சுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு
‘மரம் மண்ணின் வரம்! அதை வளர்ப்பதே மனித அறம்!’ எனும் கூற்றுக்கிணங்க, மண்ணுக்கும் மாக்களுக்குமான அரசியல் செய்து வரும் நமது கட்சி கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியிட்ட ‘நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில்’ கொடுத்திருக்கிற ‘பல கோடி பனைத் திட்டத்தின்’ முன்னோட்டமாக, கடந்தாண்டு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட பனை திருவிழாவின் போது ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிட்டு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பனை விதைகளை தமிழகமெங்கும் உள்ள நீர்நிலைகளின் கரைகள், சாலைகள், தரிசு நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள் முதலானவற்றில் விதைக்கப்பட்டது. இதில் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் மிகுந்த ஆர்வமுடன் சிறு சிறு குழுக்களாக ஒருங்கிணைந்து செயலாற்றினர்.
கடந்தாண்டு நாம் விதைத்த பல ஆயிரக்கணக்கான பனை விதைகள் நன்றாக முளைத்து வளரத் தொடங்கியிருப்பது நமது வெற்றியைப் பறைச்சாற்றுகிறது. அதே புத்துணர்ச்சியுடன் அத்திட்டத்தின் நீட்சியாக இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, வருகின்ற செப்டம்பர் 8 (ஆவணி 22), ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனை திருவிழா முன்னெடுக்கப்படவிருக்கிறது.
தற்போது பனை விதை சேகரிப்பிற்கேற்ற காலச்சூழல் நிலவுவதால் தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்கள் தகுந்த வகையில் திட்டமிடல் செய்து இப்பொழுதிலிருந்தே பனை விதைகள் சேகரிப்பினைத் தொடங்க வேண்டும். இவ்வாண்டின் பனை விதை நடவு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி பனை போல் உயர்ந்து நிற்க வேண்டுமாயின் மிக அதிகளவில் விதை சேகரிப்பில் உறவுகள் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:
வஜ்ரவேல்: +91-8940616969
விஜயராகவன்: +91-8939818797
வெண்ணிலா: +91-9884323380
சுனந்தா: +91-9910385001
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி