மரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான்

31

இந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் அவர்கள் மூவரும் இன்று தூக்குக் கொட்டடி முன் நிறுத்தப்பட்டுள்ள‌னர்.உலகம் நாகரீகமான முறையில் எவ்வள‌வோ வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தண்டனை முறைகள் தவறு செய்த மனிதனைத் திருத்துமாறு இருக்க வேண்டுமே  தவிர அவனைச் சட்டத்தின் பெயரால் கொலை செய்வதாக இருக்கக் கூடாது.கல்வியிலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்விலும் மிகவும் மேம்பட்ட இன்றைய நாகரீக உலகம் மரண தண்டனையை, ஒரு கொடுங்குற்ற‌மாகக் கருதுகிறது.அதனால் தான் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், உலகத்துக்கே அகிம்சை போதித்ததாகக் கூறும் இந்தியாவில் தான் மரண தண்டனை இருக்கிற‌து.

அரசியல் குறுக்கீடற்ற‌ நேர்மையான,சுதந்திரமான,விசாரணை முறைகள் நமது காவல்துறை அமைப்பில் இல்லை. குற்ற‌ம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிருபிக்கும் முழுமையான‌ வாய்ப்பு இந்தியாவில் அளிக்கப்படுவது இல்லை.3 தமிழர்கள் இன்று தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருப்பதும் அவ்வாறே.இதனை மாற்றி அமைக்கும் சமூகக் க்டமை நம் அனைவரின் முன்பும் இருக்கிற‌து. ஆகவே நீதியின் படியும் நியாயத்தின் படியும் தவறிழைக்காத நம் உறவுகள் 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

முதற்கட்டப் பயணத்திட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

26 ஆகஸ்டு-பல்லடம்

27 ஆகஸ்டு–திருச்சி

28-ஆகஸ்டு-நெல்லை

29-ஆகஸ்டு-கடலூர்

31-ஆகஸ்டு-கோவை

2-செப்டம்பர்-மன்னார்குடி.

அனைத்துக் கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன். இது தவிர அனைத்து ஊர்களிலும் தமிழர்கள் கருத்தரங்கு,பரப்புரையை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.ஆகவே மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் என்னும் பதாகையின் கீழ் நடைபெறும் இந்தக் கூட்டங்களுக்கு தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாய் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.