சென்னையின் எதிர்காலம் காத்திட சீமான் தலைமையில் அணியமாவோம்!

276

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை இயற்கை பேரழிவுகளிலிருந்து காத்து நிற்கின்ற இயற்கை அரண்களை அழிக்கும் விதத்திலான பல தொழிற்சாலைகள் வட சென்னையில் குறிப்பாக அதன் புறநகர்ப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, பொன்னேரி முதலிய இடங்களில் இயங்கி வருகின்றன.

குறிப்பாக திருவொற்றியூர் தொகுதியிலுள்ள எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் ஆகியவை வருடத்தின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை தாண்டி காற்று மாசினை ஏற்படுத்தி வருகின்றன; எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கான சாம்பல் குளமும் திருவொற்றியூர் தொகுதியிலேயே உள்ளது.

சென்னை உரத்தொழிற்சாலை, சென்னை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த மணலி பகுதியில்தான் உள்ளது. அனல்மின் நிலையங்களிலிருந்தும், இதர தொழிற்சாலைகளிலிருந்தும், சரக்குந்துகளாலும் வெளிவரும் காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த மணலி மற்றும் மீஞ்சூர் பகுதிகள் உள்ளன.

வடசென்னைப் பகுதியானது கழிமுகங்களைக் கொண்ட இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்; இவை வெள்ள காலங்களில் வடிகாலாக செயல்படுகின்றன. இந்நிலையில் காமராஜர் துறைமுக விரிவாக்கம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், எண்ணூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களின் விரிவாக்கம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன. எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்கப்படும் பட்சத்தில் அதன் சாம்பல் கழிவுகளாலும் திருவொற்றியூர் தொகுதி பாதிக்கப்படும். அதானி துறைமுகம் விரிவாக்கப்பட்டால் அதன் தெற்கு பக்கம் இருக்கும் கடற்கரைகளில் மணல் தேக்கம் அதிகமிருக்கும்; இதனால் திருவொற்றியூர் பகுதியிலுள்ள எண்ணூர் கழிமுகம் பாதிக்கப்படும்.

தற்போது இயங்கிவரும் திட்டங்களை சரிவர கண்காணிக்காமல் விட்டாலும், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், வடசென்னையை சுற்றியுள்ள இயற்கை அரண்கள் அழிக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் சென்னையில் ஏற்படும் எந்தவித இயற்கை சீரழிவுகளிலிருந்தும் மக்கள் எளிதில் மீண்டு வர முடியாது.

அதானி துறைமுகத்தின் கட்டுமானங்கள் பொன்னேரி தொகுதியில் இருந்தாலும்கூட அதன் பாதிப்பு வடசென்னையிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் இருக்கும்; திருவொற்றியூர் தொகுதியில் இருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்படும். துறைமுக விரிவாகத்தினால் வெள்ள காலங்களில் வெள்ளநீர் எளிதில் வடியாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். கடல் ஆக்கிரமிக்கப்படுவதால் ஏற்கனவே மீன்வளங்கள் குறைந்துவிட்ட திருவொற்றியூர் பகுதியில் மீதமிருக்கும் மீன்பிடி/இறால் பிடிப்பு வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்துவிடும்.

பொன்னேரி தனித் தொகுதி என்பதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நேரடியாக அங்கே போட்டியிட முடியவில்லை. அதனால், எண்ணூர் அனல்மின் நிலையமும், அழிவு தரும் பிற தொழிற்சாலைகளும் அமைந்துள்ள பொன்னேரி தொகுதிக்கு மிக அருகிலுள்ள திருவொற்றியூர் தொகுதியில் அங்குள்ள மக்களின் குரலாக போட்டியிடுகிறார்.

சென்னையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது வடசென்னை பகுதிகளில் உள்ள இயற்கை அரண்களே. அப்பகுதியில் களம்கண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி கூட்டிணைவு நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நாசகாரத் திட்டங்களை எதிர்த்து சீமான் தலைமையில் சமர் செய்திட திருவொற்றியூர், பொன்னேரி ஆகிய தொகுதிகள் உள்ளடங்கிய ஒட்டுமொத்த வடசென்னை மக்களும் அணியமாவோம்!