இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தமிழ்நாடு அளவில் 3 ஆம் இடம் பிடித்துள்ள அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்! – சீமான்

133

திருநெல்வேலி மாவட்டம். அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி. கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர் அன்புச்சகோதரர் சங்கரன் அவர்களின் அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக் அவர்கள் தனது முதல் முயற்சியிலேயே இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் இந்திய ஒன்றிய அளவில் 118ஆவது இடத்தையும் தமிழ்நாடு அளவில் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.

‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் சங்ககால தமிழ்ப்பெண்பாற் புலவர் பொன்முடியாரின் புறநானூற்று பாடல் வரிகளுக்கேற்ப, சிறந்த தந்தையாகவும் ஆசிரியராகவும் இருந்து மகனைக் கல்வியில் சான்றோனாக்கி, வெற்றிகண்டதில் அகம் மகிழ்ந்து இருக்கும் அன்புச்சகோதரர் சங்கரன் அவர்களுக்கும் அவரது இணையர் அம்மையார் லதா அவர்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான பணியில் சிறந்து விளங்கி, மேலும் பல உயரங்களைத் தொட்டு, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வேண்டுமெனும் பேராவலைத் தெரிவித்து, அன்பு மகன் சுபாஷ் அவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி