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! – சீமான் அறிவிப்பு

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 22-09-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழீழத்தாயகத்தில் மண்ணின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் சிங்களப்பேரினவாத அரசானது திட்டமிட்டு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாவகையில் மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது மியான்மர் அரசானது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு இன்னுமொரு இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருப்பது உலகம் முழுக்க வாழும் மாந்தநேயமுடைய மக்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்று பரந்த மனப்பான்மையோடு உலகம் தழுவி நேசித்து உலகத்தவர் யாவரையும் உறவென்று கொண்டிருக்கிற தமிழ்த்தேசிய இன மக்கள் இதனைத் தம்மின மக்களுக்கு நேர்ந்த இன்னலாகவே கருதுகின்றனர்.

மியான்மரைத் தாயகமாகக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசானது மூன்றாம்தரக் குடிமக்கள் போல நடத்தி, அவர்களுக்கு உரிய உரிமைகள் யாவற்றையும் மறுத்து வருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அத்தோடு, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப்பாராது ரோஹிங்கியா முஸ்லீம்கள் யாவரையும் கொடூரமாகக் கொலைசெய்து இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டிருக்கிற படங்களை இணையவெளியில் பார்க்கிறபோது நம் உள்ளத்தில் உதிரத்தை வரவழைத்து, கண்முன்னே சக மனிதன் சாகிறபோதும் அதனைத் தடுத்து நிறுத்த வழியற்ற கையறு நிலையில் நிற்கிறோமே என்ற ஆற்றாமையை ஏற்படுத்துகிறது.

தனது தாய்நிலத்தைவிட்டு பிரிந்து இன்னொரு இடத்திற்காக அகதியாக இடம்பெயர்வதுதான் பிரிவுகளிலேயே கொடுமையானது. அக்கொடுமையை ரோஹிங்கியா முஸ்லீம்கள் இன்றைக்கு அனுபவித்து வருவது பெருந்துயரமாகும். ஆகவே, ரோகிங்யா முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டியதும் அம்மக்களின் இனப்படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டியதும் மானுடச்சமூகத்தின் தலையாயக் கடமையாகும்.

அகிம்சாமூர்த்திக் காந்தியைத் தேசத் தந்தையாக ஏற்றிருக்கிற இந்தியப் பெருநாடு இந்த இனபடுகொலைக்கு எதிரான தனது கணடனத்தை உலக அரங்கில் வலிமையாகப் பதிவுசெய்திட வேண்டுமென நாமெல்லாம் எதிர்பார்க்கிற நேரத்தில் அம்மக்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தி அகதிகளாக வந்தவர்களையும் திருப்பி அனுப்புவோம் என்று கூறுவது மிகக்கொடுமையான செயலாகும். திபெத்திய அகதிகளை ஏற்றது போல மியான்மரிலிருந்து அடைக்கலம் புகும் ரோஹிங்கியா முஸ்லீம்களையும் இந்திய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்குச் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறோம். அதில் தாய்த்தமிழ் உறவுகளும், மாந்தநேயப்பற்றாளர்களும் பெருமளவில் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடு கோருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகொள்கை விளக்க காணொளி பரப்புரை – பரமத்திவேலூர் தொகுதி (நாமக்கல்)
அடுத்த செய்திரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை