‘ரஜினிகாந்த்தின் ஆளுமை அரைமணி நேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை’ –  சீமான் ஆவேசம் .

60

‘ரஜினிகாந்த்தின் ஆளுமை அரைமணி நேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை’ –  சீமான் ஆவேசம்.

2018-ம் ஆண்டு நடந்த, மதிமுக தொண்டர்கள் நாம் தமிழர் உறவுகளிடம் ஈடுபட்ட மோதல் தொடர்பான வழக்கில் நேர் நிற்றலுக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி நீதிமன்றத்திற்கு இன்று (13) வந்திருந்தார்.

குற்றவியல் நடுவர் எண் 6 நீதிமன்றத்தில் நேர்நின்ற பிறகு அவரிடம் நீதிபதி, “கடந்த 2018 மாதம் 19-ம்தேதி, திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கூடி கலவரங்களை உருவாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி, கொலைமிரட்டல் விடுத்ததாகவும் உங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே, உங்கள் தரப்பு வாதம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சீமான், ‘முழுக்க இது பொய் வழக்கு’ என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின்பால் பாக்கெட்டுகளில், திருக்குறள் அச்சடிக்கப்படும் என அறிவித்துள்ளார். அப்படிச் செய்வதால் எவ்விதப் பலனுமில்லை. பால்பாக்கெட்டுகளில் குறளைப் பதிப்பதால், அதை யாரும் படிக்க மாட்டார்கள். பாலை ஊற்றிவிட்டு கவரை எறிந்துவிடுவார்கள். ஆதலால், தமிழ் மறையாகப் போற்றவேண்டிய  திருக்குறளைப் பள்ளி பாடப் புத்தகங்கள் மூலம் கற்பதே சிறந்த வழி.

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், நடிகர் சிவாஜியின் நிலைதான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதை நான் ஏற்க மாட்டேன். அவர் சிவாஜியை சிறுமைப்படுத்தியிருக்கக்கூடாது. உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜி. அவருக்கு அரசியலில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. 100 படங்களுக்கு மேல் நடித்த பிறகுதான் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் மட்டும்தான் ஆளுமைமிக்க தலைவராக விளங்கினார். அதனால்தான் எம்.ஜி.ஆரால் வெற்றிபெற முடிந்தது.

ரஜினி, தன்மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச் சாயம் பூசமுடியாது எனச் சொன்ன அவரால், அதே நிலைப்பாட்டில் அரை மணி நேரம்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவரே பூசி மெழுகினார். அரை மணி நேரத்தில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். அவரால் உறுதியாக நிற்கமுடியவில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வயது மூப்பின் காரணமாக நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர் என்று கூறியதில் எனக்கு உடன்பாடு உண்டு.

அரசியலுக்கு வருவதற்கு நடிப்பு மட்டுமே தகுதியில்லை. இங்கு பல தலைவர்கள் உள்ளனர். நல்லகண்ணுவைத் தாண்டி, ஒரு தலைவர் இங்கில்லை. நாட்டைக் காக்கும் ராணுவ வீரன், ஓய்வு பெற்றால் வாயிற் காவலனாகிவிடுகிறான். ஆனால் நடிகன் ஓய்வு பெற்றால், நாடாளும் முதல்வனாகிவிடுகிறார் என்கிற கருத்து உள்ளது.

‘தனிமரம் தோப்பாகாது’ என்று சொல்வார்கள். நான் தனி மரம் கிடையாது. எங்களுக்கு 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தபோதுதான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். தன் கட்சியை மாற்றுக் கட்சியாக உருவாக்குவேன் என அறிவித்தார். அதற்கு அவரின் துணிவும் ஆளுமையும்தான் காரணம். விஜயகாந்த் பாராட்டுதலுக்குரியவர்.

ஆனால் ரஜினியோ, வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்திருந்தால் அவர் வந்திருக்க மாட்டார். 1996-ம் ஆண்டு கலைஞர் மூப்பனார் கொடுத்த நெருக்கடி காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி குரல்கொடுத்தார்” என்றார்.

நன்றி: விகடன் https://www.vikatan.com/news/politics/seeman-slams-rajini

முந்தைய செய்திசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு
அடுத்த செய்திமறைந்த திருவையாறு வழக்கறிஞர் சண்முகம் அவர்களின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்