நெல்லை அருகே வாகனவிபத்தில் சிக்குண்ட செய்தியாளர் குழுவினர் | புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழப்பு – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

107

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி ஐயா நம்பி நாராயணன் அவர்களைச் சந்தித்து, நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 குறித்து நேர்காணல் எடுப்பதற்காக, நேற்று (23.08.23) மாலை திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற செய்தியாளர் குழுவினரின் வாகனம், திரும்பும் வழியில் நள்ளிரவில் நிகழ்ந்த எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கியதில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி சங்கர் உயிரிழந்ததோடு, அவருடன் பயணித்த அன்புத்தம்பிகள்
புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், நியூஸ்7 தமிழ் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் மற்றும் ஒளிப்பதிவாளர் நாராயணன் ஆகியோர் படுகாயமடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த தம்பி சங்கரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.

அரசின் நடவடிக்கைகளையும், அன்றாட நிகழ்வுகளையும், பேரிடர் காலச் சூழல்களையும் உடனுக்குடன் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் அர்ப்பணிப்புமிக்க பெரும்பணி புரியும் ஊடகத்துறை உறவுகள் தங்கள் உடல் நலத்திலும், உயிர்ப் பாதுகாப்பிலும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுத்தருவது எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட பன்மடங்கு உங்களின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் நீங்கள் முக்கியம் என்பதை உணர்ந்து பயண நேரங்களில் மிகுந்த கவனமுடன் பயணிக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு, விபத்தில் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உயர்தர மருத்துவமும், தலா 10 இலட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியும், வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புத்தம்பி சங்கர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!