அறிவிப்பு: சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு

26

அறிவிப்பு: காடு, மலை, வேளாண் நிலங்களை அழித்து சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு

சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். சேலத்திலிருந்து அரூர், செங்கம், திருவண்ணாமலை வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதிய 8 வழி சாலை அமைப்பதற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள் கூறுகையில், “எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத் தொழில் தான் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனைக் கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை. எனவே இதைக் கைவிட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதிய 8 வழி சாலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சூழலியல் செயற்பாட்டாளர் பியுஸ் மனுஸ் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 12-05-2018 சனிக்கிழமை மாலை 04 மணிக்கு சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்.

அதனைத் தொடர்ந்து மாலை 06 மணியளவில் சேலம் விமான நிலையம் முன்பு சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக 570 ஏக்கர் வேளாண் நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இதில் சீமான் மற்றும் பியுஸ் மனுஸ் ஆகியோர் கண்டனவுரையாற்றுகிறார்கள்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சி உறவுகளும் சூழலியல் செயற்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பை வலிமையாக முன்வைப்போம்.

வளர்ச்சி என்னும் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளைப் போவதைத் தடுப்போம்!
அடுத்தத் தலைமுறைக்கு இப்புவியை வாழ்வதற்கு உகந்த இடமாக விட்டுச் செல்வோம்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி