குவைத் நாட்டின் தென் பகுதியான மங்காப் பகுதியில் 14-06-2024 அன்று அதிகாலை 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடியிருந்த அடுக்ககக் குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 தமிழர்கள் உட்பட இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த 53 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் வருகின்ற செய்திகள் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் தருகின்றன.
பொருளாதாரத் தேவைகளுக்காகப் பாலைவன தேசங்களில் பணிபுரியச் சென்று, பல்வேறு குடும்பப் பொறுப்புகளையும், கனவுகளையும் சுமந்து, கடும் துன்பங்களைத் தாங்கி, அயராது உழைத்து வரும் சகோதரர்கள் எதிர்பாராத இக்கோரத் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் மனவலியைத் தருகிறது.
தீவிபத்தில் உயிரிழந்த அனைத்து சகோதரர்களின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
மேலும் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் உயரிய சிகிச்சையளித்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிட ஆவன செய்யுமாறும், உயிரிழந்தவர்களின் திருவுடலை அவரவர் சொந்த ஊர்களுக்கே உரிய முறையில் விரைந்து அனுப்பிடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய துயர்துடைப்பு நிதியை உடனடியாக வழங்கிடுமாறும் இந்திய ஒன்றிய அரசையும் மற்றும் மாநில அரசுகளையும் வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்!
https://x.com/Seeman4TN/status/1800940228091228471
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி