திரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்து மறைவு! – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

88

திரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர், என்மீது பேரன்பும் பெரும்பற்றும் கொண்ட என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன்.

தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தபோது சென்னை உதயம் திரையரங்கத்தில் வாசலில் அண்ணன் அறிவுமதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு
முதன் முதலாக சகோதரர் மாரிமுத்துவை சந்தித்த அந்த இரவில், பார்த்து முடித்த பிறகு தேவர் மகன் திரைப்படம் எங்கள் இருவருக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கோடம்பாக்கம் வரை விடிய விடிய பேசி நடந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடுகிறது. நான் இயக்கிய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியில் உதவி இயக்குநராக சிறப்புற பணியாற்றிவர். தீவிரமான இலக்கிய வாசிப்பாளர். ஓவியம் தீட்டுவதுபோல் மிக அழகாக எழுதக்கூடிய திறமைப் பெற்றவர்.

உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய போதும், நடிப்பின் மீதும் தீராக்காதல் கொண்டவர். நடிப்பில் அவருக்கே உரித்தான கம்பீரமான உடல்மொழியும், மதுரை வட்டார வழக்கும் அவருக்கென்று தனித்த அடையாளத்தைப் பெற்று தந்தது.

இளமைக்காலத்தில் கிடைக்கப்பெறாத வாய்ப்புகளை எல்லாம் தமது அளப்பரிய கலைத்திறமையின் மூலமும், விடா முயற்சியின் மூலமும் 50 வயதுகளுக்கு பிறகு பெற்று, சின்னத்திரை, வெள்ளித்திரை என்று அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை தவறவிடாது அதற்கென இரவுபகலாக கடும் உழைப்பினை செலுத்தியவர்.
அவரது அசாத்தியமான உழைப்பு கலையின் மீதான அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கான சான்றானபோதும், உடல்நலத்தை கவனிக்காத உழைப்பு அவருடைய உயிரையே பறித்துவிட்டதைத்தான் ஏற்க முடியவில்லை. அவருடைய திரைக்கலை ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்த முடியாமல் போனது தமிழ் கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பேயாகும்.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாகவே வாழ்ந்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்த அவருடைய புகழ் உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில், அப்பா மணிவண்ணன் போல பன்முக திறன் கொண்ட கலைஞராக மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது. நான் அரசியல்துறைக்கு வந்துவிட்ட பிறகும், பல நேர்காணல்களில் என்மீதான பேரன்பினை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்திய அவரது மறைவு
தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அன்புச் சகோதரர் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.

சகோதரர் மாரிமுத்து அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – திருச்சி மேற்கு