மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற – இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது, தோல்விகளால் சோர்ந்துவிடாது,
தம்முடைய கடும் உழைப்பாலும் அயாராத முயற்சியாலும் மதுரா டிராவல்ஸ் எனும் மிகப்பெரிய பயணத் திட்ட நிறுவனத்தை உருவாக்கிய தொழிற்துறை முன்னோடி! ஐயா பாலன் அவர்கள் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆண்டு முழுவதற்குமான 24/7 பயண சேவையை உருவாக்கிய சாதனையாளர்!
வாழ்வில் சாதிக்க துடிக்கும் தமிழிளம் தலைமுறையினருக்கு தம்முடைய அனுபவங்களையே பாடங்களாக கற்பித்து ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி ஆகச்சிறந்த வழிகாட்டியாய் திகழ்ந்தவர்!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்து அவர்களின் உயர்வுக்கு கை கொடுத்த பெருந்தகையாவார்!
தாய்த்தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும், மக்களின் மீதும் பெரும்பற்றுகொண்ட ஐயா பாலன் அவர்கள், தமிழீழ மக்களுக்கு பேருதவி புரிந்து, தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பை பெற்ற
பெருமைக்குரியவர்!
நாம் தமிழர் கட்சியின் மீது அக்கறையும் அதன் வளர்ச்சியின் மீது நம்பிக்கையும் கொண்டிருந்தவர். என்மீது பேரன்புகொண்ட ஐயா பாலன் அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு நிகழ்ந்துள்ள பேரிழப்பாகும்.
ஐயாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தொழிற்துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
பெருந்தமிழர் ஐயா பாலன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
https://x.com/Seeman4TN/status/1856233369811710254?t=DhTVxLmdGTDD0Gimk03t7A&s=19
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி