யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்! – சீமான் கண்டனம்
======================================
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் பெருத்தத் துயரத்தையும், மிகுந்த மனவேதனையையும் தருகிறது. உயிரிழந்த இரு மாணவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். தமிழ் மாணவர்களைச் சுட்டுக்கொலை செய்திருக்கிற இந்தச் சம்பவத்தின் வாயிலாக தமிழர்களைக் கொன்றொழிக்கும் இரத்தவெறி பிடித்த சிங்களக்காடையர் கூட்டத்தின் பசி ஒருபோதும் அடங்காது எனும் கூற்று மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்தப் படுகொலையை விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற சிங்களக்காவல்துறையினர் பின்னர், உடலில் தென்பட்ட காயங்களின் வாயிலாக அது கொலை என வெளியுலகத்துக்குத் தெரியவரவே, சப்பைக்கட்டு கட்டி தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முனைகிறார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கூறினாலும் எதன்பொருட்டும் இச்செயலை ஏற்க முடியாது. இச்செயலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.
மகிந்தா ராஜபக்சே ஆண்டாலும், மைத்திரிபால சிறிசேனா ஆண்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இதுதான் தமிழர்களின் நிலை என்பது இச்சம்பவம் வாயிலாகத் தெளிவாகப் புலனாகியிருக்கிறது. ஏற்கனவே, மூத்தப் போராளிகளை நஞ்சை செலுத்திக் கொன்றுவரும் சிங்களப்பேரினவாதம், தற்போது தமிழ் இளந்தலைமுறை மீதும் கோரத்தாக்குதல் தொடுத்திருப்பது உலகத்தமிழர்களின் உள்ளத்திலிருந்து உதிரத்தை வரவழைத்திருக்கிறது.
தமிழ் இளைஞர்களின் மனங்களிலும், எண்ணங்களிலும் போர்க்குணமும், போராட்ட உணர்வும் எழாதவாறு அவர்களை மழுங்கடிக்கும் வேலையை வீரியத்தோடு சிங்கள அரசப்பயங்கரவாதம் செய்துகொண்டு வருகிறது. அதனையும் மீறி கிளர்ந்தெழும் மாணவர்களையும், இளைஞர்களையும் அச்சுறுத்தவே இதுபோன்ற கொலைகளை அது நிகழ்த்துகிறது. இதனை ஈழத்தமிழர்கள் தங்களது தந்தையர் நாடாகப் போற்றும் இந்தியப் பெருநாடும், மானுடம் பேசுகிற சர்வதேசச் சமூகமும்கூட பார்த்துக்கொண்டு மௌனியாக இருப்பதுதான் பெருத்த கொடுமையானச் செய்தியாகும்.
இவ்விவகாரத்தில், தமிழர்களைக் கொன்ற சிங்களக் காவல்துறையினர் மீது சிங்கள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதைவிட ஒரு அறிவிலித்தனம் ஒன்றும் இருக்க முடியாது. எனவே, இச்சம்பவத்தில் ஐ.நா.பெருமன்றமும், இந்தியப் பேரரசும் தலையிட்டு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்த வழிகோல வேண்டும்.
– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது