சுற்றறிக்கை: நீட் தேர்வுமுறை குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்கும் நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புவது தொடர்பாக

797

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக மாண்புமிகு நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இக்குழு, நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பொருட்டு, மக்களின் கருத்தையும் அறிவதற்காக சூன் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி மாண்புமிகு நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களின் தலைமையிலான குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: நீட் தேர்வுமுறை குறித்த பொதுமக்கள் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப இன்று (சூன் 23) இறுதி நாள் என்பதால் இச்செய்தியை உறவுகள் அனைவருக்கும் பகிர்ந்து சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு முறையை ஒழிக்க ஒன்றுபடுவோம்.

நாம் தமிழர் உறவுகள் மின்னஞ்சல் செய்யவேண்டிய கருத்துகள் பின்வருமாறு


Email to: neetimpact2021@gmail.com

பொருள்: நீட் தேர்வுமுறை குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு தொடர்பாக.

பெறுநர்,

மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.இராஜன் குழு,
மருத்துவக்கல்வி இயக்குநரகம்,
தமிழ்நாடு அரசு.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். தமிழ்நாட்டில் வசித்துவரும் இந்திய ஒன்றியத்தின் குடிமகனாகிய நான், தமிழ்நாடு பின்பற்றி நடைமுறைப்படுத்திய சமூக நீதி, கல்வி மேலாண்மை ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்கும் நீட் தேர்வுமுறை முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டுமெனக் கோருகிறேன். நான் நீட் தேர்வினை எதிர்ப்பதற்கான காரணங்கள் கீழ்வருமாறு:

* நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வினால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்களும், சமூகத்தின் படிநிலைகளில் கீழே உள்ள மாணவர்களும் தான். குறிப்பாக நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரணங்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மாணவர்களைச் சார்ந்ததே. எனவே, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கக்கூடிய ஒன்றாக நீட் தேர்வு இருக்கின்றது.

* தமிழ்நாட்டின் கல்வி முறை என்பது பரவலாக்குதல் எனும் சனநாயகத்தன்மையைக் கொண்டு இயங்கி வரும் ஒன்றாகும். ஆனால், இக்கொள்கை வழிக்கு நேரெதிரானது நீட் தேர்வு முறையாகும். இது பரவலாக்குதல் என்ற சனநாயகக் கொள்கைக்கு எதிரான வழிமுறைகளை வைத்துச் சமூகப் பாகுபாடுகளைத் தொடர செய்யக்கூடியதாகும்.

* தமிழ்நாட்டின் கல்வி முறையிலேயே பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்புள்ள நேரத்தில் நீட் தேர்வு திணிப்பு கூடுதல் சுமையைக் கொடுத்து பின்னோக்கித் தள்ளுவதாகும்.

* தனியார் நிறுவனங்களின் நிதி கொள்ளை முறைகேடுகளைக் காரணம் காட்டி நீட் தேர்வுமுறைக்கு ஆதரவாகப் பேசினாலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட கடந்த நான்காண்டுகளில் மருத்துவக்கல்வித் துறையின் நிலை மேலும் மோசமடையவே செய்துள்ளது.

* நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பல தனியார் பயிற்சி மையங்கள் உருவாகியிருக்கின்றன. இவை பயிற்சிக்கட்டணமாக இலட்சக்கணக்கில் மாணவர்களிடமிருந்து பெற்று வருகின்றன. எனவே, ஒருவகையில் நீட் தேர்வானது கல்விக்கொள்ளைக்கு வழிவகுக்கிறது.

* பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றபோது ஒரு சில பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து மட்டுமே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வுமுறை வந்தது முதல் அதைவிட அதிகமாகப் பல இலட்ச ரூபாய் பணம் பயிற்சி நிலையங்களுக்குச் செலவழித்துப் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறும் அவல நிலை உருவாகியுள்ளது.

* மற்ற மாநிலங்களைவிடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் கொண்டுள்ளதால் இந்திய அளவிலான சராசரியைவிடத் தமிழ்நாட்டின் நிலை உயர்ந்தே இருந்துள்ளது. ஒன்றிய அரசு முதலீடு செய்து பெருமளவில் மருத்துவக் கல்வி நிறுவனங்களைப் பரவலாக்காமல் தன்னுடைய பின்தங்கிய நிலையைத் தமிழ்நாட்டின் மீது சுமத்துகிறது.

* பொருளாதாரத் தடையோடு சேர்த்து, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே அமைந்திருப்பதால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவிற்கு நீட் பெரும் தடையாகவே அமைகிறது.

* நீட் போன்ற தேசிய அளவிலான பொதுப்போட்டித் தேர்வுகள் பல்வேறு மாநில பாடத்திட்டங்களுக்குக் கீழ் படிக்கும் மாணவர்களையும், தாய்மொழியில் பயிலும் மாணவர்களையும் வடிகட்டும் நோக்கிலேயே திகழ்கிறது.

* நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளின் மூலம் ஒரே வகையான தேர்ச்சி முறையை ஒன்றிய அரசு கொண்டுவர நினைக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒன்றியமான இந்தியாவில் இந்த ஒருமைப்படுத்துதல் தேசிய இனங்களின் உரிமை பறிப்பாகும். இது மாநில தன்னாட்சிக்கு எதிராக இருக்கிறது.

ஆகவே, இனிவரும் காலங்களில் நீட் தேர்வுமுறை முற்றிலும் கைவிடப்பட்டு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்படியே மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டுகிறேன். நன்றி.

இப்படிக்கு,