ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்

61

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், தனது 3 நாள் இந்திய பயணத்தின் முடிவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்த பொழுது இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு இரு அரசுகளின் சார்பாக ஊடகங்களுக்கு ஒரு கூட்டறிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டறிக்கையில் இலங்கை அமைச்சரின் இந்தியப் பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ஒரு இடத்திலும் குறிப்பிடப்படாதது வியப்பளிக்கிறது.

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளிவந்து பன்னாட்டுக் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சரின் பயணம், அந்த அறிக்கைக்கு எதிராக டெல்லி அரசின் ஆதரவைப் பெறுவதற்காகவே என்று இலங்கையின் ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றி விவாதித்ததாக ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை!

“இரு தரப்பு உறவுகள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் பொதுவாக கவலையளிக்கும் மண்டல, பன்னாட்டு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்றுதான் பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. “இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் (issues of common concern) பிரச்சனைகளில் ஒன்றாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளதா? என்ற வினா எழும்புகிறது.ஆனால் பதில் இல்லை.

ஏனெனில், “இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீள்குடியமர்த்தல் மற்றும் இணக்கப்பாடு தொடர்பான பிரச்சனைகளின் மீது அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக” அமைச்சர் பெய்ரீஸ் கூறினார் என்றும், “தமிழ் மக்களின் மீள் குடியமர்த்தல், உண்மையான இணக்கப்பாடு, இன்னமும் முகாம்களில் உள்ள தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்படுவது, அவசர நிலை சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறுவது, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றை சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கேட்டுக்கொண்டார்” என்றும் கூட்டறிக்கையின் 5வது பகுதியில் கூறப்பட்டுள்ளது. இதுநாள் வரை வராத ’அக்கறை” இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு திடீரென்று வந்துள்ள ”மர்மம்” என்ன?

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றமும், தமிழர் நகரங்களின் பெரும்பகுதி சிங்கள இராணுவப் பகுதிகளாக (கண்டோன்மெண்ட்) ஆக மாற்றப்பட்டு, இராணுவ முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறதே, அப்படியானால் அங்கு இதுநாள்வரை வாழ்ந்த மக்கள் எங்கே குடியேற்றப்பட்டார்கள்? இந்திய அரசு இந்த வினாவை எழுப்பியதா? என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே தமிழ்த் தேச கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் பேசினாரே, அதனை சிங்கள அரசு இதுவரை மறுக்கவில்லையே? இப்படிப்பட்ட நிலையில், மீள் குடியமர்த்தலை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதில் என்ன அர்த்தம் உள்ளது?


தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட “மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இலங்கை அமைச்சர் என்ன பதில் கூறினார் என்ற விவரம் இல்லை. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ஆகியன பற்றி பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அது குறித்து பதில் ஏதும் சொல்லாமல் இந்திய அரசு கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?


ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை வெளியாவதற்கு முன்பு வரை, இந்தியாவின் பல்வேறு வர்த்தக எதிர்பார்க்காமல் பிடி கொடுக்காமல் இழத்தடித்து வந்த ராஜபக்ஷே அரசு, இப்போது சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கவும், காங்கேசன் துறைமுகத்தை மேம்படுத்தவும், பலாலி விமான தளத்தை மறுசீரமைக்கவும், பலாலி – காங்கேசன் துறை இடையே இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஏற்கவும், புதிய தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞை அமைப்பு இந்தியாவின் உதவிடன் நிறுவவும், இதுநாள் வரை சம்மதிக்க மறுத்துவந்த இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (Comprehensive Economic Partnership Agreement – CEPA) ஏற்க முன்வந்திருக்கிறது.மேலும் இலங்கையின் ஒட்டுமொத்த மின் அமைப்பையும், இந்தியாவின் (தமிழ்நாட்டின் ஊடாக) மின் அமைப்புடன் இணைப்பது என்று பல்வேறு பொருளாதார  ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறது.ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரையால் கலங்கிப்போய் இருக்கும் ராஜபக்ஷே அரசைக் காப்பாற்ற இந்திய அரசு உறுதியளித்திருப்பதற்கு ‘கைம்மாறாக’ சிங்கள அரசு மேற்கண்டவற்றை நிறைவேற்ற முன்வந்திருக்கிறது.

ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் படி இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விரும்புகிறார்கள்.

ஆகவே இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாகப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். வழக்கம் போல் இதற்கும் பதில் கூறாமல், தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சவிற்கு எல்லா விதத்திலும் இரகசியமாக உதவியதுபோல், இப்பிரச்சனையிலும் இந்திய அரசு கள்ள மவுனம் காக்குமெனில், மறைமுகமாக விசாரணைக்குத் தடைபோடும் முயற்சியில் ஈடுபடுமெனில், இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணையில் இந்திய அரசையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் என்று தமிழர்களாகிய நாங்கள் பன்னாட்டு அளவில் குரல் எழுப்புவோம் என்பதை எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன்.

முந்தைய செய்தி2ஆம் இணைப்பு : மே 18 பேரணி பொதுகூட்டம் படங்கள்
அடுத்த செய்திஎன்ன செய்யலாம் இதற்காக? – ஆவண நூல் இலங்கை அரசால் பறிமுதல்