வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு [ புகைப்படங்கள் – காணொளி]

605

செய்திக்குறிப்பு: வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி

தமிழ்த்தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்க வைத்த நம் வீரப்பெரும்பாட்டன்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தன் அன்னைத் தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வீரப்போர் புரிந்த புரட்சியாளன்!
அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வைத்த மான மறவன்!
வீரமிகு நமது பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 216ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2021 அன்று, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் குழுமியிருந்த இந்நிகழ்வில் சீமான் அவர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாட்டன் தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு முன்பு நினைவுச்சுடரேற்றி, உறுதிமொழியேற்று, வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் அவர்கள் பேசுகையில், ‘விடுதலை போராட்ட வீரர் நமது வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றுகின்ற நாள் இன்று. வீரமிக்க எமது மூதாதைகளில் தீரன் சின்னமலை வேறுபட்டவர். தீரன் சின்னமலை மன்னரோ , மன்னரின் வாரிசோ இல்லை. அரசர் அழைத்தால் மக்கள் போரிட வருவார்கள். ஆனால் தீரன் சின்னமலை ஒரு சாதாரணக் குடிமகன். அவர் மக்களை ஒன்றுதிரட்டி படைகட்டி போராடியதுதான் புரட்சி. அப்படிபட்ட வீரமிக்க எமது பெரும்பாட்டன் தூக்குக் கயிற்றை வெள்ளைக்காரன் கொண்டுவந்தபோது, அவனைத் தள்ளிவிட்டு தூக்குக் கயிற்றைத் தானே மாட்டிக்கொண்டு, நீ என் எதிரி எனக்கு மரணத்தைகூட நீ பரிசாகத் தரக்கூடாது என்று முழங்கிய பெருந்தகை. அப்படிப்பட்ட நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் மானமும் வீரமும் உயிரென நினைக்கின்ற தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப்பெரும்பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ளபடியே பெருமிதம் அடைகிறோம்’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து ‘வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். மேலும் மேகதாது அணையைக் கட்ட கர்நாடக பாஜக அரசு தீவிரமாக உள்ள நிலையில், தமிழக பாஜக மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து நாடகமாடுவதாகவும், பெகாசஸ் உளவு மென்பொருளுக்கு முன்பிருந்தே தன்னை உளவு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். ஐயா இறையன்பு, சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் நம்பிக்கை அளித்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகுதான் திமுக அரசின் உண்மை முகம் வெளியே தெரியவரும் என்றும், திமுக அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் திட்டங்களைப் பார்த்த பிறகே அதுப்பற்றி கருத்துக்கூற முடியும் என்றும், ஆனால் இயற்கை வேளாண்மையை அடிப்படையாக கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை முன்னிறுத்துவதே எங்கள் கொள்கை!’ என்றும் சீமான் அவர்கள் தெரிவித்தார்.

காணொளி:

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு