பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் – சீமான்.

37

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில்  அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை  விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்தில் அங்கு  தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது. முகாம்களில் உள்ளவர்களை உறவினர்களோ, வழ‌க்க‌றிஞரோ பார்க்க வேண்டும் என்றால் அரசின் அனுமதி பெற வேண்டும். அது என்றும் கிடைப்பது இல்லை.அதிலும் பூந்தமல்லி முகாம் அமைந்துள்ள இடம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கான உயர் பாதுகாப்பு சிறையாக இருந்த இடமாகும். அங்கு முகாமினைச் சுற்றிலும் மதில் மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. உள் இருக்கும் ஒவ்வொரு அறையும் நாஜிகளின் சித்திரவதைக்கூடம் போல் இருக்கிறது. முகாமிற்கு மேற்கூரை என்று எதும் இல்லை. கம்பிகள் தான் வேயப்பட்டுள்ளது. கடும் வெயிலோ பெரு மழையோ, குளிரோ அப்படியே உள்ளே இருப்பவர்களைப் பாதிக்கிறது. முகாமினைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் காவலர்கள் மற்றும் உளவுத்துறையினர் நிறுத்தப்பட்டு அந்த இடம் பயங்கரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் தமிழக அரசின். இந்த செயலானது மனித நேயத்திற்கு முற்றிலும் எதிரான செயல். சிறையை விடக் கொடுமையாக இருக்கும் இடத்தை முகாம் என்று கூறி அடைத்து வைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. தற்பொழுது பூந்தமல்லியில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி 5 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்புகின்றனர். அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர். இந்த அவல நிலை தொடராமல் இருக்க நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

முந்தைய செய்திநாகை இளைஞர் அணி பாசறை அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
அடுத்த செய்திஅரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு