நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்!

239

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 13-01-24 அன்று, சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி அரங்கில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான சட்டத்தரணி தடா சந்திரசேகரனார் அவர்களது மறைவானது நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது, தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக தாய்த்தமிழ்நாட்டில் துணிந்து வழக்காடி, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பேரன்பையும், நன்மதிப்பையும் பெற்ற பெருந்தகை! தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழீழம், தமிழ்த்தேசியம் என இனத்தின் விடுதலைக்காகவும், விடியலுக்காகவும் அரும்பாடாற்றி, அதனை வாழ்நாள் கடமையெனக் கருதி, இனமானப் பணியாற்றிய பெருமகன்! நாம் தமிழர் கட்சி தொடங்கப்படுவதற்குக் காரணமான மூலவர்களுள் ஒருவராக இருந்து, தனது இறுதி மூச்சுவரை கட்சியின் வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கும் பெரும் தூணாகவும், துணையாகவும் நின்ற பெருந்தமிழர்! நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் மட்டுமல்லாது, உலகத்தமிழ்ச்சொந்தங்களால், ‘மூத்தவர்’ என உரிமையோடும், அன்போடும் அழைக்கவும், விளிக்கவும் பட்ட தடா சந்திரசேகரனார் அவர்களது மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தை இப்பொதுக்குழுவின் வாயிலாகச் செலுத்துகிறது.

2. தமிழர்களின் அறிவுசார் சொத்தாக விளங்கிய கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களது மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும். தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளை கடல்வழியே தேடி, தமிழினத்தின் தொன்மத்தையும், பெருமிதங்களையும் ஆவணப்படுத்தியவர்! ஆய்வுக்கட்டுரைகள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் தமிழர்களின் பழம்பெருமைகளை உலகறியச் செய்தவர்! தமிழினத்தின் வேரைத் தேடி வாழ்நாள் முழுமைக்கும் ஓடிய அவரது கால்கள் இன்று ஓய்ந்திருப்பது பெருந்துயரமாகும். தமிழினத்திற்குத் தொண்டு செய்வதையே தனது அருந்தவப் பயனென வாழ்ந்து மறைந்த பெருந்தகை ஒரிசா பாலு அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தை இப்பொதுக்குழுவின் வாயிலாகச் செலுத்துகிறது.

3. கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டப் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் உரிய துயர்துடைப்புப் பொருட்களைத் தந்து உதவியவர்களுக்கும், தங்களால் இயன்ற பொருட்களைக் கொடுத்த கருணை உள்ளங்களுக்கும், அந்த நேரத்தில் தோளுக்குத் துணையாக நின்று அயராது உழைத்த அன்பு நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் இப்பொதுக்குழுவின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4. தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இனவெறி இராணுவத்தின் தொடர் தாக்குதல்களைத் தடுக்கவும், தமிழர்களின் பாரம்பரிய சொத்தான கச்சத்தீவை மீட்டெடுக்கவும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முனைப்போடு செயல்பட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்கு மாநிலத்தை ஆளும் திமுக அரசு உரிய அரசியல் நெருக்கடியைக் கொடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

5. சனநாயகத் திருவிழாவென வர்ணிக்கப்படும் தேர்தல் அமைப்பு முறையில் எவ்வித முறைகேடும் நடைபெறாவண்ணம் தடுக்கவும், மக்களுக்கு மக்களாட்சி அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கைப் பிறக்கவும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். மக்களுக்கு வாக்கு இயந்திரங்களின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டிருப்பதாலும், அவ்வகை இயந்திரங்களில் மோசடித்தனங்கள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாலும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதுபோன்று வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

6. ஆணுக்குப் பெண் சமமில்லை; ஆணும், பெண்ணும் சமமெனும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் விதத்தில் வேலைவாய்ப்பு, அதிகாரப்பகிர்வு, கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு என எல்லா இடத்திலும் பெண்களுக்கும் 50 விழுக்காடு சரிபாதி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் இருப்பதுபோல, பெண்களுக்கும், திருநங்கை, திருநம்பிகளுக்கும் தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமெனவும் இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

7. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, தங்களது தார்மீக உரிமைகளைக் கேட்டுப் போராடும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அறவழிப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோமெனவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் எனவும் கடந்த காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிய திமுக, இன்றைக்கு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததும், அவை யாவற்றையும் மறந்துவிட்டு, தொழிலாளர்களை ஏமாற்றுவது வாக்குச்செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத்துரோகமாகும். அரசுத்துறை நிறுவனத்தில் அயராது பணியாற்றி வரும் போக்குவரத்துத்தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியப்பயன்களையும், அவர்களுக்கு உரிய அகவிலைப்படி உயர்வையும் தர மறுப்பது கொடுமையான சுரண்டல் போக்காகும். ஆகவே, போக்குவரத்துத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்து, தொழிலாளர்களின் வாழ்வுரிமையைக் காக்க மாநிலத்தை ஆளும் திமுக அரசு முன்வர வேண்டுமென இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

8. சாதி எனும் சமத்துவமற்றக் கட்டமைப்பைத் தகர்க்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமனியச்சமூகம் படைக்கவும் இருக்கும் ஒரே வாய்ப்பான வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் நிலைநிறுத்த குடிவாரிக்கணக்கெடுப்பு பேரவசியமானதாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவும், வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்காது, அளந்துகொடுக்கவும் குடிவாரிக்கணக்கெடுப்பை உடனடியாக எடுக்க மாநிலத்தை ஆளும் திமுக அரசு முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டும். பீகாரில் அம்மாநிலத்தை ஆளும் அரசே குடிவாரிக்கணக்கெடுப்பை செயலாக்கம் செய்திருப்பதை முன்மாதிரியாகக் கொண்டு, குடிவாரிக்கணக்கெடுப்பை எடுத்து, விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடங்களைப் பகிர்ந்தளித்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென ஆளும் திமுக அரசை இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

9. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சாதிய ஆணவப்படுகொலைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மனமொத்து திருமணம் செய்யும் இணையரை சாதி, மதம், வர்க்கம் எனும் காரணிகளின் பொருட்டு வாழவிடாது தடுப்பதும், ஆணவக்கொலைகளை செய்வதுமான போக்கு மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும். ஆகவே, சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமென ஆளும் திமுக அரசை இப்பொதுக்குழுவின் வாயிலாக வலியுறுத்துகிறது.

10. பல ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளது முன்விடுதலையில் உளப்பூர்வமாகச் செயல்பட்டு, அவர்களை விடுதலையை உறுதிசெய்ய வேண்டிய திமுக அரசு, அதனை செய்யாது ஆளுநரைக் காரணமாகக் காட்டி காலங்கடத்துவதும், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக விடுதலைப் பெற முற்படும் இசுலாமிய சிறைவாசிகளது விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக நீதிமன்றத்தில் வாதங்களை வைப்பதும் வெளிப்படையான மோசடித்தனமாகும். ஏற்கனவே, இசுலாமிய சிறைவாசிகளது விடுதலைக்குப் பாதிப்பை விளைவிக்கும் வகையில், அரசாணை வெளியிட்டதும், அதனைத் திரும்பப் பெறாத நிலையில், ஆதிநாதன் தலைமையிலான குழுவொன்றை அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித முன்நகர்வும் இல்லாதிருப்பதுமான செயல்பாடுகள் மூலம் திமுக அரசு செய்வது அடையாள அரசியலென்பது தெளிவாகிறது. ஆகவே, இனிமேலாவது இசுலாமிய சிறைவாசிகள் விடுதலையில் விரைந்து செயலாற்றி, அவர்களை வெளியே கொண்டு வர வேண்டுமென ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

11. அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைகளைக் கொடுத்து, ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் அக்கொலையாளிகளைக் கைதுசெய்யாது காப்பாற்றி வரும் திமுக அரசு, தற்சமயம் அத்துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கியிருப்பது ஏற்கவே பெருங்கொடுமை; மண்ணின் மக்களுக்கு திமுக அரசு விளைவித்திருக்கும் பச்சைத்துரோகம்! அதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதே நிலை தொடருமானால் மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போமென நாம் தமிழர் கட்சி ஆளும் திமுக அரசை எச்சரிக்கை செய்கிறது. ஆகவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறையினர், அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி இப்பொதுக்குழுவின் வாயிலாக வலியுறுத்துகிறது.

12. காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதல் பன்னாட்டளவில் பேசுபொருளாகியிருக்கும் வேளையில், ஆளும் திமுக அரசு சூழலியலுக்கு முதன்மைத்துவம் வழங்கி, தொழிற்கொள்கையை வகுக்க முன்வர வேண்டும். அந்தவகையில், கூடங்குளத்தில் புதிதாக அணு உலைகளும், அணுக்கழிவு மையமும் அமைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடுவதற்குரிய ஏற்பாட்டினை செய்து, மாற்று மின்பெருக்கத்தை உருவாக்க முன்வர வேண்டும். இத்தோடு, விளை நிலங்களையும், இயற்கைச்சூழலையும் அழிக்கும் பரந்தூர் வானூர்தி நிலையம், எட்டுவழிச்சாலை திட்டம், மேல்மா தொழிற்பேட்டை விரிவாக்கம், உத்தனப்பள்ளி தொழிற்பேட்டை விரிவாக்கம், சூழலியலுக்கு எதிரான நச்சு ஆலைகள், இராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம், எண்ணூர் அனல் மின்நிலையம், கோத்தகிரி ‘லாங்வுட் சோலா’ வனத்தில் சுற்றுலா தளம் அமைத்தல் போன்ற நிலத்தையும், நீரையும், காற்றையும் நஞ்சாக்கும் திட்டங்களையும், ஆலைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க ஆளும் திமுக அரசு முன்வர வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

13. நீரோடைகள், நீர்நிலைகள், வாய்க்கால்கள் ஆகியன அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களை சிறப்புத்திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கவே, ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டமசோதா – 2023’ உருவாக்கப்பட்டுள்ளது. பரந்தூர் வானூர்தி நிலையம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் ஆகிய மக்கள் விரோதத் திட்டங்களுக்காக நிலங்களைக் கையப்படுத்தத் துணைபுரியும் இச்சட்டத்திருத்தத்தை உடனடியாகத் திரும்ப பெற வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

14. சிங்கள இனவெறி அரசும், இந்தியப் பேரரசும் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு ஈழ நிலத்தில் நிகழ்த்திய திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நடந்தேறி, பதினான்கு ஆண்டுகளாகியும் இன்னும் எவ்வித நீதியும் கிடைக்கப் பெறவில்லை. தமிழினப் படுகொலையை முன்நின்று நடத்திய மகிந்தா ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட எவரும் விசாரிக்கப்படவுமில்லை; தண்டிக்கப்படவும் இல்லை. உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் தமிழினப்படுகொலைக்கு பன்னாட்டரங்கில் நீதிகேட்டு நிற்கிறார்கள். எட்டுகோடி தமிழர்களின் குரலாக அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடையையும், பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும் கோரியது. ஆகவே, இலங்கை மீது ஒரு தலையீடற்ற பன்னாட்டு இனப்படுகொலை விசாரணை செய்யவும், ஈழத்தில் வாழும் தமிழர்களிடமும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பை நடத்தவுமான முன்னெடுப்புகளை செய்வதுதான் இறுதித்தீர்வாக இருக்கும். அதனைவிடுத்து, 13வது சட்டத்திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைத்து, நடைமுறைப்படுத்த முற்படுவது என்பது மோசடித்தனமாகும். அச்சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரப்பகிர்வையோ, சமஉரிமையையோ, நீதியையோ ஒருநாளும் கிடைக்கச்செய்யாது; எந்தப் பயனையும் அது தமிழர்களுக்கு விளைவிக்காது என்பதனை உணர்ந்தே, தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அச்சட்டத் திருத்தத்தைத் தொடக்க நிலையிலேயே நிராகரித்தார். ஆகவே, இலங்கை மீது பன்னாட்டு இனப்படுகொலை விசாரணை செய்யவும், கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் ஆகிய நாடுகள் தனிநாடாகப் பிரிவதற்கு மேற்கொள்ளப்பட்டது போல ஈழச்சொந்தங்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தவும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

15. சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார் பெருந்தகையைப் போற்றி வணங்குவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இடமான வடலூர் பெருவெளியை திமுக அரசு கையகப்படுத்த முடிவெடுத்திருப்பது ஏற்புடையதல்ல. வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையம் அமைப்பதற்காகத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது எனக் காரணம் கற்பிக்கப்பட்டாலும், விழாக்காலங்களில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் வடலூர் பெருவெளியில் ஆய்வு மையம் அமைத்தால், அங்கு இடவசதியின்மை ஏற்படுவதோடு, விழாக்காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நிகழவும் வாய்ப்பேற்படும். எனவே, வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையத்தை வேறிடத்துக்கு மாற்றி, வடலூர் பெருவெளியைக் கையப்படுத்தும் முடிவை ஆளும் திமுக அரசு கைவிட வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

16. தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் வகையில் மிதமிஞ்சிய வகையில் நடைபெறும் வடமாநிலத்தவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தவும், கலப்பினத்தாயகமாக தமிழ்நாடு மாறும் பேராபத்தைத் தடுக்கவும் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போன்று உள்நுழைவுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் வாக்குரிமை கொடுக்கப்படக்கூடாது எனவும் இப்பொதுக்குழுவின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

17. கட்சி தொடங்கப்பட்ட நாள்தொட்டு இன்றுவரை சிறு சமரசத்திற்கும் ஆட்படாத நாம் தமிழர் கட்சி, தனது இலக்கு நோக்கியப் பயணத்தில் தெளிவாகவும், தீர்க்கமாகவும் பயணித்து வருகிறது. அந்தவகையில், கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது போலவே, வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்குகிறது என்பதைப் பெருமிதத்தோடு இப்பொதுக்குழு பறைசாற்றுகிறது. இத்தோடு, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் விதத்தில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கி, மாற்று அரசியல் புரட்சியை தேர்தல் களத்திலே நிகழ்த்திக் காட்டி, அத்தனை இடங்களையும் தனதாக்கி, வெற்றிவாகை சூடிட சூளுரைக்கிறது என்பதை இப்பொதுக்குழுவின் வாயிலாகப் பேரறிவிப்பு செய்கிறோம்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஉலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா! – சீமான் வாழ்த்து