முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

240

முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 14-11-2021 காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பறிபோகும் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை மீட்டெடுக்கவும், உணவளித்து உயிர்காக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விவசாயிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்தேச தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசு, தமிழர் தாயகம் கட்சித் தலைவர் கு. செந்தில்மள்ளர், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு. களஞ்சியம் மற்றும் இஸ்லாமியச் சேவைச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஏ. கே. சாகுல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹூமாயூன் கபீர், வெற்றிக்குமரன், கொள்கைப் பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் துருவன், ஐ.நா. மன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் ஜீவா டானிங், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோவை கார்த்திகா ஆகியோரும் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அக்கொடுங்கோன்மைச் செயலை நியாயப்படுத்த முயலும் திமுக அரசின் கையாலாகத்தனத்தைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப்பேருரையாற்றினார்.

155 அடிவரை கொள்ளளவு உடைய முல்லைப்பெரியாற்று அணையில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 142 அடிவரை மட்டுமே நிரப்புவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. தற்போது அதனையும் காவு கொடுத்து 136 அடியாகக் குறைப்பதென்பது ஏறத்தாழ அணையின் மொத்த நீர் கொள்ளளவில் பாதியளவை மட்டுமே நிரப்ப வழிவகுப்பதோடு முல்லைப் பெரியாற்று பாசன வேளாண்மை முற்றுமுழுதாக அழியும் பேராபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க அனுமதியாமல் எத்தகைய இடர்கள் வந்தாலும் எதிர் நின்று காப்போம் என உறுதியாக தெரிவித்தார்.

முழு நிகழ்வு நேரலை▶️

சீமான் கண்டனவுரை:

◼️ மூத்தவர் தடா சந்திரசேகரன் கண்டனவுரை

◼️ அ.வியனரசு கண்டனவுரை

◼️ ஹூமாயூன் கபீர் கண்டனவுரை

◼️ மு.களஞ்சியம் கண்டனவுரை

◼️ அருண் ஜெயசீலன் கண்டனவுரை

◼️ கு.செந்தில்மள்ளர் கண்டனவுரை

◼️ துருவன் கண்டனவுரை

◼️ செ.முத்துப்பாண்டி கண்டனவுரை

◼️ ஏ.கே.சாகுல் அமீது கண்டனவுரை

◼️ ஜீவா டானிங் கண்டனவுரை

◼️ கோவை கார்த்திகா கண்டனவுரை

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை கேரள மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்! – சீமான் கோரிக்கை