விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

228

ஊரடங்கு தளர்வில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்திரவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். மற்ற தொழில்களைப் போல் அல்லாது விவசாயத்தில் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், உற்பத்தியாகின்ற பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என அனைத்துநிலைகளிலும் வேளாண் தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்திள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதல் கட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே விவசாயிகள் மீள்வதற்கு முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயிகளுக்கு எவ்வித மீட்புதவி அறிவிப்புகளும் வெளியிடாமல் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக விவசாயத் தொழிலே முற்றாக அழியும்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகப் போதிய மழைப்பொழிவு இன்மையால் விவசாயத்தில் பெரிதாக எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு நன்றாக மழைபொழிந்து நன்கு விளைந்த நிலையிலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வியாபார சந்தைகள் மூடப்பட்டதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் நட்டத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக விவசாயப் பணிகள் செய்யக் கூலியாட்கள் கிடைப்பதில்லை. விவசாய எந்திரங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் சிறுக சிறுக விவசாயிகள் தாங்களாகவே அறுவடை செய்தபோதும், விவசாயப் பொருட்கள் கொண்டு செல்ல தடை இல்லை என்று அரசு அறிவிப்பு வெளியிட்டாலும் வாகன தணிக்கையில் காவல்துறை செய்யும் கெடுபிடி காரணமாக ஏற்படும் காலதாமதத்திற்கு அஞ்சி வியாபாரிகள் வருவதில்லை.

இதனால் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உற்பத்தி செய்த விவசாயிகள் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாத அவலநிலையே நிலவுகிறது. இதன் காரணமாக மல்லிகை, முல்லை, சாமந்தி உள்ளிட்ட மலர்ப்பயிர்கள் செடியிலேயே வாடி உதிர்கின்றன. மா, பலா, வாழை, தர்பூசணி உள்ளிட்ட பழவகைகள் அழுகத் தொடங்கி உள்ளள. அறுவடைக்குத் தயாராக இருந்த கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் கூலியாட்கள் கிடைக்காமல் பறவைகளால் சேதப்படுத்தப்படுகின்றன. பருத்தி உள்ளிட்ட பணப்பயிர்களும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்குத் தப்பவில்லை. மிளகாய், கடலை, உளுந்து உள்ளிட்ட விளைபொருட்களுக்குத் தற்போது நல்ல விலை கிடைத்தும் அவற்றை நகரங்களுக்கு எடுத்து செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கின்றன.

நெகிழி தடையால் அதிகமான வாழையிலை உற்பத்தி, தற்போது உணவகங்கள் மூடப்பட்டதன் காரணமாகப் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மலைப்பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், மிளகு, ஏலக்காய், உள்ளிட்டவற்றைப் பயிரிட்ட விவசாயிகளும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர். தேயிலை பறிக்க முடியாமல் காய்ந்து கொட்டுகிறது. நடவு உள்ளிட்ட விவசாயப் பணிகளைத் தொடங்கியிருந்த விவசாயிகள் போதுமான ஆட்கள் கிடைக்காமல் அவற்றைத் தொடர முடியாமலும், உரங்களைப் பெறமுடியாமலும் தவித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மோசமான சூழலை நாடு எதிர்கொள்ள நேரிடும். மேலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பும் உள்ளதால் விவசாய உற்பத்தி முடங்கியிருப்பது என்பது கடுமையான உணவுப் பஞ்சத்திற்கும், பட்டினி சாவிற்க்கும் வழிவகுத்துவிடும்.

• இதனைத் தவிர்க்க மத்திய மாநில அரசுகள், விவசாயப் பணிகள் செய்வதற்கும் , விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உள்ள நிபந்தனைகளை மேலும் தளர்த்த வேண்டும். விவசாயிகள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

• போதுமான அளவு விவசாய எந்திரங்கள், விவசாயக் கூலியாட்கள், உரங்கள் உள்ளிட்ட விவசாயம் தடைபடாமல் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு எடுக்க வேண்டும்.

• நெல், மலர் கொள்முதல் நிலையங்கள், காய்கறி, பழங்களுக்கான சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் அவை இருக்குமிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதியையும் அரசே ஏற்படுத்தித் தரவேண்டும்.

• பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடமளிக்காமல் இரண்டு ஆண்டிற்கு விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டும்.

• தற்போதைய சூழ்நிலையில் உற்பத்தி செலவையே மீளப்பெற முடியாத நிலை உள்ளதால் சிறு, குறு விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும்.

• விவசாயிகளுக்கு விதிக்கப்படும் விற்பனை வரியை ஓராண்டிற்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

• உயர்நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு இணங்க ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நட்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவியும், விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான கடனுதவியும் அளிக்க வேண்டும்.

• மாவட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாக்கவும்,

• அவற்றை விற்பனைசெய்யவும், பாதிப்பிலிருந்து மீண்டு விவசாயத்தை மீண்டும் தொடங்கிட தேவையான ஆலோசனைகளையும், வாய்ப்புகளையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.

எனவே மத்திய மாநில அரசுகள், இந்தக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு உடனடியாக விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்!
அடுத்த செய்திசுங்கச்சாவடிகள் செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்