செய்திக்குறிப்பு: இறுதிக்கட்டப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
ஆகத்து 30 – பன்னாட்டு காணாமல் போனோர் நாளையொட்டி (International Day of the Disappeared) இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிப்பதற்காக, இன்று 30-08-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் (Madras Reporters Guild)ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்று சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை சிங்கள அரசு போரைக் காரணம் காட்டி இலங்கையின் முப்படைகளாலும் 20000 அதிகமான தமிழர்கள் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இறுதிப்போரில் சர்வதேச போர்விதிமுறைக்கு உட்பட்டு சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்களும் இதில் அடங்குவார்கள். இறுதிப்போர் முடிந்து பத்தாண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது.
இலங்கை அரசால் வலிந்து திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதனால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள், மகனை இழந்த தாய் போன்று பாதிக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியாகத் தாய்நிலத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் அமைதிப்பேரணியாகச் சென்று தங்கள் வேதனைகளை உணர்வுகளைப் பதிவு செய்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கண்டறிந்து தாருங்கள் என அறவழியில் போராடி வருகின்றனர்.
இந்த ஆண்டும், சர்வதேச காணாமல் போனார் நாளான (ஆகத்து 30) இன்று ஈழத் தாயகத்தில் நடைபெறவிருக்கும் எமது உறவுகளின் பேரணியை வெற்றிபெறவைக்கும் வாய்ப்பாகத் தாயகத் தமிழகத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆதரவளித்து எங்கள் கோரிக்கைகளை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எடுத்து வைக்கிறோம்.
2009 மே மாதத்தில் போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு காணாமலாக்கபட்டோர்களின் தாய்மார்கள், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது,அடுத்து நடக்கவிருக்கும் பாதுகாப்பு அவைக்கூட்டத்தில் ஆணையிடுவதாக அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியுள்ளார்.
இதனால் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதிலுள்ள நிலையற்றத் தன்மையாலும் அவர்களுக்கு முறையாக இறுதி அஞ்சலி செலுத்த முடியாமலும் அவர்களோடு தொடர்புடைய சொத்துரிமை உள்ளிட்ட சட்ட சிக்கல்களைத் தீர்க்க முடியாமலும்காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ந்து துன்பத்தில் உள்ளனர்.
மேலும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே தைப்பொங்கலை முன்னிட்டு வடக்கில் உள்ள யாழ் நகரத்திற்குச் சென்றிருந்தபோது, 2016 சனவரி 15இல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், “போரின்முடிவில் 2009 மே மாதத்தில் இலங்கை அரசப் படைகளிடம் சரணடைந்த அனைவரும் உயிரோடில்லை” என்று சொன்னார். இந்நாள் வரை, தன்னுடைய வாய்மொழியை ஒட்டி எழும், சரணடைந்தவர்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு?, அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், அவர்களுடைய இறந்த உடல்கள் எங்கே? இறந்த உடல்கள் உறவினர்களிடம் ஏன் ஒப்படைக்கப்படவில்லை? சரணடைந்த பொதுமக்கள், விடுதலைப் புலிகள் எதற்காகக் கொல்லப்படவேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் தர மறுக்கிறார்.
அப்படியானால் போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசப் படைகள் தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி போரின் முடிவில்தாமாக முன்வந்து தம்மை ஒப்படைத்துக் கொண்ட எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் நிலை என்ன? இலங்கை அரசாங்கம் ஏராளமான உறுதிமொழிகளை அளித்திருந்தும் அரசப்படையால் ஒருவரைக்கூட நீதியின் முன்பு நிறுத்தவில்லை என்றால் இது எவ்வளவு பெரிய பொய்யான வாக்குறுதி என்பதை உணரமுடிகின்றது.
இன்றுவரை தொடர்ந்துகொண்டு இருக்கும் வெள்ளை வேன் கடத்தல்களும் திடிரென வலுக்கட்டாயக் காணாமலடித்தல்களும் தமிழ்ச்சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலையின் திட்டமிடப்பட்ட கருவியாகக் கையாண்டுள்ளது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு அக்டோபரிலும் 2017ஆம் ஆண்டு மார்ச்சிலும் மனித உரிமை மன்றத்தில் “காணாமல் போனோர் அலுவலகம் அமைத்துள்ளோம், இது ஒரு சாதனை” என்று கூறியது ஏமாற்றுப் பேச்சே.
முன்வைக்கும் கோரிக்கைகள்:
1. காணாமற்போனோர் அலுவலகத்தில் சிங்களர்கள் மட்டுமே இருப்பது நியாமாகாது, ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு வல்லுநர்களைச் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான வேண்டுகோள் இலங்கை அரசால் மறுக்கப்பட்டன. எனவே பன்னாட்டு வல்லுநர்களைச் சேர்த்துக் கொள்ளும்படி சர்வதேச சமுதாயம் இலங்கை அரசுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
2. அரசாங்கத்தினால் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அடங்கிய பட்டியலை வெளியிடும்படி சர்வதேச சமுதாயம் இலங்கை அரசுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
3. அதேபோல், சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிப் படையினரின் பட்டியலை வெளியிடும் படி சர்வதேச சமுதாயம் இலங்கை அரசுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
4. போரின் இறுதி நாட்களில் தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி யாருடைய படையணியின் கீழாகச் சரணடைந்தார்களோ அவர்களின் நிலை பத்தாண்டுகளாகியும் எந்தத் தகவலும் வெளிவராத நிலையில் அவரையே நாட்டின் இராணுவத் தளபதியாக்கியிருப்பது என்பது இவ்விவகாரத்தில் மிகவும் மோசமான அணுகுமுறை. இனியும் எந்தத் தகவலும் நீதியும் கிடைக்கப்போவதில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
5. எனவே அதிகாரமற்ற அரசியல் இயக்கங்களாக இருந்து நாங்கள் முன்வைக்கும் இந்தக் கோரிக்கைகளையெல்லாம் அதிகாரத்திலிருக்கும்தமிழக அரசு இந்தியப் பேரரசுக்கும் அதன் மூலமாகப் பன்னாட்டுச் சமூகத்திற்கும் இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கைக்கும் கோரிக்கைகளாக முன்வைத்து அழுத்தம் கொடுத்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்குமாறு வலியுறுத்த வேண்டும். அப்படிச் சரணடைந்தவர்கள் உயிரோடு இருந்தால் அவர்களை உரிய உறவுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் இச்சந்திப்பின் வாயிலாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வது தமிழக அரசு மற்றும் இந்திய அரசு மற்றும் பன்னாட்டுச் சமூகத்தின் கடமையாகும்.
இன்று (ஆகத்து 30) ஈழத் தாயகத்தில் பிள்ளைகளை இழந்த எமது தாய்மார்களும் குடும்ப உறவுகளை இழந்த எமது உறவுகளும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய பேரணியை நடத்தி மேற்கண்ட கோரிக்கைகளைப் பன்னாட்டுச் சமூகத்திற்கு முன் வைக்க இருக்கிறார்கள்.அப்பேரணி வெற்றிபெற நாங்கள் வாழ்த்துகிறோம்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084