அரியலூர் மருத்துவர் ஐயா இளங்கோவனார் மறைவு தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்ட இழப்பு! – சீமான் துயர் பகிர்வு செய்தி

95

அரியலூரைச் சார்ந்த என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மருத்துவர் ஐயா இளங்கோவன் அவர்கள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு எதிர்பாராத ஒரு சூழலில் உயிரிழந்துவிட்டார்கள் என்கிற துயரச்செய்தியறிந்து நான் மிகவும் துடித்துப்போனேன்.
அரியலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மருத்துவர் இளங்கோவனார் ஆய்வு நூலகம்’ திறப்பு விழா மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஆகியவை எதிர்வரும் 10-ஆம் தேதி அன்று நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலுக்கிடையில் இப்படி ஒரு துயர நிகழ்வு நிகழ்ந்துவிட்டது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
ஐயா இளங்கோவன் அவர்கள் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் பெரும் பற்றுகொண்டு, தமிழ்த்தேசிய அரசியல் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தவர். பலரும் படித்து பயன்பெற வேண்டி, புதிய நூலகத்திற்கான இடத்தை வணிக நோக்கமின்றி வழங்க முன்வந்த பெருந்தகை.
அத்தகைய பெருமைக்குரிய தமிழ்ச்சான்றோரை இழந்திருப்பதென்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகுந்த மனவலியைத் தருகிறது. அவருடைய இழப்பு எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும்.
ஐயா அவர்களை இழந்து வாடுகின்ற குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதல்களைக் கூறி, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இளங்கோவன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி