மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

305

மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 29/04/2017 அன்று அன்னனூர் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுபான கடை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையின் பதாகைகளை கிழித்து தீயிட்டு எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சே.நல்லதம்பி (ஆவடி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்), க.பாபு (ஆவடி சட்டமன்றத் தொகுதி தலைவர்), தமிழ் மார்டின் (அம்பத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்), பொன்னரசு (பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி தலைவர்), வெற்றிதமிழன் (பெரம்பூர் சட்டமன்றத்தொகுதி தலைவர்) மற்றும் ஆவடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அருள்பிரகாசம், சரவணன், ஸ்ரீதர், தாமஸ், தணிகைவேல், சத்தியன், பிரசன்னா, கோபால், ராஜ்குமார், மணிகண்டன், கோகுல், புருசோத்தமன், மணி, சரவணன் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட 21 பேரை காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்து கைது செய்தது.

அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை மற்றும் உழைப்பாளர் நாளையொட்டி நீதிமன்ற விடுமுறையால் வழக்கில் பிணையில் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மே மாதம் கோடை விடுமுறையால் நீதிமன்றங்கள் இயங்கவில்லை.இந்த 21 பேரும் பிணை வழங்கக் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கீழ் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள பிரசன்னாவின் தாயார் இறந்து விட்டதால், அவரை பரோலில் விடுவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

4-5-2017 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, டாஸ்மாக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. தாயை இழந்த பிரசன்னா ஒருவர் மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரையும் விடுவிக்க உத்தரவிடுகிறேன் எனக் கூறிய நீதிபதி, இது தொடர்பாக 21 பேருக்கும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்ய வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக மதியம் 2:15-க்கு விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை பின்னர் விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், இதற்கான உத்தரவை நாளை (5-5-2017) பிறப்பிப்பதாகவும்; நீங்கள் வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் பதாகைகளை உடைப்பது குற்றமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், போராடியவர்களை கைது செய்த திருமுல்லைவாயில் ஆய்வாளரை நாளை (5-5-2017) நேரில் ஆஜராகச் சொல்லுங்கள்; அவருக்கு அபராதம் விதிக்க இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரசன்னாவிற்கு இன்று மாலை 6 மணிக்கு நிபந்தனையற்ற பிணையில் விடுதலை அளிப்பதாகவும், மற்றவர்களுடைய பிணை குறித்த விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு (5-5-2017) விசாரணைக்கு வந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர், ‘இம்மன்றம் மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டும், அவரை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. அதனால், அவரது தாயார் உடல் இறுதிச் சடங்கு செய்யப்படாமல் உள்ளது’ என்று கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், காவல்துறை அதை மதிப்பதே இல்லை. மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டோம். சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் அவரை விடுதலை செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தையும், அரசு வழக்குரைஞரையும் மதிக்காமல் அவர் செயல்படுகிறாரா? உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத சிறை கண்காணிப்பாளர், அப்பதவியை வகிக்க தகுதியில்லாதவர். இன்று (6-5-2017) காலை 11.30 மணிக்குள் பிரசன்னா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு விடுவிக்கவில்லை என்றால், புழல் சிறை கண்காணிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் நேரில் வரவேண்டும். அவரும் நேரில் வரவில்லை என்றால், தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் (டி.ஜி.பி.) ஆகியோரை நேரில் வர உத்தரவிட வேண்டியது வரும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பிரசன்னா உட்பட 21 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு 5-5-2017 மாலையில் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்தின் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நேரில் வந்திருந்தனர்.

அப்போது இந்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பிரசன்னாவை 5ந் தேதி காலை 11.30 மணிக்கு முன்பாகவே விடுவித்து விட்டதாகவும், இந்த காலதாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அரசு வழக்குரைஞர் ராஜரத்தினம், ‘சிறை விதிகளின்படி நீதிமன்ற உத்தரவு விவரம் தெரியாமல், கைதிகளை விடுவிக்க முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால், பிரசன்னாவை விடுவிக்க கால தாமதமாகி விட்டது. இதற்கு சிறை அதிகாரிகள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளனர்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவை செயற்டுபடுத்தாத இந்த இரு அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். ஆனால், அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் கேட்கும் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதனையடுத்து மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிச் சிறைசென்ற நாம் தமிழர் கட்சியினர் 21 பேரும் வழக்கு ஏதுமின்றி நிபந்தனையின்றி 5-5-2017 மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் ஆங்காங்கே மதுக்கடைகளுக்கு எதிராக போராடிவரும் போராட்டக்காரர்களை சிறைபடுத்தக்கூடாது என்ற வரலாற்று புகழ் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துக்கள்.

நன்றி: நக்கீரன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=190680 http://www.vikatan.com/news/tamilnadu/88391-sc-condemns-the-arrests-of-people-who-protested-against-tasmac.html

நன்றி: தமிழ்வலை http://www.tamizhvalai.com/archives/10269

முந்தைய செய்திகண்ணகி பெருவிழா – நிகழ்ச்சி நிரல் (7-5-2017 முதல் 10-5-2017 வரை ) | வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திகண்ணகி பெருவிழா – பூம்புகார் கடலாடுதல் விழாவில் பெருஞ்சுடரேற்றி துவக்கம் | வீரத்தமிழர் முன்னணி