முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.இராசு அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் புகழ்வணக்கம்

167

முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா புலவர் செ.இராசு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

ஈரோட்டில் தமிழாசிரியராக தமது பணி வாழ்வினைத் தொடங்கிய ஐயா செ.இராசு அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் குறித்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு அரும்பணி புரிந்த பெருமைக்குரியவர். ஓலைச்சுவடிகள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டதோடு, தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவவும், ஆண்டுதோறும் மாணவர்களை தொல்லியல் சுற்றுலா அழைத்துச் செல்லவும் வழிகோலியவர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறைத் தலைவராகச் சிறப்புற செயலாற்றிய ஐயா அவர்கள், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து தமிழர்களின் இசையறிவையும், கொடுமணம் அகழாய்வு மூலம் தமிழர்களுடன் ரோமானியர் கொண்டிருந்த தொடர்பைக் கண்டறிந்து நொய்யல் ஆற்றங்கரை நாகரீகமென உலகிற்கு வெளிப்படுத்திய புகழுக்குரியவர்.

தமிழ்ப்பண்பாடு, வரலாறு, சமயம், இலக்கியம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி தமிழன்னைக்கு அணி செய்த பெருந்தகை புலவர் செ.இராசு அவர்களின் இழப்பு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஐயா அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ்ப் பற்றாளர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

போற்றுதற்குரிய ஐயா புலவர் செ.இராசு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திபொறுப்பாளர் நியமனம் – இராமநாதபுரம் தொகுதி