இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் அறநிலையத் துறை என்று ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? – சீமான் கேள்வி

74

05-09-2022 | வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் – திருநெல்வேலி | சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டுப் பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று திருநெல்வேலி நகரத்தில் அமைந்துள்ள பாட்டன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்.

அதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது, “போற்றுதற்கும், வணக்கத்திற்குமுரிய நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் அவர்கள், இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது மிகப்பெரிய கல்வியாளராகவும், செல்வந்தராகவும் இருந்தவர். வசதியாக வாழ்ந்தவர். அதையெல்லாம் இழந்துவிட்டு, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இல்லாது, உரிமைபெற்று விடுதலைப்பெற்று தன் நாட்டு மக்களும் பெருமையோடு வாழ வேண்டும் என்பதற்காக, தனது எல்லாச் செல்வத்தையும் இழந்து, இறுதி காலக்தில் வறுமையில் வாடி, ஊர் ஊராகச் சென்று மண்ணெண்ணை விற்று, அதைக்கொண்டு வாழ்ந்தார் என்று நினைக்கிறபோது நெஞ்சம் பதறும். மாடு கூட இழுக்கத் திணறும் செக்கை, இந்த மண்ணின் விடுதலைக்காக ஒரு மனிதன் இழுத்தார் என்பது கதாசிரியர்கள் கூடக் கற்பனையில் எழுத முடியாத ஒன்று. அவ்வளவு பெரிய ஈகத்தைச் செய்த போராட்டக்காரர் நம்முடைய பாட்டனார் வ.உ.சிதம்பரனார் அவர்கள். அப்படிபட்ட பெருமகனார், கோவை சிறையில் சிறைபட்டிருந்தார். அவர் சிறைபட்டிருந்ததாகப் பாதுகாக்கப்பட்டுவரும் அறைக்குப் பக்கத்திலே நாங்களும் ஒருமுறை சிறைபடுத்தப்பட்டோம். அவர் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறைபட்டார். நாங்கள் தமிழ்தேசிய இன உரிமை விடுதலைக்காகப் போராடி சிறைபட்டோம்.

இன்றைக்குத் தலைமுறை தலைமுறையாக, வாரிசு வாரிசுகளாகப் பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் பாட்டனாரின் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள், அவர்கள் என்ன பணி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது கூட இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாது. இந்தியாவின் ‘இரும்பு மனிதன்’ யார் என்றால், எல்லோருக்கும் தெரியும். ஆனால், ‘கப்பலோட்டிய தமிழன்’ யாரென்றால், தமிழ் பிள்ளைகளுக்கே தெரியாது. அதற்குக் காரணம், வரலாற்றில் நாங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்களாக இருக்கிறோம். அதையெல்லாம் மாற்றுவதற்கு ஒரு தலைமுறை பிள்ளைகள் தழைத்து துளிர்க்கின்றோம். நாங்கள் இன்று தமிழ் தேசம் என்று பேசுகிறோம். அன்றைக்கு இந்திய விடுதலைக்குப் போராடிய எங்கள் பாட்டனார் ‘தமிழ் நேசன்’ என்று இதழ் நடத்தினார். அதைத் தான், அவர் பேரப்பிள்ளைகள் நாங்கள் இன்று தமிழ் தேசியம் என்று முன்னெடுத்துச் செல்கிறோம். பொதுவாக நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. நினைவு தினத்தைத் தான் போற்றுவோம். இருப்பினும் நெல்லை வந்திருக்கும் சமயத்தில் பாட்டனாரின் மணிமண்டபத்திற்கு வந்து அவரது பிறந்தநாளில் அவருக்கு எங்கள் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “நான் கோவிலில் குருமார்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும்போது பவ்வியமாக நின்று கொண்டிருந்தேன் என்று பேசுபவர்கள், அதே குருமார்கள் தமிழில் மந்திரங்கள் பாடும்போது எங்கே சென்றார்கள்? இந்தக் கேள்விகளைக் கேட்பவர்கள் அப்போது மட்டும் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு உறங்கிவிட்டார்களா? கோவில் குருமார்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் காட்சிகளை ஒளிபரப்பு செய்த ஊடகங்கள், அவர்களே தமிழில் மந்திரம் சொல்லுவதை ஏன் ஒளிபரப்பு செய்யவில்லை? அருகிலிருந்த எங்கள் ஓதுவார்கள் தமிழில் முருகனைப் போற்றிப் பாடினார்கள். அதையெல்லாம் இந்த ஊடகங்கள் ஏன் காட்டவில்லை? எனது மகன் காதணி விழாவிற்குக் கூட தமிழக அரசு நியமித்த இந்து அறநிலையத்துறை அர்ச்சகர், அவர் பணியைச் செய்துவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு நாங்கள் அழைத்து வந்த ஐயா இறைநெறி இமையவன் தலைமையில் மூன்று ஓதுவார்களைக் கொண்டு தமிழில் மந்திரங்கள் பாடித்தான் வழிபட்டோம். திருப்போரூர் முருகன் கோவிலிலும் நாங்கள் தமிழில் வழிபாடு செய்யச் சென்றபோது, சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்ன அதே குருமார்கள் தான் ‘கந்தா போற்றி! கடம்பா போற்றி! வள்ளியின் மணாளனே போற்றி! என்று பாடினார்கள். நாங்களும் தமிழிலேயே வழிபட்டோம். பிரபாகரன் மகனுக்குத் தமிழ் மொழி மீது உள்ள பற்றை வேறு யாரும் வந்து கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தான் உலகத்திற்கே போதிக்கின்றோம். சமஸ்கிருத்ததில் மந்திரங்கள் பாடும்போதும் பவ்வியமாக நின்றேன் என்றால் அதுவே என் மரபு, எனது பண்பாடு. பகைவனாக இருந்தாலும் பண்பாட்டுடன் நடத்துவது தமிழன் மரபு. இந்த சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் குருமார்களைப் பணிநியமனம் செய்தவர்கள் யார்? இதே தமிழக அரசின் ‘இந்து அறநிலையத்துறை’ தானே. இதுவே சீமான் முதலமைச்சராக இருந்தால் ‘தமிழர் சமய அறநிலையத்துறை’ என்று பெயர் மாறும். அதை ஐயா ஸ்டாலின் அவர்கள் செய்வாரா? என்று அவரிடமே கேளுங்கள்” என்று கூறினார்.

மேலும் அவர், “இவர்கள் ‘விடியல் அரசு’ என்று வெறும் வார்த்தைகளில் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். கிராமங்களில் நான்கு மணிநேரம் தான் மின்சாரம் இருக்கிறது, பெருமளவில் மின் துண்டிப்புச் செய்யப்படுகிறது. ‘நெல் சேமிப்பு கிடங்கு’ என்று வெறும் தகரத்தையாவது கொண்டு ஒரு கூரை எழுப்பி, இந்த நெல் மூட்டைகளைப் பாதுகாக்க இவர்களால் முடியவில்லை. அந்த நெல் மூட்டைகளை வெறும் தார்பாயைப் போட்டு மூடி, மழையில் நனையவிட்டு, நெற்களை முளைக்கவிட்டு நாசமாக்குகின்றார்கள். தற்போது அரசிடம் நிதிவளமை இல்லை என்று முதல்வரே கூறுகிறார். அதனால் தான் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாயை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை என்கிறார். இப்போது மாணவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு, 696 கோடி ரூபாய் நிதி, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் இப்போது இவர்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? மாணவர்கள் ஊக்கத்தொகை கேட்டு போராடினார்களா? இந்த 696 கோடியை வைத்து, அரசு பள்ளி கல்விக்கூடங்களின் கட்டிடங்களைத் தரமாக்கி, கல்வியின் தரத்தை உயர்த்திவிட முடியும். அதைச் செய்யாமல் பொறுப்பற்ற வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி தமிழ் கோவில்களில் தமிழில் வழிபாடு