சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

109

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இன்று உலக ஏதிலிகள் நாள்! போர்ச்சூழலாலும், அரச வன்முறைகளாலுமென பல்வேறு காரணக் காரணிகளால் தாய்நிலத்தைவிட்டு புலம்பெயர்ந்து, உலக நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளின் துயரத்தைக் கூறும் நாள். ஈழ நிலத்தில் நடந்தேறிய இனப்படுகொலையால் தாய் மண்ணைவிட்டுப் பிரிந்து, உலகம் முழுமைக்கும் ஏதிலிகளாக இடம்பெயர்ந்து, இந்நூற்றாண்டின் பாரிய இனஅழிவுக்கு ஆளான தமிழர்களைப் போல அதன் வலியை உணர்ந்த ஒரு இனக்கூட்டமில்லை.

ஈழச்சொந்தங்கள் அந்நியத்தேசங்களில் மட்டுமல்லாது, தாய்த்தமிழகத்திலும் ‘அகதி’ எனும் பெயரைத் தாங்கி நிற்பதும், அரசுகளால் மிக மோசமாக நடத்தப்படுவதும் தமிழ்த்தேசிய இனத்திற்கு விளையும் பெரும் அவமானமாகும். புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வரும் ஈழத்துச் சொந்தங்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெனக்கோரி, பன்னெடுங்காலமாகப் போராடி வரும் நிலையில், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் இன்றளவும் அது சாத்தியப்படாதிருக்கிறது.

குடியுரிமை கிடைக்காவிட்டாலும், அகதிகளுக்கெனக் கொடுக்கப்படும் குறைந்தபட்ச உரிமைகளையாவது கேட்டு நிற்கும் ஈழத்து உறவுகளை சட்டவிரோதமாகக் குடியேறியவர்களெனக் கூறி, தமிழக அரசு சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்? இந்நிய நிலத்தில் அகதிகளாகப் பதிவுசெய்யப்பட்ட நபர்களைத் தடுத்து, வெளிநாட்டவர் சட்டம் – 1946ன்படி, சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது சட்டவிதிமீறல் இல்லையா? அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்நிலத்தில் காலங்காலமாக வாழும்போது, சொற்ப வழக்குகளைக் காரணமாகக் காட்டி, அவர்களை சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்கில் அடைத்துவைப்பது மனித வதை இல்லையா? ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தர வழிவகை செய்வோம் எனக்கூறிவிட்டு, அகதிகளாகக்கூட வாழவிடாது சட்டவிரோதக்குடியேறியவர்களெனக் கூறி, சித்தரவதைக்கூடங்களில் அடைத்து வைப்பதுதான் மோசடித்தனமில்லையா?

தற்போது, ‘அகதிகள் முகாம்’ எனும் பெயரை ‘இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்’ என மாற்றி அறிவித்திருக்கிறது தமிழக அரசு. பெயரிலே மாற்றம் செய்திருக்கும் தமிழக அரசு, ஈழச்சொந்தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், மறுவாழ்வு அளிப்பதற்கும் எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளென்ன? ‘சிறப்பு முகாம்’ எனும் பெயரை வைத்துவிட்டு, அங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்துச்சொந்தங்களை சித்திரவதை செய்வது எந்தவிதத்தில் நியாயம்? தங்களை விடுவிக்கக்கோரி, திருச்சி, சிறப்பு முகாமில் ஏறக்குறைய ஒரு மாத காலமாக பட்டினிப்போராட்டம் செய்வது வரும் ஈழ உறவுகளின் அவலக்குரல்களுக்குச் செவிமடுக்காது, வெறும் பெயர் மாற்ற அறிவிப்பு மட்டும் வெளியிட்டு ஒப்பேற்றுவதுதான் விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு!

ஆகவே, ஏதிலிகளாக பதிவு செய்த ஈழச்சொந்தங்களை, ‘சிறப்பு முகாம்’ எனும் வதைகூடங்களிலிருக்கும் உடனே விடுவித்து, திபெத்தியர்களுக்கு இந்நாட்டில் செய்து தரப்படுவது போலவே, அடிப்படையான வசதிகளையும், வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்து, அவர்களுக்கான உண்மையான மறுவாழ்வை ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும், ஈழ உறவுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, நாளும் வதைத்து வரும் காவல்துறையின் ‘கியூ’ பிரிவினைக் கலைக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை
அடுத்த செய்தி‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு! – சீமான் அறிவிப்பு