கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவுறுத்தல்

124

க.எண்: 202010342

நாள்: 01.10.2020

கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்வோம்! – சீமான் அறிவுறுத்தல்

அன்பு உறவுகளுக்கு,
வணக்கம்!

நாளை அக்டோபர் 2 அன்று தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் தமிழர் உறவுகள் அரசியலைமைப்பின் ஒரு அங்கமாக விளங்கும் கிராமசபைக் கூட்டங்களில் அவசியம் பங்கேற்று தத்தம் கிராமப்புற மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் புதிய வேளாண் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, புதிய சுற்றுச்சூழல் கொள்கை, புதிய மின்சாரக் கொள்கை, புதிய மீன்வளக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராகவும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு மையம், கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்த கோபுரம், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகவும், கிராமப்புற ஏழை மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவை அழித்து அவர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய ‘நீட்’ தேர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தியும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இந்தி, சமஸ்கிருத மொழிகளை மறைமுகமாகத் திணிக்க முயலும் மத்திய அரசிற்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான கண்டனம் தெரிவித்தும், நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட சட்டங்களைக் கடுமையாக்கவும், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைந்து நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தியும், கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்களை முன்மொழிந்து, நிறைவேற்ற செய்ய வேண்டும். அதன் வாயிலாக மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தமும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும்,

1) 14 மற்றும் 15வது நிதிக்குழு ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு எவ்வளவு? அதில் செய்யப்பட்ட வேலைகள் என்னென்ன? செய்யப்பட்ட ஒவ்வொரு வேலைக்கும் ஒதுக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?

2) குடி தண்ணீர் பஞ்சத்தை போக்க எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு மதிப்பீடுகளில் வேலை செய்யப்பட்டுள்ளது?

3) உயர் குடிநீர் தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள், மின் கம்பங்கள், மின் விளக்குகள், சாக்கடைக் கால்வாய்கள், பொதுக்கழிப்பிடங்கள் முதலியவை எத்தனை உள்ளது? அதில் பயன்பாட்டில் உள்ளவை எத்தனை? பழுதடைந்துள்ளவை எத்தனை? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

4) ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதா? வேலை செய்யும் நபர்களுக்கு தினக்கூலி எவ்வளவு வழங்கப்பட வேண்டும்? என்னென்ன வேலைகள் செய்யப்பட்டுள்ளது? எத்தனை நாட்கள் வேலை கொடுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது?

5) எத்தனை தொகுப்பு வீடுகள் ஊராட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நபர்கள் வீடு கட்டி உள்ளார்கள். வீடு கட்டாதவர்கள் எத்தனை நபர்கள்? முழுத்தொகையையும் எத்தனை நபருக்கு கொடுக்கப்பட்டது? எத்தனை நபருக்கு நிலுவையில் உள்ளது?

6) குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் என்னென்ன வேலைகள் செய்யப்பட்டுள்ளது. செய்யப்பட்ட வேலையின் மதிப்பீடுகள் எவ்வளவு?

7) ஊராட்சிக்கு கணினி மையம் கொண்டுவரப்பட்டுள்ளதா?

8) ஆரம்ப சுகாதார நிலையம், நெல் கொள்முதல் நிலையம், இ-சேவை மையம், நியாவிலைக்கடை, உர-தானிய கிடங்குகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிறை, குறைகள் என்ன?

9) தொழில் வரி, தண்ணீர் வரி, வீட்டு வரி ஆகியப் பதிவேடு தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? கடந்த ஆண்டும், இவ்வாண்டும் எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டுள்ளது?

10) கடந்த ஆண்டும், இவ்வாண்டும் ஊராட்சியின் மொத்த வரவு, செலவு எவ்வளவு? எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது?

மேற்கண்ட கேள்விகளைப் போன்று கிராமப்புற உட்கட்டமைப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடிநீர், சாலை, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வினாக்களை  கிராமசபைக் கூட்டத்தில் எழுப்புவதன் மூலம் நமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் தமிழர் உறவுகளை அறிவுறுத்துகிறேன்.

புரட்சி வாழ்த்துகளுடன், 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநத்தம் தொகுதி -வீரத்தமிழர் முன்னணி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி