நாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்

137

நாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தேசியத் தமிழினம் பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளாலும் சீரழிவுகளாலும் சிதைக்கப்பட்டுவிட்டது. பன்னாட்டு ஆதிக்கத்தின் கீழ் எல்லாவிதச் சீரழிவுகளுக்கும் ஆளான தமிழினத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு இனம் சார்ந்த மக்கள் ஆளாத நிலையே நீடிக்கிறது. இமயம் வரை பரவிக் கிடந்த மூன்றாவது பெரும் வல்லரசான தமிழினம் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் இன்றைக்கு ஓர் ஓரத்தில் முடங்கிவிட்டது. கலைச் சிதைவு, மொழிச் சிதைவு, இனச் சிதைவு என இன்றளவும் தமிழ்த் தேசிய சீரழிவுகள் நீடித்த வண்ணமே இருக்கின்றன. ஈழத்தில் கண் முன்னே நிகழ்ந்த பேரவலக் கொடுமைகளைக் கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் தாழ்நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டதற்குக் காரணமே, அதிகாரம் பெற்ற பிள்ளைகளாகத் தமிழர்கள் இல்லாததால்தான். இனம் சார்ந்த பிள்ளையின் வழிநடத்துதல் இருந்திருந்தால் இத்தகைய பேரவலத்துக்குத் தமிழினம் தள்ளப்பட்டிருக்காது. அதிகாரத்தைப் பெறுவதற்கான அரசியலை உருவாக்குவதே காலத்தின் கட்டாயமாகத் தமிழர் தோள்களில் தள்ளப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்கள் மாறுகிறார்கள்; ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால், நமக்கான அரசியல் மாற்றம் நிகழவில்லை. அரசியல் மாற்றமே அவசிய மாற்ற‌ம். புரட்சி ஒன்றால்தான் இத்தகைய மாற்றத்தைப் புரட்டிப் போட முடியும். ‘அதிகாரம் மக்களுக்கானது’ என்கிற உரிமைக் குரலோடு மாற்று அரசியலைக் கட்டி எழுப்ப தமிழர்கள் ஒவ்வொருவரும் கைகோர்க்க வேண்டும். ஊழலற்ற லஞ்சமற்ற முழுமையான மக்கள் ஆட்சியை உருவாக்க இதுவே நமக்கான இறுதி வாய்ப்பு. இருக்கும் உரிமையைக் காக்கவும் இழந்த உரிமையை மீட்கவும் ஒருமித்த தமிழர் திரட்சியே புரட்சியாக மாறும். நாமே மாற்று; நாம் தமிழரே மாற்று. நமக்கான அதிகாரத்தை இனியும் எவரும் தடுத்து வைக்க முடியாது. சாதி மதக் கூறுகளை உடைத்து, தேசிய, திராவிட மாயைகளை மண்ணோடு மண்ணாக்கி, ‘நாம் தமிழர்’ என்கிற இன உணர்வோடும் மான உணர்வோடும் திரண்டு, ‘ஒரு தமிழன் தலைமையில் ஆட்சி’ அமைய, நாம் அனைவரும் போராட வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கான அற்பணிப்போடும், எது பகல், எது இரவெனத் தெரியாத அயராத வேகத்தோடும் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் இந்தப் புரட்சிக்காகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

2. தனியீழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக‌ விடுதலை. தமிழ்த் தேசியத்துக்கான தேச விடுதலையும் அதுவே. தமிழர் பணம், தமிழ்த் தேசிய இராணுவம், தமிழ்த் தேசிய வைப்பகம், தமிழ்த் தேசிய கீதம் என்றெல்லாம் தமிழர் அங்கீகாரத்தைப் பெற இலட்சக்கணக்கான போராளிகளும் தமிழ் மக்களும் உயிரைத் துச்சமென நினைத்துப் போராடிய போராட்டத்தை கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை கைவிட முடியாது. இன விடுதலை என்பது ஒவ்வொரு இனத்துக்கான பிறப்புரிமை. அதனை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை. எனவே, இலங்கையில் உடனடியாகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ”ஒரே இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா… இல்லை, தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா?” எனக் கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியப் பெருந்தேசம் குரல் கொடுக்க வேண்டும். சிங்கள அரசின் சிநேகித அரசாக இருக்கும் பாரதீய ஜனதா அரசு, பொது வாக்கெடுப்பு கோரிக்கையைப் புறந்தள்ளினால், சர்வதேச முயற்சியாக அதனை மாற்ற நாம் தமிழர் கட்சி எல்லாவித முனைவுகளையும் எடுக்கும். சர்வதேச ஜனநாயக சக்திகளைச் சந்தித்து, போர் நடந்த காலம் தொடங்கி முகாம்களில் தவிக்கும் இன்றைய வாழ்க்கை வரையிலான‌ ஈழத்தமிழர்களின் துயரங்களை வெளிச்சமிட்டுக்காட்டி, பொது வாக்கெடுப்பைச் சாத்தியப்படுத்த அத்தனை அரசியல் முயற்சிகளையும் நாம் தமிழர் கட்சி நிச்சயம் மேற்கொள்ளும். அதேநேரம் இன அழிப்புப் போரில் வெறித்தாண்டவமாடிய சிங்கள இராணுவத்தினர் மீதும் ராஜபக்சே மீதும் நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகம் இன்னும் வேகம் காட்ட வேண்டும். இன அழிப்பு ஆதாரங்களை அவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தின் ஜனநாயக அமைப்புகள் புறந்தள்ளிவிட முடியாது. பன்னாட்டு விசாரணைக்கும், இனவெறிக் கொடூரர்கள் மீதான நடவடிக்கைக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் உடனடியாக உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு தமிழர் உள்ளத்திலும் ஆறாத ரணமாக நீடிக்கும் கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அது தமிழர்களை வேறு திசை நோக்கியே திருப்பும் என்பதை உலகக் கண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இலட்சக்கணக்கான படுகொலைகளை மறந்துவிட்டு இயங்க, தமிழர்கள் எவராலும் முடியாது. ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உள்ளக் கொதிப்பையும் உணர்ந்து, எங்கள் கண்ணீரின் பரிதவிப்பைப் புரிந்து, இயலாமையும் கையறு நிலையுமாய்த் தத்தளிக்கும் எமக்கு உரிய தீர்வை உலகம் கொடுத்தே தீர வேண்டும்.

3. இன விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இனியும் நீட்டிக்கக்கூடாது. போர் மரபுகளை மீறி இனவெறிக் கொடூரத்தோடு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி சிங்கள இராணுவம் போரிட்ட போதும் விடுதலைப் புலிகள் எத்தகைய நெறியோடும் விடுதலைக்கான அற்பணிப்போடும் போராடினார்கள் என்பது இந்த உலகுக்கே விளங்கிய உண்மை. ‘விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டோம்’ எனக் கடந்த ராஜபக்சே அரசும், இப்போதைய மைத்ரிபால சிறிசேனா அரசும் சொல்லிவிட்ட நிலையில், பிறகு எதற்கு புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாத அமைப்பு எனச் சொல்பவர்கள் தடையை மட்டும் இருக்கிறபடியே நீட்டிப்பது ஏன்? விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர் தேசிய இனத்துக்கான அவமானம். ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் அயல்நாடுகளுக்குப் பயணிக்கும்போது தமிழர் என்றாலே, ‘நீ புலியா, போராளியா, பயங்கரவாதியா’ எனப் பார்க்கிற பார்வையை புலிகள் மீதான தடையே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எனவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். ஈழப் பிரச்னையில் ஆரம்பத்தில் இருந்த பார்வையை மாற்றி தமிழ்த் தேசிய இன விடுதலையின் அவசியத்தையும் அதற்காகக் கொடுத்த இலட்சக்கணக்கான உயிரையும் மனதில் எண்ணி, புலிகள் மீதான தடையை நீக்க தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உரிய சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். புலிகள் மீது தடையைப் பிறப்பிக்கச் சொன்னவரே புலிகள் மீதான தடையை ரத்து செய்யச் சொன்னால், அது ஒவ்வொரு தமிழனுக்குமான நிம்மதிப் பெருமூச்சாகவும் உலகளாவிய அளவில் தமிழர்கள் மீதான உயரிய பார்வையாகவும் அமையும். சிங்கள போர்க்குற்றங்களைக் கண்டித்தும் தனித் தமிழீழத்தை வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஒவ்வொரு தமிழர்களின் உள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, புலிகள் மீதான தடையை நீக்கவும் நிச்சயம் ஆவண‌ம் செய்வார் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது.

4. பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை, ஒரு தாயின் மடிப்பிச்சையாகக் கண்ணீரோடு கதறிக் கேட்கிறது நாம் தமிழர் கட்சி. திட்டமிட்ட சூழ்ச்சியாலும் நேர்மையற்ற விசாரணையாலும் செய்யாத குற்றத்துக்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவிக்கும் 7 பேர் மனநிலையை அதிகாரத்தில் இருக்கும் எவருமே உணராமல் போனது உலகக்கொடுமை. இளமை தொலைத்து, கனவுகள் தொலைத்து, உறக்கமற்றவர்களாக, உலகம் பார்க்காதவர்களாகப் பரிதவிக்கும் ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் மனசாட்சியோடு ஆவணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் தூக்கு குறித்த துயரம் பரப்பப்படுவதும், ஒட்டுமொத்த தமிழர்களையும் அது வேதனையில் ஆழ்த்துவதும், கையறு நிலையில் கதற வைப்புதும் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்துக்கொண்டே போகும்? தூக்கின் துரத்தலில் அல்லாடும் பிள்ளைகளின் ஆற்றொணா வேதனையை தாய் அற்புதத்தம்மாளின் மனநிலையில் இருந்து மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். சாலையோரம் தூங்கிய ஏழையை மதுபோதையில் வாகனம் ஏற்றிக் கொன்ற ஒரு நடிகர் நீதிமன்ற தண்டனை அறிவிப்புக்குப் பின்னரும் ஒரு நிமிடம்கூட சிறை தண்டனையை அனுபவிக்காமல் சர்வ சுதந்திரத்தோடு வெளியே வர வகை செய்திருக்கும் இந்தியாவின் சட்ட திட்டங்கள் ஒரு மின்கலம் வாங்கிக் கொடுத்ததாக குற்றம் சொல்லி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளனை அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? ஏழு பேர் விடுதலைக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு தாயுள்ளத்தோடு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒரு மாநில அரசுக்கான அதிகார வரம்பு உணர்ந்து அதற்கான மறுப்பையோ திணிப்பையோ செய்யாமல் ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு பக்க துணையாக விளங்க வேண்டும்.

5. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லி அப்பாவித் தமிழர்கள் 20 பேரைச் சுட்டுக்கொன்று வெறித்தாண்டவம் ஆடிய ஆந்திர அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது, உரிய நியாயத்துக்காகப் போராடும் ஒவ்வொரு தமிழர்களையும் கொல்வதற்குச் சமமான கொடூரம். ஆந்திரா நிகழ்த்திய கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். பேருந்தில் பயணித்தவர்களைப் பிடித்துச் சென்று கொன்றதற்கான ஆதாரங்களை நூலிழையில் தப்பிய தமிழர்கள் பட்டவர்த்தனப்படுத்தியும் ஆந்திர அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இறையாண்மையை மீறும் திமிர்த்தனமாகவே தெரிகிறது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் உடனடியாக அவர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு குற்ற வழக்கை முடித்த பின்னரே பதவியில் தொடர முடியும். ஆனால், ‘அப்பட்டமான படுகொலைகள்’ எனச் சொல்லி இத்தனை புகார்கள் எழுந்தும் ஆந்திர அதிகாரிகள் ஒருவர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

6. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தையே முடக்கிப்போடும் அளவுக்கு நதிநீர்ப் பிரச்னையில் நாளுக்கு நாள் நடக்கும் திட்டமிட்ட சதிகளையும், உரிமை மீறல்களையும் இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. முல்லைப் பெரியாறு மற்றும் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டப்படும் அடாவடிகளை மத்திய அரசு உடனடியாகத் தட்டிக்கேட்டுத் தடுக்க வேண்டும். நீதிமன்றங்களே மிகத் தெளிவாகச் சொன்ன பிறகும், தண்ணீர் பிரச்னையில் தமிழ்நாட்டுக்கான அக்கிரமங்கள் தொடர்வது தமிழர்களைத் திட்டமிட்டுச் சீண்டிப்பார்க்கிற செயல். காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் அக்கம்பக்க மாநிலங்களின் அத்துமீறல்களும், மத்திய அரசின் மௌனச்சாமி அணுகுமுறையும் இனியும் நீடிக்குமேயானால், மிகக் கடுமையான போராட்டங்களை நாம் தமிழர் கட்சி கையிலெடுக்கும். வறட்சியாலும் அநியாய விலை ஏற்றங்களாலும் நெல், கரும்பு மற்றும் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பேரவலம் தமிழகத்திலும் தொடங்கியுள்ள நிலையில், நீர் ஆதாரப் பிரச்னைகளும் நீடித்துக்கொண்டே போனால் அது விவசாயிகளின் உயிரோடு விளையாடுகிற விபரீதமாகவே இருக்கும். எனவே மேகதாது உள்ளிட்ட அணைகளைக் கட்டும் முயற்சிகளைத் தடுத்து தமிழக விவசாயிகளைக் காக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. தமிழகத்தில் மீத்தேன் எரிகாற்று எடுக்க இருப்பதைக் கண்டித்து ஒட்டுமொத்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். சமீபத்தில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். தமிழகத்தில் மீத்தேன் எடுக்க உரிமம் எடுத்த கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான குறைந்தபட்ச பணியைக்கூட அங்கு தொடரவில்லை என்றும், மத்திய அரசு கேட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் சொல்லி அதனாலேயே அந்த நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் காரணங்களைச் சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே மீத்தேன் பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இன்னமும் தீவிரத்தோடுதான் இருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டங்களையோ கட்சி பாகுபாடற்ற கொந்தளிப்புகளையோ கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனத்தின் நடவடிக்கைகளை மட்டுமே மனதில் கொண்டு மீத்தேன் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர். 766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விவசாய மண்ணைக் காவு வாங்கக் காத்திருக்கும் மீத்தேன் எரிகாற்று திட்டம் விவசாய மாவட்டங்களையே சுடுகாடாக மாற்றிவிடக்கூடியது. தனியார் நிறுவனத்தின் உரிமத்தை மட்டுமே ரத்து செய்யவிருக்கும் நிலையில், மீத்தேன் திட்டமே ரத்தானதைப் போல் போலி பிம்பத்தை தமிழகத்தில் சிலர் உருவாக்கி வருகிறார்கள். மீத்தேன் அரக்கனை வேரறுக்க நெஞ்சுறுதியோடு நிற்கிற விவசாயப் பெருமக்களின் உணர்வுகளைச் சிதைப்பதற்கான முயற்சியாகவே இதனைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றாக வேறு நிறுவனத்தைக் கொண்டுவந்து, அதற்கு உரிமம் வழங்கி மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக வரும் பேரச்சமான செய்திகளை அவ்வளவு சீக்கிரத்தில் புறந்தள்ளிவிட முடியாது. மீத்தேன் எரிகாற்றுத் திட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் கிளம்பும் எதிர்ப்புகளைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட அரசுத்தரப்பு, இப்போது ‘சாதாரண பெட்ரோல் -கேஸ் பரிசோதனைகளைத்தான் நடத்துகிறோம்’ எனச் சொல்லி, மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி மூலமாக மீத்தேன் எடுக்கும் செயல்பாடுகளை மறைமுகமாக‌ச் செய்து வருகிறது. விவசாய வாழ்வாதாரங்களையே அழிக்கக்கூடிய இத்தகைய செயல்பாடுகள் இனியும் தொடர்ந்தால், ஒருமித்த மக்கள் புரட்சியே அந்த மண்ணில் நடக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறது. மீத்தேன் எரிகாற்று அபாயங்களைப் பட்டியலிட்டு தனது இறுதி மூச்சு வரை போராடிய எங்களின் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் கனவை, நாம் தமிழர் கட்சி நிச்சயம் நிலை நிறுத்திக் காட்டும்.

8. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வாகன விபத்து என இந்த மண்ணில் நிகழும் சமூகக் குற்றங்கள் பலவற்றுக்கும் மிக முக்கியக் காரணியாக மதுவே இருக்கிறது. அரசால் விற்கப்படும் மது, அரசின் சட்டம் ஒழுங்குக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு பல கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது. குடும்பத் தகராறு, சந்தேகம், சல்லாப நோக்கம், பகைமை, பழிவாங்கல் என மக்கள் மனதில் கட்டுப்பாடற்ற எண்ணத்தை உருவாக்கி, பல குடும்பங்களின் நிம்மதியைப் பறித்துவருகிறது மது. குடிமக்களை அறிவிற்சிறந்த பெருமக்களாக்குவதே அரசின் கடமை. ஆனால், தமிழகத்தில் 4,028 நூலகங்களைத் திறந்திருக்கும் அரசு 6,800-க்கும் அதிகமான மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. வரும் 2015 – 16 வருடங்களில் மதுக்கடை வருமானத்தை 29,672 கோடி இலக்காக நிர்ணயித்து தமிழக அரசு செயல்படுவது வெட்கக்கேடானது. மதுவை வருமானமாகப் பார்க்காமல், அவமானமாகப் பார்த்து, மது விற்பனையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

9. மதவெறிக் கட்சியாக அறியப்பட்ட பாரதீய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிறகாவது தனது மனநிலையையும் மதநிலையையும் மாற்றிக்கொள்ளும் என ஒவ்வொரு குடிமக்களும் நினைத்தார்கள். ஆனால், ‘தீண்டும் குணம் பாம்புக்குப் போகாது’ என்பதை பாரதீய ஜனதா கட்சி அனுதினமும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்று வரை இந்தியாவையே இந்துத்துவா தேசமாக மாற்றிவிட எல்லாவித நடவடிக்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மேற்கொண்டு வருகிறது. சமஸ்கிருதத் திணிப்பு, கட்டாய மதமாற்றம், பகவத் கீதையைத் தேசிய நூலாக்கும் திட்டம், கிறிஸ்துமஸ் தின விடுமுறையை ரத்த செய்ய முயற்சி… என பாரதீய ஜனதா ஆட்சியில் அனுதினமும் அரங்கேற்றப்படும் இந்துத்துவா நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. இத்தகைய இந்துத்துவா செயல்பாடுகள் நம் மண்ணில் வாழும் இதர மதத்தினரை எப்படியெல்லாம் துன்புறுத்தும் என்பதை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். முன்னேற்றப் பாதையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லப்போவதாக வாக்குறுதி வழங்கிய பிரதமர் மோடி அவர்கள், தேவையற்ற மதத் திணிப்புகளையும், மதத் துவேசங்களையும் உண்டாக்கி, கற்காலத்துக்கு இந்தியாவை இழுத்துச் செல்லும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். பிறர் மதம் நோகும் செயல்களையும், பிறர் மனம் நோகும் செயல்களையும் செய்வதுதான் பாரதீய ஜனதா அரசின் செயல் திட்டமா? மதம் சார்ந்த முனைப்புகளும் திணிப்புகளும் தொடர்ந்தால், ஒருமித்த இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நச்சாக அத்தகைய நடவடிக்கைகள் அமைந்துவிடாதா? எனவே, மதம் சார்ந்த நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா அரசு, தன் நிலைப்பாட்டை உடனடியாக‌ மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கல்விக் கொள்கைகளில் இந்துத்துவாவைத் திணிக்கும் செயல் வளரும் குழந்தைகளின் மனதிலும் நச்சை விதைக்கும் கொடு செயலாகவே இருக்கும். இந்துத்துவாவின் அடிப்படை வாதத்தைக் கல்வியில் திணித்து கல்வியைக் காவிமயமாக்க பா.ஜ.க. செய்யும் நுட்பமான நகர்வுகளை அறிவார்ந்த தமிழ்ப் பிள்ளைகள் அறியத் தவறவில்லை. இனியும், இத்தகைய திணிப்புகள் தொடர்ந்தால் காவிக்கு மணி கட்ட எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவும் நாம் தமிழர் கட்சி தயங்காது.

10. கோடிக்கணக்கான விவசாயிகளின் கூக்குரலையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கும் மோடி அரசை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது எனச் சொல்லி டெல்லியில் முதல்வரின் கண் முன்னாலேயே கஜேந்திர சிங் என்கிற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அத்தகைய பேரதிர்வு நிகழ்வுக்குப் பிறகும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு காட்டுகிற அவசரம், பன்னாடுகளுக்கு இந்த தேசத்தைக் கூறுபோட்டுக் கொடுக்கிற கூலிக்கான மாரடிப்பே ஆகும். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே இந்தக் கொடூரச் சட்டத்தை எதிர்க்கும் நிலையில், இந்தியப் பிரதமர் என்பதை மறந்து பன்னாடுகளின் தரகராகவே தன்னை அறிவித்து மகிழும் மோடி அவர்களை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது நாம் தமிழர் கட்சி. இந்த மண்ணின் வளம் மக்களின் நலனுக்கானது. அற்ப அரசியலுக்காக விவசாயத்தைத் தின்று ஏப்பம் விடும் பா.ஜ.க. அரசு இந்த மண்ணில் இருந்து அடியோடு துடைத்து எறியப்படும் நாள் தூரத்தில் இல்லை என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறது.

11. ஆயிரக்கணக்கான மக்களின் அச்சத்தையும் எதிர்ப்புப் போராட்டத்தையும் புறந்தள்ளி, கூடங்குளத்தில் அணு உலையைக் கொண்டுவந்த மத்திய அரசு, இப்போது மேலும் இரு அணு உலைகளை அங்கே நிறுவப்போவதாக அறிவித்திருப்பது அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மக்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், அதையெல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நினைத்ததைச் செய்யும் மனநிலையிலேயே மத்திய அரசு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு வந்த பிறகும், மக்களுக்கு உரிய தற்காப்புப் பயிற்சிகளை வழங்காத அரசுத் தரப்பு, பேரிடர் ஆபத்துகள் வந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என்பதையும் அறிவிக்கவில்லை. அணு உலை செயல்பாட்டால் ஏற்கெனவே மக்கள் அனுதினமும் உயிர்நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு அணு உலைகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அனுதின மரண அவதியிலிருந்து கூடங்குளம் மக்களைக் காப்பாற்றவும், உரிய தற்காப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்கவும் அரசுத் தரப்பு உடனடியாக முன்வர வேண்டும்.

12. தமிழக மீனவர் பிரச்னையில் கடந்தகால‌ காங்கிரஸ் அரசுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில், பாரதீய ஜனதா அரசும் பாராமுகம் காட்டி வருகிறது. தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு எள் முனையளவும் முனைப்பு காட்டவில்லை. ‘எல்லை மீறும் தமிழக மீனவர்களைச் சுடத்தான் செய்வோம்’ என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பகிரங்கமாகவே சொல்கிறார். சொந்த நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களின் படகுகளைப் பறித்தும், வலைகளை அறுத்தும் சிங்கள அரசு செய்யும் அடாவடி இந்த அரசுக்கு அவமானமாகவோ வலியாகவோ படவில்லை. தமிழக மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத்தீவு மீட்பில்தான் அடங்கி இருக்கிறது. கச்சத்தீவு தமிழர்களின் சொத்து. தமிழர்களுக்கான வாழ்விடம். அதனை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததுதான் மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்குமான காரணம். எனவே, கச்சத்தீவை மீட்பதே மீனவத் துயரங்களுக்குமான ஒரே மீட்பு. இதற்கான முயற்சியை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். தமிழக மீனவர்களின் காலாகாலக் கதறல்களை மனதில் கொண்டு மத்திய அரசும் இதற்கான வழிவகைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கிடையில், மண்ணைக் கூறுபோட்டுக் கொடுக்கும் தீவினைகள் போதாது என எண்ணி, கடல் வளத்தைக் கூறுபோடும் கொடூரத்தையும் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இந்தியக் கடல் பரப்பைப் பன்னாடுகளுக்குக் கூறுபோடும் மீனாகுமாரி அறிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் நாம் தமிழர் கட்சி, அத்தகைய மேற்கொள்ளலை மத்திய அரசு செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் நாம் தமிழர் கட்சி மிகத் தன்மையாகச் சொல்லிக்கொள்கிறது.

13. தாய் மொழிச் சிதைவு என்பது பெற்ற தாயைச் சிதைக்கும் கொடூரத்துக்கு நிகரானது. தொன்மைச் சிறப்பும் பாரம்பரியப் பெருமையும் கொண்ட தாய்மொழித்
தமிழோடு பிறமொழி கலந்து பேசுவதை ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் மனக் கட்டுப்பாடு கொண்டு உடனடியாகக் கைவிட வேண்டும். நாக்கைத் திருத்தாமல் நாட்டைத் திருத்த முடியாது. மொழிச் சிதைவைக் காக்க வேண்டிய கடமை கலை உலகத்தினருக்கே முதன்மையாக இருக்கிறது. திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறை, ஆபாசக் காட்சிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது பிறமொழிக் கலப்போடு வசனங்களைப் பேசுவது. பெரிய திரை மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் பிறமொழிக் கலந்து பேசுவதை அறவே கைவிட வேண்டும். ‘தலைக்கனம் அகற்றுவதே கலைக்குணம்’ என்பார்கள். அதற்கேற்ப மேதாவித்தனமாகப் பார்க்கப்படும் ஆங்கிலக் கலப்பை அடியோடு அகற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ்க் கலைஞ‌ர்களுக்கும் இருக்கிறது. தாய்மொழி காக்கும் இந்த மகத்துவப் பணிக்கு ஒவ்வொரு தமிழர் இதயங்களும் இன்றே தயாராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

14. வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அந்நிய தேசங்களில் இரத்தத்துக்கு நிகராக வியர்வை சிந்தி, அதற்கான ஊதியமோ அங்கீகாரமோ இல்லாமல் நம்மவர்கள் துயர்படும் நிலையைக் கேட்கிற போதெல்லாம் தாங்கொணா வேதனை மேலிடுகிறது. எத்தகைய வளங்களுக்கும் குறைவில்லாத நம் தமிழகத்தில் உரிய வேலை வாய்ப்புகள் பெருகாமல் போனதும், அதற்கான முன்னெடுப்புகளை அரசோ தனியார் பெருமுதலாளிகளோ செய்யாமல் போனதும் வேதனையானது. தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடுவதாகச் சொல்லப்படும் புள்ளிவிபரத்தைச் சுலபத்தில் புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், உரிய திட்டமிடலை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். எந்த வேலையும் அற்ற மனநிலை இளைய சமூகத்தை எத்தகைய அபாயத்தின் பக்கமும் திருப்பிவிடும் என்பதை அரசு நுட்பமாக உணர வேண்டும். ஏற்றுமதி வாய்ப்புகள் நிறைந்த திருப்பூர் பகுதியில் மட்டும் ஒரு கோடி பேர் வேலை வாய்ப்புப் பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய முடியும் என்கிறார்கள் அங்கிருக்கும் தொழில் வள ஆர்வலர்கள். எனவே, உரிய வேலை வாய்ப்புகளை இங்கேயே ஏற்படுத்தி இளைய சமுதாயத்தை வளமானதாகவும் நலமானதாகவும் மாற்றி, அதன் மூலமாக தொழில் வளத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

15. காலம் காலமாகத் தொடரும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்து ஆணுக்குச் சமம் பெண் என்கிற நிலையையும் தாண்டி அளப்பரிய பணிகளைப் பெண்கள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். சுயதொழில் செய்வது தொடங்கி கனரக வாகனங்கள் இயக்குவது வரையிலான அத்தனை விதமான பணிகளையும் செய்து, தன்மானத்திலும் வருமானத்திலும் பெண்கள் உயர்ந்து நிற்கிற காலம் உருவாகிவிட்டது. தந்தை பெரியார் கண்ட கனவு நனவாகும் இத்தகைய உயரிய சூழலிலும் பெண்கள் மீதான தாக்குதலும், பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கும், பாலியல் தொந்தரவுகளும், இணையதளச் சீண்டல்களும், அமில வீச்சுகளும் பெருகியபடியே இருப்பது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. வளர்ச்சியை நோக்கிய பெண்களின் பயணம், பல நூற்றாண்டு நெருக்கடிகளை நெட்டித்தள்ளிக் கிளம்பியிருப்பது. அதனை வேகம் குறையாமல் முன்னோக்கி அழைத்துச் செல்வது அரசு தொடங்கி ஒவ்வொரு ஆண் மகனுக்குமான கடமை. பெண்களுக்கு எதிரான செயல்களைப் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைப் பாய்ச்சியும், பெண்களுக்கு உரிய பாதுகாப்புகளைச் செய்து கொடுத்தும், கலை தொடங்கி சுய தொழில் வரையிலான அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவப்படுத்தியும் பெண்களின் வளர்ச்சியை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி மிகுந்த அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது.