கத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள்

117

கத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள் | நாம் தமிழர் கட்சி

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவப் பெரும்பாட்டனால் போற்றப்பட்ட உழவர்களின் சிறப்பை நினைவில் நிறுத்தி, அவர்தம் உன்னத உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, தமிழ்க்குடும்பங்கள் சாதி, மதம் தவிர்த்து இனமாய் ஒன்று கூடி களிப்புறும் பண்பாட்டு விழாவை, பிழைக்க வழித் தேடி புலம்பெயர்ந்து வந்திருப்பினும் ஆண்டு தோறும் “செந்தமிழர் பாசறை-கத்தார்” மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது, அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழர்களை ஒன்றுக் கூட்டும் முயற்சியிலும், நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலும் கடந்த 11-01-2019 வெள்ளிக்கிழமையன்று ‘கிராண்ட் மால் ஏசியன் டவுண்’ உள்ளரங்கில் மிக கோலாகலமான வகையில் நடத்தப்பட்டது.

தாயகத்தில் விழாக்காலங்களில் ஒன்றுக் கூடி இருக்கும் சொந்தங்களின் உணர்வை தந்த இந்தச் சிறப்பான நிகழ்வில் ஆண்கள் , பெண்கள் குழந்தைகள் என குடும்பமாக ஏறத்தாழ 1000 பேர் பங்கேற்ற தைத்திருநாள் விழா காலை 9.30 மணிக்கு விளையாட்டுப் போட்டிகளுடன் துவங்கி மாலை 7 மணி வரை கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர் மருத்துவர் ஐயா திரு. கு.சிவராமன் அவர்கள் சிறப்புரையுடன் இனிதே நடைபெற்றது

நம் பாரம்பரியத்தை காக்கும் வகையில் அமைந்த இந்த போட்டியில் குறிப்பாக உறியடி , கயிறு இழுத்தல்,கோலப்போட்டி , மிதிவண்டி போன்ற போட்டிகளில் பெண்கள், இல்லத்தரசிகள் , ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மட்டும் ஏறக்குறைய 53 குழந்தைகள் கலந்துகொண்டது மன நிறைவு தந்தது மட்டுமல்லாது, 2.5 வயதே ஆன தியா தன் மழலை மாறாத குரலில் , இரண்டு நிமிடங்களில் 18 குறள்களை சொன்னவிதம் அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.

விளையாட்டு போட்டிகள் நடைபெறும்போதே எங்கள் சகோதரிகள் பாண்டிச்செல்வி முத்துக்குமார், சுகன்யா செந்தில்,மெர்சி ராஜேஷ், எட்வீனா விஜயகுமார் கூட்டாக ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து இயற்கை இறைவன் கதிரவனுக்கும், உழவர்களுக்கும் நன்றிகளையும், வணக்கங்களையும் செலுத்தினர்.

பின்னர் உச்சி வேளை, வாழை இலையில் கருப்பட்டி பொங்கலுடன் சேர்ந்த தைத்திருநாள் உணவு மிகசிறந்த முறையில் பரிமாறப்பட்டு உள்ளரங்கு கலைநிகழ்ச்சிகள் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கப்பட்டது .

முதல் நிகழ்வாக பாவேந்தரின் “தமிழுக்கு அமுதென்று பேர்” தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை செந்தமிழர் பாசறையின் இளம் தலைமுறை குழந்தைகள் பாடி வணங்கி விழாவை ஆரம்பித்தனர்.

செந்தமிழர் பாசறையின் ஊடகத் துறை பொறுப்பாளர் சகோதரர் திரு. விஜய் அவர்களின் திரள் பறை இசை குழுவினரின் பறையாட்டம், சகோதரர் திரு. பிரபு மதிவாணன் அவர்களின் நாகம் 16 சிலம்பாட்டப் பள்ளியின் பழந்தமிழர் வீரவிளையாட்டான சிலம்பு, சுருள் மற்றும் தற்காப்பு கலை நிகழ்வுகள், குழந்தைகள் பாடிய மக்கள் இசை பாடல் மற்றும் நடனம், தங்கை குமாரி திவ்யாவின் சதிராட்டம் என்ற பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பண்டையத் தமிழக கிராமத்து சூழலுக்கே அழைத்துச் சென்ற பரவசத்தை ஏற்படுத்தியது.

பண்டையத் தமிழரின் பெருமையையும்,தைத்திருநாளின் மேன்மையையும் விளக்கி, பார் ஆண்ட இனத்தின் இன்றைய பஞ்ச நிலையைப் போக்க இனமாய்க் கூடி இலக்கை அடைய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார் பொறுப்பாளர் சகோதரர் திரு. சபரி ஐயப்பன்.
மேலும் கத்தாரில் முதல், முதலாக செந்தமிழர் பாசறை கலை, பண்பாட்டுத் துறை சார்பாக சேரன் செங்குட்டுவனின் வீரத்தைப் போற்றும் “இமயம் வென்ற வேந்தன்” என்ற வரலாற்று நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நையாண்டி செய்து இன்றைய அரசியலை புரியவைத்து, எதிர்கால தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியத்தை உணரவைத்த நையப்புடை கிட்டு அவர்களின் நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் மணம் சேர்த்தது.

இவ்விழாவின் சிகரமாக, தமிழனின் உணவிற்கும் அமுதென்று பேர் என தமிழனின் பாரம்பரிய சிறுதானியங்கள், மரபு உணவுகள், விவசாயிகளின் உயர்வு, ஈகம், மதிப்பு மற்றும் அவர்களை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்று தமிழரின் உணவுச் சிறப்பையும், உழவர்களின் மதிப்பைப் பற்றியும் சிந்திக்க வைத்த மருத்துவர் ஐயா திரு. கு. சிவராமன். அவர்களது சிறப்புரை தைத்திருநாள் தமிழர் திருவிழாவிற்கு மெருகேற்றியது.

விளையாட்டில் வெற்றி பெற்ற அனவருக்கும் அனுசரணையாளர்களான ‘அல்டிமேட்’- திரு சக்திவேல் மகாலிங்கம், ’ரீடால் கத்தார்’- திரு வலுக்குவேலி சிதம்பரம், ‘கத்தார் டிசைன் கன்சார்டியம்’-திரு சீனிவாசன், ‘அபோச்சி’- திரு மகாதேவன், ‘பெனாயா, நிறுவனத்தின் உரிமையாளர்கள் பரிசளித்து சிறப்பித்தனர்.

இப்பெருமைமிகு விழாவில் தமிழ் ஆசிரிய,ஆசிரியைகள்,பள்ளிக் குழந்தைகள் பல்வேறு சமூக சூழலில் உள்ள தமிழர்கள் குடும்பத்தோடு வந்து காலை முதல் மாலை வரை நடந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்திருந்த காட்சி மனதில் என்றும் நீங்கா நினைவுகளாய் அமைந்தது. அனுமதி இலவசம் என்று அறிவித்திருந்த போதிலும் நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட பலர் தங்களால் இயன்ற சிறு தொகையினை அன்பளிப்பாக கொடுக்க முன்வந்தது, இந்நகழ்வின் வெற்றித் தாக்கத்தை பறைசாற்றியது.

மாக்கோலம்மிட்டு, மண்பானை பொங்கல் வைத்து, மங்கள விளக்கேற்றி மழலையர் குரலில் பாவேந்தர் தமிழ்த் தாய் வாழ்த்திசைத்து , பறை இசைத்து, சிலம்பாடி, சேர, சோழ, பாண்டியர்களின் வீரம் போற்றி, செந்தமிழர் இனம் கூடி, செந்தமிழின் புகழ் பாடி, பிறந்து பதினொரு நாட்களே ஆன குழந்தையைத் தூக்கிக்கொண்டு குளிரென்றும் பாராமல் வந்து இவ்விழாவில் கலந்துக் கொண்ட இசுலாமிய சகோதரியின் பிஞ்சு மழலைக்கு செந்தமிழர் பாசறையின் முதல் சான்றிதழை பெருமையுடன் அளித்து செம்மையாய் நிறைவுற்றது “செந்தமிழர் பாசறை சொந்தங்களின் “தைத்திருநாள் தமிழர்த் திருவிழா”