வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

200

வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 இன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி – இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள்,

“எங்களின் போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய, வீரப்பெரும்பாட்டன் மன்னர் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று. அன்னை நிலம் அடிமைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்து போர் புரிந்த மான மறவன் எங்களுடைய பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள். வெள்ளைக்காரனுடைய துப்பாக்கியின் தோட்டாக்கள் எங்களின் ஆட்டு புழுக்கைக்குச் சமம் என்று முழக்கமிட்டவர். வீரத்தால் எங்கள் பாட்டனாரை வீழ்த்த முடியாமல், வஞ்சகம் செய்து சூழ்ச்சியால் வீழ்த்தினார்கள். அந்த சூழ்ச்சிக்கு துணைபோனவன் நம் மற்றொரு பாட்டன் மருதநாயகம். கைது செய்து நிறுத்தியபோது கூட, வரலாற்றில் நாங்கள் தோல்வியுற்றிருந்தாலும், வீழ்ந்தாலும், செத்தாலும், வரலாறு எங்களை வீரமறவர்களாக பதிவு செய்யும். நீங்கள் வென்றிருந்தாலும் வரலாறு உங்களை துரோகி என்று தான் பதிவு செய்யும் என்று முழக்கமிட்டவர் நம் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்கள். அவருடைய நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவருடைய வாரிசுகள் நாங்கள் ஒரு உள்ளச்சிலிர்ப்போடு நிற்கிறோம். இங்கே எம்மின வரலாறு தொடர்ச்சியாக மறைக்கப்பட்டு வருகிறது. வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு, எம்மின முன்னோர்களினுடைய வீரவரலாறு, அறம் சார்ந்து அவர்கள் செய்த ஆட்சி முறை, இதெல்லாம் தெரிவதற்கு வாய்ப்பாக, பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு இதை கொண்டுவரவேண்டும். குறிப்பாக எங்களுடைய பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய வரலாற்றை தமிழ் இளம் தலைமுறைக்கு தெரிய வைக்க, பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு இந்நாளில் நான் கோரிக்கை வைக்கிறேன். வழிவழியே வருகிற வீரத்தமிழ் பிள்ளைகள், பெருமிதத்தோடும் திமிரோடும், எங்களுடைய பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்கத்தை செலுத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று கூறினார்.

பின்னதாக செய்தியாளர் ஒருவர், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக கேள்வி எழுப்பியதற்கு சீமான் அவர்கள், “மகாராஷ்டிராவில், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 130 கோடி கொடுத்ததால் நடந்த மாற்றம் தான் இது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 130 கோடியுடன் மேலும் ஒரு 20 கோடி சேர்த்து 150 கோடியாக கொடுத்தால் எந்த மாநிலத்திலும் ஆட்சி கவிழும். தம்பி அண்ணாமலை அவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்படுத்த அப்படி பேசுகிறார். இப்படி அவர் பேசுவது ஒரு ஜனநாயக துரோகம் இல்லையா? முறைப்படி மக்களால் தேர்வுசெய்யப்பட்டு வரும்போது நீங்கள் ஆளுங்கள், உங்களை யாரும் தடுக்கவில்லை. மகாராஷ்டிராவை போல தமிழ்நாடிலும் நடக்கும் என்றால், அங்கு நேர்மையான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதா? ஊழல் இலஞ்சத்தை பற்றி பேச பாரதிய ஜனதாவிற்கு என்ன தகுதி உள்ளது. ஜனநாயக துரோகிகள் நீங்கள்” என்று பதிலளித்தார்.

முந்தைய செய்திஎண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு