அறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்சிக்கானப் பாசறை ‘வீரத்தமிழர் முன்னணி’யின் தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் முருகப் பெருந்தகையின் புகழ் போற்றும் திருமுருகப் பெருவிழா வருகின்ற 09-02-2020 ஞாயிற்றுக்கிழமையன்று முப்பாட்டனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சாமி மலையில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மிகச்சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. மாலை 4 மணியளவில், வீரத்தமிழர் முன்னணியின் கொடிப்பாடல் இசைக்க கொடியேற்ற நிகழ்வோடு திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் தொடங்கவிருக்கிறது. பறையிசை, கருப்புசாமி நாடகம்; மள்ளர் கம்பம், வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுவார்கள்.
பெருவிழா சிறப்புரை:
தமிழ்த்திரு மு.பெ.சத்தியவேல் முருகனார்
தமிழ்த்திரு ஆய்வர் மா.சோ.விக்டர்
தமிழ்த்திரு பால பிரசாபதி அடிகளார் (சாமிதோப்பு அய்யாவழி)
தமிழ்த்திரு இறைநெறி இமயவன்
தமிழ்த்திரு பொறியாளர் இரா.கோமகன்
பெருவிழா பேருரை:
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இப்பெருவிழாவிற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் வீரத்தமிழர் முன்னணி, இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், வணிகர், தகவல் சுற்றுச்சூழல், கையூட்டு-ஊழல் ஒழிப்பு, தொழில்நுட்பம், மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குடந்தையில் கூடுவோம்!
தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம்!
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி