வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

309

25-12-2022 | வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு ஆகியவை 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் நிறைவாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள் கூறியதாவது, “தமிழ் தேசிய இன மக்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த வீரமங்கை எங்களுடைய பாட்டியார் வேலு நாச்சியார் அவர்கள்.  ‘பெண் எனும் பேராற்றல்’ என்னும் மொழிக்கேற்ப வாழ்ந்த பெருமாட்டி அவர். மாதர் குலத்திற்கு அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், கட்டுரையாளர்கள் என்று எல்லோரும் ஒரு புரட்சிக்கரப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தார்களோ, எழுதினார்களோ, பேசினார்களோ அப்படிப்பட்டப் பெண்ணாக வாழ்ந்து மறைந்தவர் எங்களுடைய வீரப்பெரும்பாட்டியார் அவர்கள்.

தன் கணவர் இறந்துவிட்டப்பிறகு கைம்பெண்ணாக, வெள்ளுடை அணிந்து, இழந்த நிலத்தை நான் மறுபடியும் போரிட்டு மீட்பேன் என்ற உறுதியேற்று, அதை நிகழ்த்திக்காட்டிய வீரமறத்தி எங்களுடைய பாட்டியார். எங்களின் சேரப் பாட்டன் செங்குட்டுவன், கண்ணகிக்கு கோவில் கட்டினான். குலதெய்வமாக நாங்கள் அவளை வழிபட்டோம். ஆனால் இன்றைக்கு அந்த வழக்கம் மறைக்கப்பட்டுவிட்டது. கண்ணகி, காப்பிய நாயகி என்றாலும் அவளை நாங்கள் போற்றுகிறோம். இலக்கியம் என்பது செய்திகளைச் சுவைபடக் கூறுதல். அதனால் எங்களுடைய இளங்கோவடிகள், இலக்கியச் சுவையைக் கூட்ட, சில கற்பனைகளைச் சிலப்பதிகாரத்தில் நயம்பட எழுதியிருக்கக் கூடும். ஆனால் வரலாறு பொய் பேச முடியாது. அந்த அடிப்படையில் கண்ணகியை விட வீரத்தில் ஆகச்சிறந்த பெருமாட்டி எங்களுடைய பாட்டி வேலு நாச்சியார் அவர்கள். தமிழ்ப் பெண்குலமே தெய்வமாகப் போற்றக்கூடிய மாதர்குல அரசி எங்கள் பாட்டி. சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோவில் கட்டியது போல எங்கள் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கும் தமிழின மக்கள் கோவில் கட்டி கொண்டாடியிருக்க வேண்டும்.

காளையார் கோயில் என்ற இடத்திலே முத்துவடுகனார் தேவராகிய தன் கணவரை வெள்ளையர்கள் கொன்று விட்டார்கள் என்ற செய்தியறிந்து, கைக்குழந்தையான வெள்ளச்சியைத் தூக்கிக் கொண்டு போகிற போது, எங்களுடைய வீரப்பெரும் பாட்டன்களான மருதிருவர்கள், எங்கள் பாட்டியாரைப் போக விடாமல் தடுக்கின்றார்கள். ஆனாலும் மாறுவேடமிட்டு, அந்தப் போர்க்களத்திற்கு எங்கள் பாட்டி செல்கிறார். இறந்து போன தன் கணவர் உடலைப் பார்க்க எப்படியும் வேலு நாச்சியார் வருவார் என்று காத்திருந்த வெள்ளையர்கள், எங்கள் பாட்டியைச் சுற்றி வளைக்கின்றார்கள். அப்போது கைக்குழந்தையோடு குதிரையில் ஏறி அடர்ந்த காடு வழியே தப்பித்துச் செல்கிறார்.  அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் என்றொரு பெண்மகளிடம் வெள்ளையர்கள், “இந்தப் பக்கமாக வேலு நாச்சியார் சென்றாரா?” என்று கேட்கின்றார்கள். “ஆம் சென்றார்கள்” என்று பதிலளிக்கின்றாள். “எந்த திசையை நோக்கி சென்றார்?” என்று கேள்வி கேட்டதற்கு, “பதில் சொல்ல முடியாது” என்று மறுத்து விட்டாள். கோபமடைந்த வெள்ளைக்காரன், உடனே தன்னுடைய வாளை எடுத்து அவளை இடையிலே வெட்டினான். இரண்டு துண்டாக செத்து விழுந்தால், உடையாள்.

வெள்ளைக்காரனிடம் எங்கள் பாட்டி வேலு நாச்சியாரைக் காட்டிக் கொடுக்காமல் உயிரிழந்தாள் உடையாள் என்பதற்காக, தமிழ்ப்பேரின மக்கள் இன்றும் அவளை ‘வெட்டுடையாள் காளி’ என்று குலதெய்வமாக வழிபடுகிறோம். எங்கள் பாட்டியைக் காட்டிக் கொடுக்காத பெண் மகளே எங்கள் குலதெய்வம் என்றால், எங்கள் வீரப்பெரும்பாட்டி எங்களுக்கு எவ்வளவு பெரிய தெய்வம் என்பதை அறிவில் சிறந்த தமிழ்ப் பெருமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பன்மொழி ஆற்றல், சிறந்த போர் பயிற்சி என எல்லாம் பெற்ற பெண், தமிழின முன்னோர்களில் எங்களுடைய வீரப் பெரும்பாட்டியார் வேலு நாச்சியார் அவர்கள் தான். ஆண்களுக்கு நிகரான வீரத்தை, புலமையைப் பெற்றிருந்த மகள். அவருடைய படையில் தான் எங்களுடைய பாட்டன்கள் மருதிருவர்கள் தளபதியாக இருந்து போர் செய்தார்கள் என்பது வரலாறு.

எங்கள் பாட்டியைக் குறிப்பிடும்போது, அவளை தென்னாட்டின் ஜான்சி ராணி என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். எங்கள் பாட்டியார் பிறந்து இறந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த லக்குமி பாய் என்னும் ஜான்சி ராணி அவர்களைத் தான், நியாயத்தின்படி வடநாட்டின் வேலு நாச்சியார் என்று அழைத்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது எங்கள் இன முன்னோர்களின் வீரத்தை இருட்டடிப்பு செய்திருந்த திரிபு வரலாறுகளைக் கிழித்து எரிந்து, எங்கள் உண்மையான வரலாற்றை மீண்டும் பதிவு செய்வோம். எங்களுடைய பாட்டிக்கு, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் கட்டியதைப் போல நான் பிறந்த சிவகங்கை மண்ணிலே எங்கள் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு, அவள் வாழ்ந்த நிலத்திலே, அவள் உலவிய மண்ணிலே மிகப்பெரிய கோயிலைக் கட்டி, அவளை குலதெய்வமாக வழிபடுவோம் என்பதை மகிழ்வோடும், நெகிழ்ச்சியோடும் இந்த இடத்திலே பதிவு செய்கிறேன். எங்களுடைய வீரப்பெரும்பாட்டியார் வேலு நாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றுவதிலும், அவளுக்கு எங்கள் வீர வணக்கத்தை செலுத்துவதிலும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.

அதைப்போலவே இந்நாளில் வேளாண் கூலிகளாக இருந்த மக்கள், கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்திற்காக 44 பேரை ஒரே குடிசையில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்த அந்த கொடுஞ்செயல் மறக்க முடியாத துயரம். அதை இன்று எங்கள் தமிழ்ச் சமூகம் மறந்து கடந்து சென்று விட்டது. அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலே ‘அசுரன்’ என்ற திரைப்படத்தில் எனது அன்பு தம்பி வெற்றிமாறன், அந்த தாக்கத்தைப் பதிவு செய்திருப்பார். அந்தக் கீழ்வெண்மணி படுகொலையில் இறந்த ஈகியர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அது போன்ற ஒரு துயர நிகழ்வு இனி இந்த மண்ணில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம், அவர்களுக்கு வழங்க வேண்டிய நல்வாழ்வு ஆகியவற்றையெல்லாம் உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். இனி வரும் காலங்களில் தமிழ் தேசிய அரசு மலரும்போது இதுவெல்லாம் உறுதியாக சரி செய்யப்படும். அந்த உறுதிமொழியை ஏற்பது தான் எங்கள் கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு நாங்கள் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

 

 

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச.27, சீமான் முன்னிலையில் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாசலம்
அடுத்த செய்திபொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்