பெரும்பாவலர் பாரதியார் – சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

146

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 11-09-2022 அன்று காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது, “தமிழ் இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய பெரும்பாவலர் நம்முடைய பாட்டன் பாரதி அவர்கள். பாப்பா பாட்டு, குயில் பாட்டு என்று எண்ணற்ற பாடல்களைப் பாடிய பாரதி, தாலாட்டு மட்டும் பாடவில்லை. அதற்குக் காரணம், உறங்காத மக்களை உறங்கவைப்பதற்குத் தான் தாலாட்டுப் பாடவேண்டும். உறங்கிக்கொண்டிருக்கிற மக்கள் கூட்டத்தை எழுப்புவதற்குத் தேவை உணர்ச்சிப் பாக்கள் தான். நெருப்பு வரிகளைக் கொண்டு எழுச்சிப் பாக்களைப் பாடிய பெரும்பாவலன் நம்முடைய பாட்டன் பாரதி அவர்கள். நம்முடைய வீடுகளில் கூடப் பழங்காலத்து ஒளிப்படங்களில் தாத்தா, பெரியப்பா, அப்பா, மாமா எல்லோரும் நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். நம்முடைய பாட்டி, அம்மா, பெரியம்மா எல்லோரும் நின்று கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய மனைவி செல்லம்மாளை நாற்காலியில் அமரவைத்துவிட்டு, பாரதி பின்னால் நின்றுகொண்டிருப்பார். எல்லோரும் கோவிலுக்குச் சென்று தெய்வத்திடம் எனக்கு நிறைய அறிவை கொடு என்று தான் வேண்டுவார்கள். ஆனால், நம்முடைய பாட்டன் பாரதி மட்டும் தான் “சொல்லடி சிவசக்த்தி, என்னைச் சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய்?” என்று தெய்வத்திடமே கேள்வி கேட்டவர்.
“தமிழ்த்திரு நாடுதனைப் பெற்றதாய் என்று கும்பிடடி பாப்பா” என்று பாடியுள்ளார். “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து: வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று அன்றே பாடிவிட்டார் பாரதி. ஆனால், திராவிடத் திலகங்கள் நாங்கள் தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்று பீற்றிக்கொண்டு அலைகிறார்கள். “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை. உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை” என்று பாடுகிறார். நான் ஒருமுறை அப்பா நெல்லை கண்ணன் அவர்களிடம் இந்தப் பாடலில் ஏன் வள்ளுவரை முதலில் குறிப்பிடாது, கம்பரை முன்னிறுத்தி பிறகு வள்ளுவன், இளங்கோ என்று பாடியுள்ளார் எனக் கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்னது, தராசில் கம்பன் ஒரு தட்டு, இளங்கோ மற்றொரு தட்டு, வள்ளுவன் நடுநிலையான முள் போன்றவன் என்பதனால் அவ்வாறு பாடியுள்ளார் பாரதி என்று அருமையான ஒரு விளக்கத்தைக் கொடுத்தார். அப்படிபட்ட ஒரு பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று.
அதேபோல, “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி உயர்ந்த மதி கல்வி, அன்பு நிறைய உடையோர் மேலோர்” என்று பாரதி பாடியதற்கேற்ப, சாதிய ஏற்றத்தாழ்வுகளை, மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்க்கிற சமூகக் கட்டமைப்பு நிலைப்பாட்டிற்கு எதிராகக் குரலெழுப்பிய பெருந்தமிழன் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்கள். உழைக்கும் அடித்தட்டு மக்களில் தாழ்ந்தவர் என்று எவருமில்லை. அந்தச் சொல்லாடலே ‘தாழ்த்தப்பட்டவர்’ என்று தான் இருக்கிறது. அப்படியென்றால் என்னைத் தாழ்த்தியவன் யார்? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. “தமிழன் பெருமைக்குரியவன். காரணம், அவன் தமிழ் பெருங்குடியில் பிறந்ததானாலேயே தமிழன் பெருமைக்குரியவன்” என்கிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்கள். அதனால், தமிழன் தாழ்ந்தவன் இல்லை. அப்படிபட்ட ஒரு பெருமைக்குரிய இனத்தில் பிறந்த நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று.
வழிவழியே வருகிற வீரத்தமிழ், மானத்தமிழ் பிள்ளைகள் நாங்கள், அடுத்தத் தலைமுறையாவது சாதி-மதச் சகதியிலிருந்து விடுபட்டு, தமிழ்தேசிய இனப்பிள்ளைகளாக இந்த மண்ணிலே மலர்வதற்குப் போராடிக்கொண்டு இருக்கிறோம். அதனுடைய முன்னத்தி ஏராக இருக்கிற நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதியார் அவர்களுக்கும், போற்றுதற்கும் வணக்கத்திற்குமுரிய பெருந்தமிழர் தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடு தங்களின் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது” என்று தெரிவித்தார்.