அமீரகத் தலைநகர் அபுதாபியில் 7ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா

423

அமீரகத் தலைநகர் அபுதாபியில் 7 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா | செந்தமிழர் பாசறை | நாம் தமிழர் கட்சி

கடல்தேசமாம் அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் தைத்திங்கள் நான்காம் நாள் (18-01-2019)  வெள்ளிக்கிழமை, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவையொட்டி அமீரக செந்தமிழர் பாசறை உடன் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் உழவர் பாசறை ஒன்றிணைந்து தமிழர் கலை, பண்பாடு மற்றும் மெய்யியலைப் போற்றும் முறையில் அபுதாபியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கலிபா பொழுதுபோக்கு பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் இனமான தமிழ் உறவுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  தங்கள் குடும்பத்துடன் பாரம்பரிய உடைகளில் வருகை புரிந்து விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவில்  தமிழர்களின் பண்பாடு, கலை, இசை, விளையாட்டு என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நல்ல சிந்தனைகளைத் தூண்டும் புதிய புத்தகங்களை வெளியிட்டு சிறந்ததொரு தமிழர் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

தாயகத்திலிருந்து நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.அன்பு தென்னரசு  மற்றும் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர்  திரு.கனக மணிகண்டன் ஆகிய இருவரும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு பாதுகாத்த ஐயா திரு.நெல் ஜெயராமன் அவர்களின் நினைவைப் போற்றி இயற்கை இறையான சூரியனை வழிபட்டு அமீரக மகளிர் பாசறையினர் தமிழர் பண்பாட்டு முறையில் பொங்கல் வைத்து குலவையிட்டு பொங்கல் பாடல்கள் பாடி நிகழ்வை தொடங்கிவைத்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு பொங்கலுடன் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வீரத்தமிழர் முன்னணி உறவுகள் சார்பாக பறை இசை மற்றும் தமிழர் வீர விளையாட்டான சிலம்ப வரிசைகளை விளையாடி உற்சாகமூட்டினார்கள். அதன் தொடர்ச்சியாக சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

முதலாவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அரசியல் எழுச்சியுரைகளைத் தொகுத்து மாநில செய்திப்பிரிவு செயலாளர் சே பாக்கியராசன் அவர்கள் உருவாக்கிய “தமிழர் இறையாண்மை அரசியல் – முதல் பாகம்” மற்றும் உரத்தூர்.மு.நாகேந்திரன் எண்ணமாக “வெத நெல்லத் தொலச்ச வயக்காடு” என்ற இரு புத்தகங்களையும் திரு.அன்பு தென்னரசு அவர்கள் வெளியிட அமீரக மகளிர் பாசறை பொறுப்பாளர் திருமதி.கவிதா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்ததாக, பேராசிரியர் ஆ.அருளினியன் எழுதிய “சீமான் என்னும் ஆளுமை” மற்றும் இரா.த.கண்ணதாசன் படைப்பாக “குருதி குடிக்கும் போதி மரங்கள்” என்ற இரு புத்தகங்களையும் திரு.கனக மணிகண்டன் அவர்கள், வெளியிட அமீரக மகளிர் பாசறை இணைப்பொறுப்பாளர் திருமதி.ஜெனிபர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

அமீரக ஒருங்கிணைப்பாளர் திரு.திருமாறன் அவர்கள் திருவிழா வாழ்த்துரை வழங்கி, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உரையாற்றினார்.

முதலில் பேசிய திரு.அன்பு தென்னரசு அவர்கள், தமிழ் மொழியின் தொன்மை, தமிழர்களின் பண்பாட்டு முறைகள், நமது அடுத்த தலைமுறைக்கு நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் அதற்கு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் இந்த பொங்கல் விழாவை முன்னெடுத்த மற்றும் கபங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறி தனது உரையை எளிமையாகவும் இனிமையாகவும் நிறைவு செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து திரு.கனக மணிகண்டன் அவர்கள் பேசும் போது குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர்களின் கடமைகள் மற்றும் தமிழர் விழாக்களின் நோக்கம், நமது பண்பாடு, வீரம் இவைகளை மறந்து அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தை எப்படி மீட்க வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்ட ‘தமிழர் இன எழுச்சி முழக்கம்’ பாடல்களை அனைவரும் கேட்க வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் குழந்தைகளுக்கும் பாடல்களை கற்றுக் கொடுத்து இது போன்ற நிகழ்வுகளில் பாடலாக பாட வேண்டி கோரிக்கை வைத்து, கடல் கடந்து வந்தாலும் நமது பண்பாடு மாறாமல் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை எழுச்சியும் புரட்சியுமாய் கொண்டாடும் செந்தமிழர் பாசறைக்கு நன்றி கூறி அமர்ந்தார்.

அதன்பின் சிறியவர், பெரியவர் என அனைவருக்கும் பல்வேறு விதமான தனித்திறமை போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் சிறுவர்கள்,மகளிர் என அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். மகளிர் மற்றும் ஆடவர் என தனித்தனியாக கும்மியடித்தல் நிகழ்வு நடைபெற்றது, அப்போது கும்மி பாடல் பாடி உற்சாகப்படுத்தினார் சிறப்பு அழைப்பாளர் திரு.கனக மணிகண்டன் அவர்கள், இனிதே கும்மியடித்தல் நிறைவு பெற்ற வேளையில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மிகவும் நேர்த்தியாக வரிசையில் நின்று உணவுகளை பெற்று கூட்டமாக அமர்ந்து உண்ட பின் அந்த இடத்தை தூய்மையாக ஒரு பொருளையும் கீழே போடாமல் மிகவும் கண்ணியத்துடனும், தமிழர் பண்பாட்டோடு நடந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கியது. அதில் கயிறு இழுத்தல், தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உறியடித்து பானை உடைத்தல், தனித்திறமை செயல்பாடான கவிதை சொல்லுதல், பாட்டு பாடுதல் என பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது.

இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. அமீரக செந்தமிழர் பாசறை சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நன்றியும்  தைப்பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து தமிழர் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

முந்தைய செய்திதைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!  – சீமான் வலியுறுத்தல்