தமிழினப் போராளி அய்யா.நகைமுகனின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு – செந்தமிழன் சீமான்

76

தமிழினப் போராளி அய்யா.நகைமுகனின் இழப்பு – தமிழ்ச்சமூகத்திற்கு பேரிழப்பு – செந்தமிழன் சீமான் புகழாரம்.
———————————————-
naagaimugan-naam-tamilar-katchi
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், ஈழ ஆதரவாளராரும் ,தனித்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனத்தலைவருமான அய்யா நகைமுகன் அவர்களது எதிர்பாராத மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் எனக்கு ஏற்படுத்தி உள்ளது.

மிகச்சிறந்த போராட்ட உணர்வுக் கொண்ட அய்யா நகைமுகன் ஈழ ஆதரவு உணர்விற்காக தமிழ்நாட்டில் 1990- ல் நடந்த திமுக ஆட்சியில் முதன் முதலாக தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் தளைப் பட்டவர். தன் வாழ்க்கை முழுக்க சமூகப் பணிகளுக்காக உழைத்த அய்யா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர்.அகில இந்திய தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் அமைப்பின் பொறுப்பாளராக திகழ்ந்தார். அரசியல்,இதழியல் என பல்வேறு துறைகளில் புகழ்த்தடம் பதித்த அய்யா அவர்களது மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு மாபெரும் இழப்பு.

அய்யா.நகைமுகன் அவர்கள் தன்னைப் போலவே தன் குடும்பத்தினரையும் சமூக உணர்வு கொண்ட ,போராட்டக் குணம் கொண்டவர்களாக வார்த்தெடுத்து வளர்த்தெடுத்தது அவரின் அளப்பரிய சமூக உணர்வை காட்டுகிறது. அய்யா.நகைமுகன் அவர்களின் சகோதரர் திரு. அரப்பா அவர்கள் நாம் தமிழர் கட்சியின் வழிகாட்டும் பெருந்தமிழர் அமைப்பான ஆன்றோர் அவையத்தில் மதிப்புறு இடத்தில் இருக்கிறார்.

என் மீது அக்கறையும், அன்பும் கொண்ட அய்யா.நகைமுகன் அவர்கள் மறைந்தது எனக்கு தனிப்பட்ட அளவில் பேரிழப்பு.
அய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவராக இருந்து நானும் ஆற்றாத் துயரில் பங்கேற்கிறேன்.
அய்யா. நகைமுகன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் புகழ்வணக்கம்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.