சுற்றறிக்கை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது – அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக

49

சுற்றறிக்கை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது – அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

இன்று 18-07-2018 காலை 11 மணியளவில் சேலம் மாவட்டம் பாரப்பட்டி ஊராட்சியில் கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் விவசாயிகளைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது அங்குவந்த காவல்துறையினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து மல்லூர் பேரூராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். பின்னர் சீமான் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்காக, மக்களின் நலனிற்காக தொடர்ந்து போராடி வருகிற நாம் தமிழர் கட்சியினர், கடினமான இச்சூழலில் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு நடந்துக் கொள்ளவேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றார். இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தேவையற்ற வீண்பதிவுகளை தவிர்க்க வேண்டும் எனவும், கட்சிப்பணிகளை எவ்வித தடங்கலுமின்றி, தொடர்ச்சியாக நமது உறவுகள் செய்து வர வேண்டும் எனவும் அண்ணன் சீமான் அவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றார்.

அண்ணன் சீமான் சிறைபடுத்தப்பட்டதைக் கண்டித்து நடைபெறுகிற போராட்டங்கள் அனைத்தும் சனநாயக முறையில், அறவழியில், சட்டத்திற்குட்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம், முறையாக அனுமதிப் பெற்று தொகுதியளவில் 234 தொகுதியிலும் பெருந்திரள் போராட்டமாக நடத்தவேண்டும் என்றும், தனித்தனியாக சிறு சிறு போராட்டங்களாக நகர, ஒன்றிய கிளைப்பகுதி சார்பாக நடத்தக் கூடாது என்றும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

எவ்விதமான வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மிகுந்த கண்ணியத்துடன் முறையான அனுமதியோடும், நமது வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் ஆலோசனையோடும் போராட்டங்கள் அனைத்தும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மட்டும் பெருந்திரள் போராட்டங்களாக நடத்தப்பட வேண்டும் எனவும், போராட்டங்களில் சேலம் 8 வழி சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் பேச்சாளர்களின் உரைகள், முழக்கங்கள் மிக நேர்த்தியாகவும், கண்ணியத்துடனும் அமைந்திட வேண்டும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

தலைமையின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக எவரும் போராட்டங்களை முன்னெடுக்க கூடாது எனவும், கடினமான இக்காலக்கட்டத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மிகுந்த பொறுமையுடனும், உணர்ச்சிவயப்படாமல் கவனத்தோடும் நடந்துக் கொள்ளவேண்டும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

செய்திப்பிரிவு,
நாம் தமிழர் கட்சி
பேச: 9688888836/9600709263