பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை

673

செய்திக்குறிப்பு: பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை | நாம் தமிழர் கட்சி

பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் அவர்களை, கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் காவல் துறையினரால் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வழக்கறிஞர் அருளுக்கு நிபந்தனை பிணை கிடைத்தது.

ஆனால் போலியான தகவல் வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொய்யாகப் புனையப்பட்ட 2-வது வழக்கு தொடர்பாக, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் 2-வது வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அருளுக்கு பிணை கேட்டு, பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை 09-05-2019 அன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அருளுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார். பிணை கிடைத்ததால் வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே எடுப்பாத்ற்கான நடவடிக்கையில் கட்சி வழக்கறிஞர் குழுவினர் ஈடுபட்டனர்

இதற்கிடையே பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததற்கு போலியான ஆதாரங்களை வெளியிட்டதாகவும் அதனால், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மனதில் பரபரப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்தியதாக வ அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தா, வழக்கறிஞர் அருளை ‘குண்டர்’ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியில் எண்ணற்றப் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய கோரநிகழ்வு வெளிச்சத்திற்கு வந்து அதற்கான நீதியையே இன்னும் பெறாத சூழ்நிலையில் தற்போது பெரம்பலூரிலும் அதேபோல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது தொடர்பாக வழக்கறிஞர் அருள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும், சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கியும் பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குச் சாதகமாக தமிழகக் காவல்துறை நடந்து கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராவணன், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேசுகுமார் மற்றும் வழக்கறிஞர் திருச்சி பிரபு ஆகியோர் இன்று 11-05-2019 காலை திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அருள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வழக்கின் விவரங்கள் குறித்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.

பின்னர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பேரி கிராமத்தில் உள்ள வழக்கறிஞர் அருள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உறவினர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர். வழக்கறிஞர் அருளை விரைவில் சட்டப்போராட்டத்தின் வாயிலாக விடுதலையடைவார் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஆறுதல் கூறப்பட்டது உடன் அரியலூர் மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், பெரம்பலூர் மாவட்ட அவைத் தலைவர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்..


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 )
அடுத்த செய்திஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான்  பரப்புரை