தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு

234

செய்திக்குறிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

‘சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-09-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத் திருவுருவச் சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செய்தார்.

காணொளி: https://youtu.be/Eof3o6qJPDQ

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது,

“சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதை விட செத்து ஒழிவதே மேலானது என்ற அறிவுலக ஆசான் அண்ணல் அம்பேத்கரினுடைய புரட்சி மொழிகளுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பெருந்தகை. அண்ணல் அம்பேத்கருக்கே வழிகாட்டியாக வாழ்ந்த சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களினுடைய 74ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (18-09-2019). பிறப்பின் அடிப்படையில் மனித குலத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வர்ணாசிரம கோட்பாட்டை, சனாதன தர்மக் கோட்பாட்டைத் தகர்க்க போராடிய புரட்சியாளர்.

எந்தச் சொல் உன்னைப் பார்த்து இழிசொல்லாக சொல்லப்படுகிறதோ அந்தச் சொல்லை நீ எழுச்சி சொல்லாக மாற்றாதவரை உன் விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுநாளில் வழிவழியே வந்த மான-வீரத்தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள், சாதி-மத வேறுபாடுகளற்ற ஒரு சமநிலை சமூகம் படைக்க தொடர்ச்சியாக அவர் வழியில் நின்று போராடுவோம் என்ற உறுதியை ஏற்கிறோம்! இந்நாளில் அவருக்கு நாங்கள் புகழ் வணக்கம் செலுத்துவதில் பெருமையடைகிறோம்” என்று குறிப்பிட்டார்.

அண்ணல் அம்பேத்கர் போன்ற மற்ற சமூகநீதிப் போராளிகளைக் கொண்டாடுவது போன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரை சிறு சிறு அமைப்புகள் தவிர்த்து மற்றவர்கள் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை; தமிழக அரசு சார்பில் கூட இன்றைய நினைவுநாள் நிகழ்ச்சியில் யாரும் பங்கேற்கவில்லையே? இவ்வாறு புறக்கணிக்கப்படுவதன் பின்னணி என்ன? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இதுதான் தமிழர்களின் சாபக்கேடு! எங்கெங்கு தேசிய இனங்கள் ஒடுக்கப்பட்டு, அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறதோ, அதன் மீட்சிக்கும், உரிமைக்கும், விடுதலைக்கும் போராடிய ,அண்ணல் அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களைப் பெருமைக்குரிய வழிகாட்டிகளாக ஏற்கிறோம். ஆனால் எங்கள் மண்ணைச் சேர்ந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர், சிங்காரவேலர், சீவானந்தம், நல்லக்கண்ணு போன்றவர்களையே தலைவர்களாக ஏற்போம். இதைத் தான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடாக நாங்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்துகிறோம்.

அண்ணல் அம்பேத்கரை விட 32 வயது மூத்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். அம்பேத்கருக்கு திருக்குறள் பற்றியும் தமிழில் கையெழுத்து போடுவதற்கு சொல்லிகொடுத்தவர். ஆனால் அவரது வரலாறு இங்கு மறைக்கப்பட்டுள்ளது.  அண்ணல் அம்பேத்கருக்கு தமிழகத்தில் அதிகப்படியான சிலைகள் இருக்கிறது. ஆனால், எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு இவ்விடத்தைவிட்டால் வேறு சிலையில்லை. அதேபோல, பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் சிலை எங்கே இருக்கிறது என்று பலருக்கு தெரியாது! தமிழர் அடையாளங்களும், பெருமைகளும், தமிழ் முன்னோர்களும் திட்டமிட்டு மறைக்கப்படுவதுதான் இதற்குக் காரணம்.

சாதி ஒழிப்பு என்றாலே ஐயா பெரியாரைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் முன்பே போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரைக் குறிப்பிடுவதில்லை. அதனை மறைத்துவிட்டு பெரியார் மட்டும்தான் போராடியதாகச் சொல்வது பெரும் ஆபத்தானது. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தாங்களே கிளர்ந்தெழுந்து தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அதற்கான காலச்சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதை உணர்ந்த நாங்கள் மீளெழுச்சிக்கொண்டு தமிழர் அடையாளங்களை மீட்டு, மறுகட்டமைப்பு செய்துகொண்டிருக்கிறோம்”. என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “தமிழ்த்தேசிய அரசியல் என்பதே சாதி ஒழிப்புதான். தமிழர் என்கிற தேசிய இன உணர்வே சாதி, மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளும். சாதி, மத உணர்ச்சிகளைச் சாகடிக்கிறபோதுதான் தமிழன் என்கிற உணர்ச்சியே பிறக்கும். அதனைத்தான், புரட்சிப்பாவலர் பாரதிதாசன், ‘இடைவந்த சாதியெனும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய்! தாய்! தாயே!’ என்கிறார். பிறப்பின் வழி பேதம் கற்பித்து சாதிய ஏற்றத்தாழ்வை உருவாக்கும் இந்த வருணாசிரமக் கட்டமைப்பே 3,000 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அத்தகையக் கீழான சாதிய உணர்ச்சிகளை முதலில் கடந்தாக வேண்டியதிருக்கிறது. தமிழ் இளந்தலைமுறையினர் அதனை வேகமாகச் செய்துகொண்டு வருகிறார்கள். பாஜக அரசு சாதியினை ஒழிக்க முன்வராது. அது சாதியையும், மதத்தையும் தனது இரு கண்களெனக் கருதி அதுசார்ந்த அரசியலை வளர்த்துவிடும்.

‘மதம்கூட மாற முடியும். சாதி மாற முடியாது. ஆகவே, மதவாதத்தைவிடக் கொடியது சாதியவாதம்தான்’ என்கிறார் ஐயா பெரியார். மதவாதத்திற்கு எதிராக நிற்கிறோம் என்கிற திராவிடக் கட்சிகள் அதனைவிடக் கொடிய சாதியவாதத்தை ஒழிக்க என்ன செய்திருக்கிறது? எல்லா சாதியக் கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம்கொடுத்து, சாதியின் வேரின் வெந்நீரை ஊற்றாது தண்ணீர் ஊற்றி உரம்போட்டு அதனை வளர்த்ததே இத்திராவிடக் கட்சிகள். அவர்கள் சாதியைக் கணக்கிட்டுதான் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துகிறார்கள். ஆதித்தமிழ் குடிகளுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பே தருவதில்லை. எங்களைப் போன்ற பிள்ளைகள் வந்துதான் அதனைச் செய்கிறோம். பெரம்பலூர் தொகுதியில் அண்ணன் ஆ.ராசாவை நிறுத்த முடியவில்லையெனில் வேறு தொகுதியில் நிறுத்த வேண்டியதுதானே, எதற்காக நீலகிரி எனும் தனித்தொகுதிக்கு மாற்றுகிறார்கள்? எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் சேரியைவிட்டு பொது வீதிக்கு வரக்கூடாது என்பது போல, பொதுத்தொகுதியைத் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்கக்கூடாது என்று கருணாநிதி கூறியதை தம்பி வன்னியரசே ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பதிவுசெய்திருக்கிறார். சாதிய உணர்ச்சியை மேலோங்கவிட்டதே இந்தத் திராவிடக் கட்சிகள்தான். ஆனால், ஆணவக்கொலை நடக்கிறபோதெல்லாம், ‘தமிழர் என்று பேசியவர்கள் எங்கே?’ எனக் கேள்வியெழுப்புவார்கள். ஒரு பெருமையென்று வந்தால் திராவிடப் பூமி, பெரியார் மண்ணென்று பேசுவார்கள். ஒரு இழிசெயல் நிகழ்ந்துவிட்டால் அதற்குத் தமிழர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பார்கள். இது ஒரு கொடுமை.”

“இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழ் மொழியிலிருந்து அறியலாம் என்று பிரதமர் மோடி கூறியதை வரவேற்றிருக்கிறேன். அதனைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியும் பேசியிருக்கிறேன். ஆனால், அத்தகைய மொழிக்குப் பிரதமர் மோடி செய்த நன்மையென்ன? என்பதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. சின்னஞ்சிறு நாடு சிங்கப்பூர் தமிழை ஆட்சிமொழியாக்கி அங்கீகரிக்கிறது. உலகெங்கும் 130 நாடுகளில் பரவிவாழ்கிற தமிழர்களின் தாய்மொழி, உலகின் முதல் மொழி தமிழ். அத்தகைய மொழிக்கு இந்நாடு கொடுத்த மதிப்பென்ன? பெருமையென்ன? சிறிய நாடுகளில்கூட ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய நாடான இந்திய ஒன்றியத்தில் 22 மொழிகளையும் ஏன் ஆட்சி மொழியாக்கக் கூடாது? எனக் கேட்கிறோம். அதனைச் செய்யாது இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்  என்பதை எப்படி ஏற்க முடியும்? தமிழுக்கு உரிய அங்கீகாரத்தையும், மதிப்பையும் தராததின் விளைவாகத்தான் பிரதமர் மோடியை விமர்சிக்கிறோம். அதனால், எங்களை நன்றி மறந்தவர்கள் என அண்ணன் பொன்.இராதாகிருஷ்ணன் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றும் சீமான் கூறினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி