‘மாலை முரசு’ நிறுவனத் தலைவர் பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

119

11-08-2022 | பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு – சென்னை 

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு நிறுவனத்தின் தலைவருமான ஐயா பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது, “போற்றுதற்கும், வணக்கத்திற்குமுரிய பெருந்தமிழர், தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனாரின் அன்பு மகன், தன் தந்தையைப் போலவே தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ் மீட்சி, தமிழின எழுச்சியின் மீதும் பற்று கொண்டு, தன் வாழ்வின் இறுதி நொடிவரை பணியாற்றிய பெருந்தகை ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள்.

நாம் தமிழர் கட்சி தொடங்கி முதன்முதலாக திருநெல்வேலியில் ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, ஐயாவுடன் அறிமுகமில்லாத சூழலில், அவரே அப்பகுதி கட்சியினரை அழைத்து பத்தாயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்து உதவிய பெருந்தகை. அதற்கு காரணம், அவர் என் மீது வைத்திருந்த பற்றல்ல; தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் வைத்திருந்த பற்று தான்.

பிறகு இரண்டு முறை ஐயாவின் இல்லத்தில் நான் அவரை சந்தித்திருக்கிறேன். மிகவும் இனிமையாகவும், எளிமையாகவும் பேசக்கூடிய, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர். மிகுந்த துணிச்சலுடையவர். ஈழப்போர் நடந்துகொண்டிருக்கும்போது, அந்த செய்திகளை வெளியிட எல்லோரும் தயங்கினார்கள். அன்றைய ஆட்சியாளர்கள், போர் தொடர்பான செய்தி வெளியிடாமல் தடுப்பதற்கும், நிறுத்துவதற்கும் முயற்சி செய்தபோது, உங்களால் முடிந்ததை செய்துகொள்ளுங்கள், இதை நிறுத்த முடியாது, உறுதியாக செய்தி வெளியிடுவேன் என்று தான் பிறந்த இனத்திற்கு பிறவிக்கடன் செய்தவர் நமது ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள்” என்று கூறினார்.

தொடர்த்து பேசிய அவர், “எங்களுடைய அண்ணன், எங்களுடைய தலைவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது மாலைமுரசு ஏட்டில், கருப்பு வெள்ளையில் மாவீரன் மரணம் என்கிற செய்தியை வெளியிட்ட துணிச்சல்மிக்க வீரன் நம்முடைய ஐயா ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள். அன்றைய அரசியல் நெருக்கடியும், அழுத்தமும் நீங்கள் நன்கு அறிந்ததே. தலைவர் இறந்தாரா? அல்லது உயிருடன் இருக்கிறாரா? எது உண்மை, பொய் என்ற செய்திகள் வேறு. ஆனால், அன்று அவர் கொண்டிருந்த மனத்துணிவு, ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத அந்த தமிழனுடைய நேர்மையான வீரத்தை, ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களிடத்திலே பார்த்தோம். அது எங்களைப் போன்று, பின்னால் வருகிற தமிழ்ப் பிள்ளைகளுக்கு வழித்தடமாக இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.

ஐயா போன்ற பெருந்தகைகள், என்ன நோக்கத்திற்காக உழைத்தார்களோ, அரும்பாடாற்றினார்களோ, அதே நோக்கத்திற்காக நின்று உழைப்போம் என்கிற உறுதியை ஏற்பது தான் அவர் பிறந்தநாளில் நாங்கள் அவருக்கு செய்கிற வணக்கமாக, அவருக்கு தெரிவிக்கின்ற வாழ்த்தாக இருக்க முடியும். பொதுவாக நாம் தமிழர் கட்சி யாருடைய பிறந்தநாளையும் கொண்டாடுவதில்லை. எங்களுடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன், சுபாஷ் சந்திர போஸ், பூலித்தேவன் போன்ற எங்கள் முன்னோர்களின் பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடுவோம். காரணம், இவர்களின் மறைவு சரியாக பதிவு செய்யப்படவில்லை, எங்களுடைய தலைவர் முடிவற்ற ஒரு மாபெரும் வீரர். அதனால், அவர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவோம். ஏனென்றால், பிறக்கும்போது காமராசர் பெருந்தலைவர் இல்லை, இறக்கும்போது தான் அவர் பெருந்தலைவர். பிறக்கும்போது பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர், தெய்வத்திருமகன் இல்லை, இறக்கும்போது தான் அவர் தெய்வத்திருமகனார். பிறக்கும்போது எங்கள் தாத்தா வ.உ.சி, செக்கிழித்த செம்மலோ, கப்பலோட்டிய தமிழனோ இல்லை, இறக்கும்போது தான் அவர் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன். ஆனால், தன் மரணத்தை சாதனைச் சொற்களால் வரலாற்றில் பதிவு செய்த பெருந்தகைகள் இவர்கள். தமிழர் மரபே, நினைவைப் போற்றுவது தான். வழமைக்கு மாறாக ஒரு மாபெரும் தமிழ் மகனுக்கு அவர் பிறந்தநாளில் வாழ்த்து சொல்வது எங்களுடைய கடமை. ஐயா ராமச்சந்திரா ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் பிள்ளைகள் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் தங்களுடைய வாழ்த்துகளை கூறுவதில் மகிழ்கிறது. அவருக்கு எங்களுடைய புகழ் வணக்கம்” என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுனரை சந்தித்து அரசியல் பேசுவது, ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என்ற அரசியல் கட்சிகளின் விமர்சனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சீமான் அவர்கள் கூறியதாவது, ”ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார்? அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே? ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் அமைப்பான பாரதிய ஜனதாவால் நியமிக்கப்பட்டவர். பிறகு அது சார்ந்த சிந்தனைகள், அது சார்ந்த செயல்பாடுகள் தான் இருக்கும். அது சார்ந்த தலைவர்களைத்தான் அவர்கள் சந்திப்பார்கள். பிறகு ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறியிருக்கிறதே என்ற ஐயத்திற்கே இடமில்லை. அது அவ்வாறுதான் இயங்கும்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசலாமா என்று கேட்கிறார்கள், இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல் பேச உரிமை உண்டு. அந்த வகையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், உங்களுடைய அரசியல் அமைப்பில், இந்த எதார்த்த சூழல் அவ்வாறு உள்ளதா? ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ், ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள் என்று யாரையும் அரசியல் பேச விடுவதில்லை. கற்பிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களையே அரசியல் பேச அனுமதிப்பதில்லை. ஆனால், பள்ளிக்கூடமே போகாது, கையெழுத்து கூட போடத்தெரியாதவர்களெல்லாம் அரசியல் பேசி, நாட்டை ஆளும் நிலை தான் இங்கு இருக்கிறது. அதனால், யாரும் யாரையும் சந்தித்து அரசியல் பேசலாம், தவறில்லை. கருத்துகளும் எதிர் கருத்துகளும் தான் உண்மையான சனநாயகம்” என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திமாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தம் – 2022ஐ இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்