அமித் ஷா வருகை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது! – சீமான்

13

மதுரையில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வில் தமிழ் கேள்வித்தாள் குளறுபடிகளினால் 49 கேள்விகளுக்குத் தலா 4 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை வரவேற்கிறேன். மத்திய அரசு பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு போன்ற பொதுத் தேர்வுகளில் வினாக்கள் கேட்பது, அந்தப் பாடத்திட்டத்தில் கல்வி பயில பிற மொழி மாணவர்களை இழுப்பது திட்டமிட்ட சதி. இதனால் எங்கள் தமிழ் வரலாறு அழியும் என நினைக்கிறார்கள். எங்களது வேலுநாச்சியார் பற்றி படிப்பதைவிட்டு ஜான்சிராணிப் பற்றிப் படிக்கச் சொல்கிறார்கள். வ.உ.சி.யைப் பற்றி படிப்பதை விட்டு வல்லபாய் படேல் பற்றி படிக்கச் சொல்ல முயல்கிறார்கள். இங்கே தமிழக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தமிழக வரலாற்றுத் தலைவர்களின் பாடங்களை நீக்குவது வேதனைக்குரியது.

அமித் ஷா வருகை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இல்லாத 5 சதவிகித வாக்கு வங்கி, இருப்பதாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள். திரிபுராவில் 2 சதவிகித வாக்கு வங்கி இருந்த பி.ஜே.பி 42 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்தார்களே எப்படி? வாக்கு இயந்திர தில்லு முல்லு. பொதுவாக குஜராத், உத்தரப்பிரதேசம் என எந்த மாநிலமாக இருந்தாலும் இடைத்தேர்தலில் தோற்பார்கள். அதுதான் பி.ஜே.பி.யின் உண்மையான நிலைப்பாடு. ஆனால், பொதுத்தேர்தலில் வாக்கு இயந்திர தில்லு முல்லுவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்சி அமைத்து விடுவார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்கைவிட கீழேப் போனார்கள். அதுதான் தமிழகத்தில் பி.ஜே.பி நிலை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஆளாளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். உண்மையில் டெல்லியைத் தவிர மற்ற இடங்களில் எய்ம்ஸ் அறிவிப்போடு இருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தாலும், வட இந்திய மருத்துவர்கள் எங்களது தாய், தகப்பன்களுக்கு மொழி தெரியாத மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிப்பார்கள்? எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்த பிறகு, எய்ம்ஸ் வேண்டாம் எனப் போராடப் போவது நாங்களாகத்தான் இருக்கும்” என்றார்.

நன்றி விகடன்: https://www.vikatan.com/news/tamilnadu/130481-seeman-press-meet-press-in-madurai.html