காவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை

61

அறிவிப்பு: காவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை | நாம் தமிழர் கட்சி

கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர். அப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாகச் சீமான், பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்ற 780 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அடைத்துவைக்கப்பட்டனர். நள்ளிரவு 01:30 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் சீமான் மீது கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குகளும் பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்று கைதான 780 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று விளையாட்டுத் திடலினுள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு உள்ளிட்ட பலர் பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே சீமான் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கில் அவரைக் கைது செய்யக் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. “சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாரேனும் 10 பேரை மட்டும் சிறைப்படுத்தவேண்டும், மற்றவர்களை விடுவிக்கிறோம்” என்று காவல் அதிகாரிகள் கூறினார்கள். மணியரசன், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் வெளியேற மறுத்து, சீமானை கைது செய்யவிடாமல் “எங்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்புங்கள்!” என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் வேறு இடத்தில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பாகப் பங்கேற்ற இயக்குநர்கள் அமீர், கௌதமன், வெற்றிமாறன், ராம் போன்றோரும் சீமானை விடுவிக்கக்கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரவு 09 மணியளவில் சீமான் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தனர்.

முன்னதாகச் சீமான், மணியரசன், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு உள்ளிட்டோர் மாலை 06 மணிக்குமேலாகவும் விடுவிக்கப்படாமல் இருந்த செய்தியறிந்து அங்கு வந்து முழக்கங்கள் எழுப்பிய மனிதநேய சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டது.

சீமான் கைதுக்கு எதிர்ப்பு – கைது செய்யப்பட்டவர்கள் விவரம் (12-04-2018):

1. மன்சூர்அலிகான்
2. வீரபாண்டியன்
3. சரவணன்
4. ரூபன்
5. ஆகாஷ்
6. பாபுராசன்
7. ரங்கசாமி
8. சீனிவாசன்
9. அருண்கண்ணன்
10. முரளி
11. பொன்குமார்

மேலும் மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆருண் உட்பட 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு அயராது பாடுபட்டுவருகின்றது. இதன் பயனாக பல்லாவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில் இன்று (24-04-2018) செங்கல்பட்டு நீதிமன்றம் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 18 பேரும் விரைவில் விடுதலையாகிறார்கள்.

அன்னைக் காவிரிக்காகப் போராடி சிறைச்சென்ற அனைவரையும் வரவேற்க புழல் சிறைவாயிலில் கூடுவோம். நாள் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை
அடுத்த செய்திஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்! காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்