ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு

78

கட்சி செய்திகள்: ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா பெரியார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 24-12-2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர்.

செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

சாதியை ஒழித்து சமநிலை சமூகத்தைப் படைக்கிற களத்திலும், பெண்ணிய உரிமைப் போராட்டக் களத்திலும் அரும்பாடாற்றிய ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று. மானமும் அறிவும் ஒவ்வொரு மனிதருக்கும் அழகு என்று போதித்தவர். அரசியலில் சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம் என்று கற்பித்து; அவ்வாறே தன்னுடைய இறுதிமூச்சு வரை அயராது இந்நிலத்தில் அரும்பாடாற்றியவர். அந்த மதிப்புமிக்க பெருந்தகைக்கு நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடு புகழ்வணக்கத்தைச் செலுத்துகிறது. நாம் தமிழர் கட்சியானது மாமேதை மார்க்ஸ், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், ஐயா பெரியார் போன்ற பெருந்தகைகளை தங்களின் பெருமைமிக்க முன்னத்தி ஏராக, வழிகாட்டியாக ஏற்று வழிநடந்து செல்கிறது. அந்த வகையில் ஐயா பெரியார் அவர்களுக்கு பெருமையோடு புகழ் வணக்கத்தை செலுத்துவதில் மகிழ்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084